முதல் தேர்தல் அதிகாரி தெரியுமா?
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை நடத்திய
அதிகாரி!
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் ஸ்பெஷல்,
அதன் பிரமாண்டமான தேர்தல் திருவிழாதான். மொழி, மதம், கலாசாரம் என எண்ணற்ற சவால்களைக்
கொண்ட இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களை கண்காணிப்புடன் திறம்பட கட்டுப்பாடு
குறையாமல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துவதை உலகின் வல்லரசு நாடுகளும் கூட எதிர்பார்ப்பும்
ஆர்வமுமாக கவனித்து வருகின்றன.
ஆட்சி மாற்றம்,
பதவி நியமனம் ஆகியவற்றில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பு குறித்த சந்தேகங்கள்
இன்று கிளம்பினாலும் மத்திய, மாநில தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பும் பணியும் அசாதாரணமானது.
இந்தியா போன்ற பல்வேறு கலாசாரங்கள், மாறுபட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டில் பிரச்னைகள்,
பூசல்கள் இன்றி முன்பு வாக்குச்சீட்டுகள் மூலமும் இன்று வாக்கு எந்திரங்கள் மூலமும்
தேர்தலை சுமூகமாக நடத்த எண்ணற்ற குடிமைத்துறை அதிகாரிகளின் உழைப்பே காரணம். அவர்களில்
முக்கியமானவர் 1951-52 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை திட்டமிட்டு நடத்திய
முதல் தேர்தல் கமிஷனர் சுகுமார் சென்.
1899 ஆம் ஆண்டு கல்கத்தாவின் பிராமண குடும்பத்தில்
பிறந்த சுகுமார் சென், படிப்பில் கெட்டிக்காரர். பிரசிடென்சி கல்லூரி மற்றும் லண்டன்
பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை நிறைவு செய்தவர், கணிதத்தில் தங்கமெடல் வென்ற ஐக்யூ
கில்லாடி. இந்திய ஆட்சிப்பணியில் 1921 ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்து பல்வேறு மாகாணங்களில்
ஆட்சியராகவும், நீதிபதியாகவும் பணிபுரிந்தார். தகுதி அடிப்படையில் மேற்கு வங்காளத்தின்
முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார் சுகுமார் சென். அப்போதுதான் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்து, "ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நசுக்கப்பட்ட இந்தியாவின் ஆன்மா விடுதலை அடைந்தது"
என நேரு பெருமையுடன் மக்களுக்கு அறிவித்த வரலாற்றுச்சம்பவம் நடைபெற்றது.
திட்டங்களை தீட்டி நாட்டை முன்னேற்ற அரசும், அமைச்சரவையும்
வேண்டுமே? 1950 ஆம் ஆண்டு பாபாசாகேப் அம்பேத்கரால் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டவுடன்
1951 ஆம் ஆண்டு தேர்தலை நடத்த இடைக்கால பிரதமர் நேரு தலைமையிலான அரசு தீர்மானித்தது.
இச்சூழலில்தான் தேர்தல் ஆணையத்தின் தலைவராக சுகுமார் சென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கௌரவமான பதவி போல தோன்றினாலும் தேர்தல் பற்றி இந்திய மக்களிடம் விழிப்புணர்வு உருவாக்கி
வாக்களிக்க செய்வது என்பது ஹெர்குலஸ் பூமியைத்தூக்கி சுமப்பது போன்ற பாரமான பணி. வாக்குரிமையுள்ள
17.6 கோடி மக்களின் பெயர்களை ஒன்று திரட்டி லிஸ்ட் தயாரிப்பது தொழில்நுட்ப யுகத்தில்
நொடியில் சாதிக்கலாம். ஆனால் அன்று?
சாதி, மதம், மொழி, பாலினம் என பாகுபாடற்ற முறையில்
நடத்த ஏற்பாடான தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களில் 85 சதவிகிதம் பேர் தொடக்க கல்வி
பெறாதவர்கள் என்றால் சுகுமார் சென் ஏற்றிருந்த சவாலைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவில்
மொத்தம் 4500 இடங்களுக்கான தேர்தலில் 489 இடங்கள்
மக்களவை உறுப்பினருக்கானவை. இந்தியா முழுக்க 2 லட்சத்து 24 ஆயிரம் வாக்குச்சாவடிகளை
56 ஆயிரம் அதிகாரிகள் கண்காணித்தனர். ஆறுமாத தேர்தல் பணிக்கு 6 ஆயிரத்து 500 கிளர்க்குகள்,
இவர்களுக்கு உதவியாக 2 லட்சத்து 80 ஆயிரம் உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி பாதுகாப்புக்கென
இரண்டு லட்சத்து 24 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆல் இந்தியா ரேடியோவிலும், நாடெங்கிலுமுள்ள 3 3
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டன.
இதே வேளையில் வாக்கெடுப்பில் தன் பெயரைச் சொல்ல விரும்பாத கிராமத்து பெண்களின் பழக்கமும்
பெரும் சோதனையாக அதிகாரிகளுக்கு அமைந்தது. இந்திய வாக்காளர்களில் படிப்பறிவற்றவர்களின்
விகிதம் அதிகம் என்பதால் அதற்கேற்ப தேர்தலில் பங்கேற்ற பதினான்கு கட்சிகளின் சின்னங்களை
பெரிதாக வாக்குச்சீட்டில் பொறித்து வாக்களிப்பத்தை எளிதாக்கினார். தேர்தல் ஆணையர் சுகுமார்சென்.
கள்ள ஓட்டுக்களை தடுக்கும் முயற்சியாக விரலில் வைக்கப்படும் அழியாத மை பாட்டில்கள்
3 லட்சத்து 89 ஆயிரத்து 816 பயன்படுத்தப்பட்டன.
இந்தியாவில் 1951-52,1957 தேர்தல்களை நடத்திய சுகுமார்
சென், தன் சீரியபணியால் சூடான் நாட்டில் தேர்தல் கமிஷனராக பணியாற்ற அழைக்கப்பட்டது
இந்தியர்களுக்கான எவர்க்ரீன் பெருமை. தனது தேர்தல் காலப்பணிக்காக பத்மபூஷன் விருது
வழங்கி கௌரவிக்கப்பட்ட சுகுமார்சென், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை வெற்றிகரமாக
நடத்தி சுதந்திர ஜனநாயகத்தை இந்தியாவில் தொடங்கி வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
"இந்தியாவில் ஜனநாயகத்தை தொடங்கிவைத்த சுகுமார் சென், நம் இந்திய வரலாற்றில் அறியப்படாத
நாயகன்" என வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கூறுவது மிகையல்ல
என்பதற்கு சுகுமார் சென்னின் பணிகளே சாட்சி.
- ச.அன்பரசு
தொகுப்பில் உதவி: கா.சி.வின்சென்ட், பூங்கோதை
நன்றி: பெட்டர் இந்தியா இணையதளம்