அகதிகளுக்கு கெட் அவுட்! - ட்ரம்பிஸ்தான் அதிகாரம் ஒன்று!


அகதிகளே வெளியேறுங்கள்! - அமெரிக்காவின் மூர்க்கமான அதிரடி ரூல்ஸ்! - ச.அன்பரசு




Image result for trump caricature



உங்கள் குழந்தைகளுக்கான பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறீர்கள். கடையில் நிற்கும்போது குடியேற்ற அதிகாரிகள் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி நீங்கள் தப்பித்து வந்த உங்கள் நாட்டிற்கே அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும்? அமெரிக்காவிலுள்ள 1.1 கோடி மக்களுக்கு அடுத்த நேரப்போகும் விபரீதம் இதுதான்.

Image result for trump caricature




மெக்சிகோவைச் சேர்ந்த அலெஜாண்ட்ரோ அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் பேக்கர்ஸ்ஃபீல்டில் வசித்து வந்தார். வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பியவர் வீட்டின் காலிங்பெல்லைக் கூட அழுத்தவில்லை; சாலையில் நிறுத்திய காரிலிருந்து அதிவேகமாக இறங்கிய குடியேற்ற அதிகாரிகள் அலஜாண்ட்ரோவை சட்டவிரோத குடியேற்றத்திற்காக அரஸ்ட் செய்து மெக்சிகோவிற்கு உடனே நாடுகடத்திவிட்டார்கள். இனி அவர் அமெரிக்காவிற்கு திரும்பிவர,அவரது இரண்டரை வயது மகள்களுக்கு 21 வயது பூர்த்தியாகவேண்டும். மரியா தன் மேஜரான மகள் மூலம் அப்ளை செய்தால் 2036 ஆம் ஆண்டில் கணவர் அலெஜாண்ட்ரோவைச் சந்திக்கலாம் எனும்படி ரூல்ஸை கரடுமுரடாக இறுக்கியுள்ளது அமெரிக்கா.

முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் குற்றச்செயல்களிலும், சட்டவிரோதமாக எல்லை தாண்டிய மக்களையும் நாடுகடத்திய பணி, ட்ரம்பின் ஆட்சியில் அதிதீவிரமாகியுள்ளது. "முறையான அனுமதி ஆவணங்கள் இல்லையென்றால் நீங்கள் வெளியேறியே ஆகவேண்டும்" என்கிறார் குடியேற்ற இயக்குநரான தாமஸ் ஹோமன். 2016 ஆம் ஆண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ள அகதிகளின் எண்ணிக்கையைப் போலவே அவர்களை கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கையும் முன்பைவிட 4ஜி வேகம் கொண்டிருக்கின்றன. "அமெரிக்க குடிமகள்களாக பதிவு செய்யப்பட்டுவிட்ட தம் குழந்தைகளிடமிருந்து ஆவணங்களில்லாத பெற்றோர் பிரிக்கப்படும் பயமும், பீதியும் இங்கு தொற்றுநோய்போல பரவி வருகிறது" என்கிறார் டெக்ஸாஸ் பல்கலையின் சமூகப்பணி பேராசிரியரான லூயிஸ் ஸயாஸ்.

அலஜாண்ட்ரோ கைதான விஷயம் ஃபேஸ்புக்கின் வழியாக அவரின் உறவுகளுக்கும் தெரியவர குடியேற்ற அதிகாரிகளின் ரெய்டுக்கு பயந்து பலரும் வீட்டுக்குள்ளே முடங்கி வாழும் அவலம் நேர்ந்திருக்கிறது. பள்ளியில் மாணவர்களுக்கு நேரும் மன அழுத்தம் வேறுவிதம். பள்ளியின் உணவு மற்றும் உதவித்தொகைக்கான பட்டியலில் கூட அகதி மாணவர்கள் இணைவதற்கு பெயர் தருவதில்லை. டேட்டாபேஸில் பதிவாகும் பெயர் மூலம் பெற்றோரை அமெரிக்க அரசு கைது செய்துவிடும் என்ற பயம்தான் காரணம்.

