குழந்தைகளை காக்கும் நல்லாசிரியரின் முயற்சி!
குழந்தை திருமணங்களை நிறுத்திய நல்லாசிரியர்!
அழுகையும் தவிப்புமாக நின்றிருந்த ரதிமா சொல்லாமலேயே அனைத்தும் புரிந்துவிட்டது தலைமை ஆசிரியர் சந்தன்குமார் மைதிக்கு. 24 பாரக்னாஸ் மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் விஷயம்தான் அது. என்ன அது? குழந்தை திருமணம் எனும் சமூக அவலம்தான்.
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பதினைந்து வயது ரதிமாவை காஷ்மீருக்கு
சுற்றுலா செல்வதாக அழைத்துச்சென்று ஐம்பது வயது மனிதருக்கு ரதிமாவின் தந்தை திருமணம்
பேசி முடித்துவிட்டார். 'கல்யாணம் வேண்டாம் நான் படிக்கிறேன்" என்று ரதிமா மன்றாடியும்
கல்யாணம் நடந்தது. ரதிமாவின் மூத்த சகோதரிக்கும் அதே இடத்தில் மணம் நடைபெற்றது.
ரதிமாவின் கணவர் பிலால் அகமது சிருவுக்கு ஏற்கனவே
இருமனைவிகள், குழந்தைகள் உண்டு. உடலும் மனமும் முதிராத ரதிமாவையும் பிலால் உடலுறவுக்கு
பலவந்தம் செய்த கொடுமை, பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது.ரதிமாவின் சகோதரர் யூசுப்
ரயில் டிக்கெட் வாங்கி அனுப்ப அந்நரகத்திலிருந்து தப்பித்து மதுராபூருக்கு வந்திருக்கிறார்
ரதிமா. உடலும் மனமும் சிதைந்து வந்த ரதிமாவை அவரது தந்தை பீர் முகமது ஏற்க மறுத்து
காஷ்மீருக்கு திருப்பி அனுப்ப முயற்சித்தது ரதிமா எதிர்பார்க்காத பேரதிர்ச்சி. பின்
போலீசில் புகாரளிக்க வைத்த தலைமையாசிரியர் சந்தன்குமார் மைதி, ரதிமாவை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு
தன் பராமரிப்பில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ரதிமா என்பது மேற்கு வங்காளத்தில்
நடைபெறும் குழந்தை திருமணம் எனும் சமூக அநீதிக்கு சிறிய சாம்பிள்தான்.
கன்யஸ்ரீ பிரகல்பா திட்டத்திற்காக ஐ.நா விருது பெறுகிறார் முதல்வர் மம்தா
மேற்கு வங்கத்திலுள்ள பாரக்னாஸ் மாவட்டத்தில் நடைபெறுவதை
குழந்தை திருமணம் என்று கூட கூறமுடியாது; வறுமையின் விளைவாக பள்ளிச்சிறுமிகளை திருமணம்
என்ற பெயரில் இரக்கமின்றி விற்கும் சந்தை அது. உலகளவில் 2.5 கோடியாக இருந்த குழந்தை
திருமணங்களின் அளவு தற்போது 1.2 கோடியாக குறைந்துள்ளதாக கூறுகிறது யுனிசெஃபின் அறிக்கை.
இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில நடைபெறும் குழந்தை
திருமணங்களின் அளவு நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகம்.
அண்மையில் படிக்க தடைபோட்ட கணவரை விவாகரத்து செய்த
முஸ்லீம் பெண் படிப்பில் ஆர்வம் காட்ட, சந்தன்குமார் யோசிக்கவேயில்லை. பெண்ணை ஹாஸ்டலில்
தங்க வைத்து பள்ளியில் அட்மிஷன் பீஸ் கட்டி கல்வி கற்க உதவியுள்ளார். படிக்கவைக்க வசதியில்லாத
குழந்தை திருமணம் இரும்புக்குண்டை காலில் சுமக்க தள்ளப்படும் சிறுமிகளை தன்னுடைய சொந்த
செலவில் படிக்க வைத்துள்ளார் சந்தன்குமார் மைதி. "வறுமையான பின்னணி கொண்ட இச்சிறுமிகளுக்கு
கல்வி மட்டுமே வாழ்வில் உயருவதற்கான ஒரே ஏணி. கல்வி கற்பதற்கான சூழலை மட்டுமே ஏற்படுத்தி
தர நான் முயற்சிக்கிறேன்" என தீர்க்கமாக பேசி புன்னகைக்கிறார் சந்தன்குமார் மைதி.
கடத்தலுக்கு தடா!
இந்திய அரசு சிறுவர், சிறுமிகளை கடத்தும் செயலுக்கு
எதிரான சட்டத்தை விரைவில் கொண்டுவரவிருக்கிறது. கடத்தலில் ஈடுபவர்களுக்கு 7-10 ஆண்டு
சிறைதண்டனையோடு ஒரு லட்சரூபாய் அபராதமும் உண்டு. பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள்,
கொத்தடிமையாக கடைகளில் வேலை ஆகிய சட்டவிரோத வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துபவர்களுக்கு
3-7 ஆண்டுகள் சிறை நிச்சயம். மாநில அளவில் கடத்தலுக்கு எதிரான அதிகாரிகள் நியமிக்கப்படுவதோடு,
கடத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடும் உண்டு.
குற்றங்களின் தடம்!
கடத்தல் வழக்குகள் - 8,132 (2016) 6,877 (2015)
குற்றங்களின் அதிகரிப்பு- 20%
குற்றங்கள் விகிதம் - மேற்கு வங்காளம்(44%), ராஜஸ்தான்(17%)