மனம் விடு தூது -கடிதங்கள்

மனம் விடு தூது
கடிதங்கள்

எழுத்தாளர் ஸ்ரீராம் 

எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்கள் நான் சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது என் சகோதரர் மூலம் அறிமுகமாகி அவர் வீட்டிற்கு சென்று இன்றுவரையிலும் சென்று வந்துகொண்டிருக்கிறேன். அவர் எழுதும் கதைகள் தொடர்பாக இருவருக்கும் கடும் முரண்பாடுகள், விவாதங்கள் எழுந்ததுண்டு. கடுமையான கருத்து வேறுபாட்டினால் நான் பல மாதங்கள் கடிதங்களே எழுதாமல் இருந்திருக்கிறேன். அவர் நான் எழுதிய எந்த கடித்தத்திற்கும் பதில் எழுதியதில்லை. அவர் பணியாற்றும் தொலைக்காட்சி பணியின் சூழல் அப்படியிருக்கலாம்.

 தன் கதைகள் வெளிவரும் போது அதுபற்றிய குறுஞ்செய்தியினை தொடர்ந்து அனுப்பி வைப்பார். நான் இன்று எழுதும் எழுத்துக்கள் அனைத்திற்கும் ஸ்ரீராம் அவர்கள், இரா. முருகானந்தம் ஆகிய இருவருக்கும் பெரும் நன்றிகள் செலுத்த கடமைப்பட்டுள்ளேன். எவ்வளவு கோபமாக இருந்தாலும், எனக்கு புத்தகங்கள் தராமல் தன் வீட்டிலிருந்து விடை தந்ததில்லை ஸ்ரீராம் அவர்கள் என்பது அவரின் குணத்தைக்காட்டும். யாருக்கும் தராத பல புதிய புதுமைகள் கொண்ட புத்தகங்களை வாங்கி பரணில் வைத்திருந்து எனக்கு எடுத்துக்கொடுத்தவர் இவர்தான். மேலும் நான் சரியாக உள்வாங்கித்தான் படிக்கிறேனா என்று சந்தேகம் கொள்ளும்போதெல்லாம் அது பற்றிய சரமாரியான கேள்விகள் கேட்பார்.

கடும் மனச்சோர்விற்கு உட்பட்ட பொழுதுகளில் அவர் வீட்டிற்கு சென்றுவிடுவேன். எது குறித்தும் சுயமாக அறிந்துகொள்ளுதலை வலியுறுத்துபவர் அவர். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் என்னைக்குறித்த ஒரு அவநம்பிக்கையும், குழப்பத்தையும், எந்தவகை இவன் என்ற ஐயத்தையும் ஸ்ரீராம் அவர்களின் முகத்தில் தரிசித்திருக்கிறேன். கருக்களின் அடிப்படையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து கற்றுக்கொண்டது இவரிடத்தில் என்று கூற எனக்கு தயக்கமேதுமில்லை.

எப்போதும் கிளுவை வேலி, மணல்பாதை, மாடவீட்டு புறா, மேல்காற்று, கீழ்காற்று என்று எழுதுகிறார் என்று சாதாரணமாக நினைக்க முடியாது ஆச்சர்யப் படுத்தும்படி ஆங்கிலம், தமிழில் பல நூல்களை வாசிப்பதோடு புதிய நடப்பு  விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார். புதிய எழுத்துமுறைகளை பரிசீலிப்பதை ரகசியமாக யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பவர்.

நான் எழுதிய ஐம்பதிற்கும் மேற்பட்ட கடிதங்கள் இவரிடம் உள்ளன என்றாலும் அவற்றை மிக ஜாக்கிரதையாக பாதுகாத்து வைப்பதால் எனக்கு கூட தட்டச்சு செய்துவிட்டு தருகிறேன் என்றால் தர மறுக்கிறார் என்பதால் எழுதும் கடிதங்களை நான் தட்டச்சு செய்து விட்டு அவருக்கு அனுப்பிவிடுவது சிறந்ததாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறேன்.

