உப்பு விதிகள்! - காந்தியின் அசாதாரண பயணம்!

தண்டி யாத்திரை!




Image result for dandi march




1930 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று காந்தி வெற்று உடலில் சால்வை ஒன்றை போர்த்தியபடி வானத்தை பார்த்தார். அவரின் கூடவே காங்கிரஸ் குல்லாய் அணிந்த 78 தொண்டர்கள் இருந்தனர். அவரின் தீர்மானம் நடப்பதில்தான் இருந்தது. சட்டமறுப்பின் ஒரு அங்கமாக நடந்த உப்புவரியை எதிர்த்த தண்டி யாத்திரை அது.

போகலாம் என்ற ஒற்றை வார்த்தை அனைத்து தொண்டர்களையும் தானியங்கியாக இயக்கியது.  உடலில் சால்வை, இடுப்பில் வேட்டியோடு காந்தி இப்பயணத்தில் தினசரி 16 மைல்கள் என 387 கி.மீ தூரம் பயணித்தார். வரிக்கு எதிரான ஆக்ரோஷத்தை இந்தியாவெங்கும் ஏற்படுத்திய நடைபயணம் அது.

காந்தி அயராமல் பல்வேறு கிராமங்களின் வழியாக நடந்த இப்பயணம், உப்புவரி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான தார்மீக கோபத்தை உருவாக்கியது. மற்றொரு பயனாக 1920 ஆம் ஆண்டில் பதினைந்து லட்சமாக உருவாகியிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களையும் அதிகரிக்க, கடைக்கோடி கிராமங்களுக்கும் கட்சியை அறிமுகப்படுத்த காந்தி திறமாக வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

நடப்பது பெரிய காரியமில்லை. ஆனால் 61 வயதில் நடப்பது என்பது சாதாரணமல்ல. நடந்து பார்த்து கால்கள் ஒன்றுடன் ஒன்று பிணைப்பின்றி நழுவுவதை உணர்ந்தீர்கள் என்றால் நடப்பதன் வலி புரியும். நூறு மீட்டர், இருநூறு மீட்டர் ஓட்டத்தை விட மாரத்தானுக்கு மிக அதிக வலிமை தேவைப்படுகிறது. ஏப்.6, அன்று மாலை 6.30 க்கு காந்தி தண்டியில் உப்பை ஆங்கில அரசின் விதிகளை மீறி கையில் எடுத்தார். பிறகு கடலில் ஆனந்தமாக குளித்தார். மே 4 அன்று காந்தி அரசால் கைது செய்யப்பட்டார். உடனே காங்கிரஸ் கட்சி தர்சனா உப்பு தொழிற்சாலையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது. கோபத்தில் உச்சிக்கு போன ஆங்கிலேய அரசு, கலந்துகொண்டவர்களை தடியடி நடத்தி விரட்டியது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள் மக்கள் என 2,500 பேர் கலந்துகொண்டர். காயம் பட்டவர்களின் எண்ணிக்கை 200 யையும் தாண்டும். நிராயுதபாணிகளை ஆங்கிலேய அரசு தாக்கிய செய்தி வெளியே வராமல் இருக்க அரசு கடும் முயற்சி எடுத்தது. ஆனால் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜெப் மில்லர் மூலமாக உலகெங்குமுள்ள 1,350 பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி ஆங்கிலேய அரசுக்கு உலக அரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.


இப்போராட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் சிறையில் தள்ளப்பட்டனர். இந்தியாவெங்கும் சுதந்திரதாகம் வேட்கையோடு உருவாகிய காலகட்டம் அது. காந்தி 1931 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அசோசியேட் பிரஸ்ஸைச் சேர்ந்த ஜே.ஏ.மில்ஸ், காந்தியுடன் பயணித்து பல்வேறு செய்திகளை பதிவு செய்து ஊடகங்களுக்கு அளித்து வந்தார்.  இரண்டாம் வட்டமேசை மாநாட்டு செய்திகளையும் ஜே.ஏ.மில்ஸ் பதிவு செய்தார் என்பதோடு காந்தியை ஒளி, ஒலி வழியாக நேர்காணலை பதிவு செய்த முதல் செய்தியாளரும் இவரே.


தமிழில்: ச.அன்பரசுநன்றி: செவ்லின் செபாஸ்டியன், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்