செகண்ட் சான்ஸ் கொடுக்கும் யுவ பரிவர்த்தன் அமைப்பு!


இளைஞர்களுக்கு கைகொடுக்கும் மும்பை தம்பதி!


Related image






பக்கோடா தயாரித்து விற்பதும் தொழில்தான் என பிரதமர் கருத்து தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை தவித்து வருவது உண்மை. "தொழில்நுட்பத் திறன்களை கற்றுள்ள இளைஞர்கள் வேலைக்கும் பொருளாதாரத்திற்கும் பயந்து தவிக்கும் அவசியமேயில்லை" என்று அழுத்தமாக சொல்கின்றனர் மும்பையைச் சேர்ந்த கிஷோர்-மிரினாளினி தம்பதியினர்.

டெல்லியைச் சேர்ந்த மகாவீர் போஜரியா, பத்தாவது தேர்வில் தோற்றுப்போனார். ஊர், உறவுகள், வீடு என தோல்விக்காக திட்ட மனமுடைந்த மகாவீர், மூன்று ஆண்டுகளாக வீட்டில் முடங்கிப்போனார். பின்னர், யுவ பரிவர்த்தன் அகாடமியில் எலக்ட்ரீஷியன் பயிற்சிக்கு விண்ணப்பித்தார்." என்மேல் எனக்கு நம்பிக்கை வரக்காரணமே, இங்குள்ள பயிற்சிதான். தொழில்பயிற்சியோடு எனக்குள்ளிருந்த மனத்தடைகளை முதலில் உடைத்தெறிந்து வென்றேன்" என்னும் மகாவீர் தற்போது எலக்ட்ரீஷியனாக துணிச்சலுடன் பணிபுரிந்து வருகிறார்.
Image result for yuva parivartan

இவர் மட்டுமல்ல; பள்ளி இடைவிட்டு நின்ற கிராமத்து இளைஞர்கள் ஏழு லட்சம் பேர்களுக்கு தொழில்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது யுவ பரிவர்த்தன் குழு. கிஷோரின் தாத்தா பி.ஜி.கெர், பாம்பே மாகாண முதல்வராக பணியாற்றியபோது, தோல் பதனிடும் குடிசைவாழ் மக்களுக்கு பாந்த்ரா பகுதியில் வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தந்தார். மேலும் உதவிகளை தொடர்ச்சியாக செய்ய கெர்வாடி சமூகநலச்சங்கத்தை தொடங்கினார். சுதந்திரத்திற்கு போராடிய முன்னோர்களைக் கொண்ட கிஷோர், அவரது மனைவி மிர்னாளினியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரத் தொடங்கியதுதான் யுவபரிவர்த்தன்(YP) அகாடமி. 2003 ஆம் ஆண்டு தொடங்கிய யுவபரிவர்த்தன் அகாடமியை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்.

சந்தையில் முன்னோடியாகவுள்ள நிறுவனத்தின் தொழில் வல்லுநர்களே இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் யுவ பரிவர்த்தன் அகாடமியின் ஸ்பெஷல். மேலும் இந்திய அரசின் திறன் மேம்பாட்டு கழகமும் இவர்களுக்கு உதவிவருகிறது. பதினெட்டு மாநிலங்களிலுள்ள 650 மையங்களின் மூலம் 25 க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்குகிறது யுவபரிவர்த்தன் அகாடமி குழு.  
 கணினிக்கல்வி, மின்சார பழுதுபார்ப்பு, அழகுக்கலை, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அனைத்தும் வகுப்பறைகளில் கற்பிக்கப்படுவதில்லை; நீங்கள் இதனை கற்றுக்கொண்டு எங்கு வேலை செய்வீர்களோ அதே இடத்தில் முன்னணி நிறுவனங்களின் வல்லுநர்கள் பயிற்சியளிப்பதால், கற்கும்போதும் வேலைசெய்யும்போதும் தடுமாற்றமோ மிரட்சியோ இருக்காது. ஆண்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அசுரத்தனமாக உழைத்துவருகிறது யுவபரிவர்த்தன் குழு.

தொழில்பயிற்சியுடன் கூடுதலாக சோச்கா பரிவர்த்தன் எனும் ஆளுமைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் பணத்தை கையாளுவது, நேரமேலாண்மை, சுகாதாரம், தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றை போதிக்கிறார்கள். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலுள்ள கிராமப்புற பழங்குடிகளின் மேம்பாட்டிற்கு உள்ளூர் தன்னார்வ நிறுவனங்களோடு யுவ பரிவர்த்தன் அகாடமி இணைந்து செயல்படுகிறது. "எங்கள் தாத்தா உயிரோடிருந்து இவற்றை பார்க்க முடிந்திருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். திலகர், கோகலே, காந்தி ஆகியோரின் கொள்கைவழியே வாழ்ந்தவர் அவர். பள்ளி இடைநின்றவர்கள் வாழ்வில் முன்னேற இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம் அவ்வளவுதான்" என பெருமையுடன் பேசுகிறார் யுவபரிவர்த்தன் அகாடமி தலைவரான கிஷோர் கெர்.

இளைஞர்களின் வழிகாட்டி!

யுவ பரிவர்த்தன் அகாடமியை தாய் நிறுவனமான கெர்வாடி சமூகநலச்சங்கத்தை 1928 ஆம் ஆண்டு, மறைந்த சுதந்திர போராட்ட வீரரான பி.ஜி.கெர் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக பதிவான இவ்வமைப்பு ஏழை இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறது. இதன் சகோதர அமைப்பான யுவ பரிவர்த்தன் அகாடமியை(1993) கிஷோர்கெர் மற்றும் மிர்னாளினி கெர் வழிநடத்துகிறார்கள். 18 மாநிலங்களில் இயங்கிவரும் யுவ பரிவர்த்தன் அகாடமி, சிறைகளிலும், கிராமங்களில் 3 ஆயிரம் மொபைல் மையங்களோடும் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறது. வழங்கப்படும் பயிற்சிகளில் 70 சதவிகிதம் பிராக்டிக்கல்தான். 2020 ஆம் ஆண்டில் 50கோடியாக உயரும் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளித்து அவர்களை தொழில்முனைவோராக்குவதே யுவபரிவர்த்தன் அகாடமியின் லட்சியம்.  

   


- ச.அன்பரசு

பிரபலமான இடுகைகள்