அமெரிக்க அரசிடமிருந்து பெற்றோர்களை காப்பாற்ற வழியில்லை; ஆனால் குழந்தைகளைக் காப்பாற்றலாம் விதி 3 இன் மூலம். நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும்போது குழந்தைகளுக்கு கார்டியனாக உறவு அல்லது நண்பர்களில் ஒருவரை நியமிக்கலாம் என்பதே ட்ரம்ப் அரசு அகதிகளுக்கு காட்டும் உச்சபட்ச கருணை. 2015 ஆம் ஆண்டில் பெற்றோர்கள் பலர் கைது செய்யப்பட அவர்களின் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இயல்பான குழந்தைகள் என்றால் பரவாயில்லை, ஆட்டிசம் போன்ற குறைபாட்டுடன் இருந்தால் குழந்தைகளின் நிலைமையை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? சாராவின் மகன் ஆட்டிசக்குறைபாடு உடையவன்தான். 

2001 ஆம் ஆண்டு ஹோண்டுராசிலிருந்து அமெரிக்காவிற்கு பிழைக்க வந்த சாரா, அரசிடம் பிடிபட்டால் உச்சபட்ச கொலைச்சம்பவங்கள் நடைபெறும் ஹோண்டுராசின் சான் பெட்ரோ சுலாவிற்கு திரும்ப அனுப்பபடுவார். குடியேற்றத்தின் மூன்றாவது விதியைக் கூறி "உங்கள் குழந்தையின் கதி?" என்று கேட்டால், விசும்பலும் கண்ணீரையும் தொடர்ந்து சாராவிடமிருந்து "எனக்குத் தெரியவில்லை" என்று பதில் வருகிறது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க முயல்வது அரசின் கடமை எனக்கொண்டால் பெற்றோர்களை வேட்டையாடி வெளியேற்றுவதால் குழந்தைகள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என்பது பேராசிரியர் லூயிஸ் ஸயாஸின் கருத்து. "அமெரிக்காவின் குடியேற்ற ஏஜன்சி, கடந்த ஆண்டை(14%) விட இந்த ஆண்டு (26%) அகதிகளை கைது செய்துள்ளது. இதன் விளைவாக குழந்தைகள் கடும் மனச்சோர்வுக்கு உள்ளாகி மூளையின் வளர்ச்சியே பாதிப்பிற்குள்ளாகிறது" என்கிறார் லூயிஸ். இவர் அகதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பற்றி ஆராய்ச்சி செய்து Forgotten Citizen என்ற நூலை எழுதியுள்ளார். "சட்டரீதியாக வேறுவழியேயில்லை. அரசின் தீவிர நிர்பந்தம், முறையான ஆவணங்கள் இல்லாதவர்களை உறுதியாக வெளியேற்றும்" என்கிறார் சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள அகதிகளுக்கான மைய இயக்குநர் எரின் க்வின். உடனே நீங்கள் அப்ளை செய்து விசா பெற்றுவிடலாம் என நினைக்கலாம். 

1997 ஆம் ஆண்டு நவ. 15 வரை அப்ளை செய்தவர்களுக்கே இப்போதுதான் பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதிபர் ட்ரம்ப் மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் நடுவில் சுவர் கட்டி குற்றச்செயல்களை தடுக்க விரும்பினார், ஆனால் இன்று அவர் தன் நாட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக எழுப்பியுள்ள சட்டம் எனும் சுவர் மூலம் பிரிப்பது ரத்தமும் சதையுமான மனிதர்களையும் அவர்களின் இதயங்களையும்தான்.


நான் அகதி!

ஆவணங்கள் இல்லாத மக்கள் - 1.1 கோடி
அங்கீகாரமற்ற உறவினர்களுடன் வாழும் குழந்தைகள் - 50 லட்சம்
அகதிகளின் தேசம் - மெக்சிகோ(56%), குவாத்தமாலா(7%), எல்சால்வடோர்(4%)
அமெரிக்காவில் அகதிகள் - நெவடா(7.2%), டெக்ஸாஸ்(6.%), கலிஃபோர்னியா(6%)

(Pew Estimate 2017, Migration Policy(2014), American Immigration Council Estimates தகவல்படி)


கெட்அவுட்!

கைதானவர்களின் எண்ணிக்கை - 1,10,104(2016), 1,43,470(2017)
வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை- 2,40,255(2016), 2,26,119(2017)