                                       16.10.2014
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்களுக்கு,

     நலம் வாழ விரும்புகிறேன். எழுத்தாளன் தான் வெளிப்படுத்தும் விஷயங்கள் தாண்டி அவனிடம் எதிர்பார்ப்பது பெரிய மடமைதான். நான் என் தவறை இன்று உணர்கிறேன். திருவண்ணாமலையில் சிறு கட்டுரை ஒன்றை சிவராஜ் கூற மொழிபெயர்த்தேன். ஆனால் அதனை நான் எழுதினேன் என்று ஒவ்வொருவரையும் நம்ப வைக்க முடியவில்லை. என் வயதும், தலைமுடியின் கருப்பும் பெரும் தடையாக இருக்கிறது. இனி தாடி வைத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன். லைப்ஸ்டைல் இதழ் ஒன்றுக்கு நேர்முகத்தேர்விற்கு கடும் பசியில் சென்றிருந்தேன். நான் முன்னர் அனுப்பி வைத்த எந்த மின்னஞ்சல் கோப்புகளையும் படிக்காமல் தான் கேட்கும் கேள்விகளிலேயே எதிரில் இருப்பவரை முடிவு செய்துவிடலாம் என்று ஆசிரியை நினைத்து பெரும் விவாதத்தில் எழுப்பும் கேள்விகளையெல்லாம் கேட்டார். பால் பற்றி, அக்குபஞ்சர் பற்றி, நிச்சயம் நீதான் இதை மொழிபெயர்த்தாயா? இன்னும் இதர நீங்கள் என்னை பெரும் சந்தேகமாய் பார்ப்பீர்களே அதுபோலத்தான். இயற்கை வேளாண்மை பண்ணையையும், சினிமா தயாரிப்பைப் பற்றியும் விளம்பரம் செய்யத்தான் இதழ் நடத்துகிறார்கள் போல. நிறுவனர் ஏதோ கட்டிடம் கட்டுகிற நிறுவனராம். சினிமா கதாநாயகன் போல தன் புகைப்படத்தை இணையத்தில் வைத்திருந்தார்.

     உயிரெழுத்து, விகடன், அம்ருதா, காலச்சுவடு ஆகிய இதழ்களில் தங்கள் கதைகள் வந்திருந்தால் என்னால் வாசிக்க முடியும். புயலிலே ஒரு தோணி திருப்பூராரின் உதவியுடன் படித்தேன். தாண்டி, தாண்டி செல்லும் சாகச நாவலை ஒத்த மனிதர்களின் வாழ்க்கையைப் பேசும் இந்நூல் கூறும் அங்கதங்கள் புரிய சங்ககால நூல்களின் சகவாசம் இருக்கவேண்டும். ரசிக்கத்தக்க ஒரு சிறந்த நூல் இது என்பதில் எந்த ஐயமுமில்லை.

இரா.முருகானந்தம் அவர்களின் கட்டுரைகள், கடிதங்கள், நான் அவருக்கு எழுதியவை, ஜெயமோகன், வண்ணதாசன், சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எனக்கு எழுதிய கடிதங்கள் உட்பட பல கட்டுரைகளை எனது வலைப்பூவான komalimedai.blogspot.in தளத்தில் வாசிக்க முடியும்.

     சூழல், கல்வி குறித்து ராகுல் ஆல்வாரிஸ் எழுதி அதர் இண்டியா பிரஸ் வெளியிட்ட நூலின் எனது தமிழ் மொழிபெயர்ப்பான நூல் ‘பள்ளிக்கு வெளியே வானம்’ என்னும் நூலினையும், வாசித்த நூல்களின் விமர்சன அறிமுக நூலான ‘நூலகவாசியின் குறிப்புகள் ’ என்ற நூலினையும் Freetamilebooks.com எனும் தளத்தில் வாசிக்க முடியும். இவைதான் அண்மையில் நான் செய்த விஷயங்கள். ஜிகர்தண்டா படம் பார்த்துவிட்டீர்களா? மணிரத்தினத்தை பயங்கர கிண்டல் செய்து இருக்கிறார்கள். நன்றி. சந்திப்போம்.
                                           வாழ்த்துக்களுடன்,
                                           ச.ஜெ அன்பரசு
இரா.முருகானந்தம்

                                                            16.10.2014
அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,

     நலம் வாழ இறையைத்தொழுகின்றேன். கீரனூர் ஜாகிர்ராஜாவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல் பல்வேறு விஷயங்களை புரிந்துகொள்ள உதவியது. தங்களுக்கு சு.ரா எழுதிய கடிதங்களை தட்டச்சு செய்துவிட்டேன். இன்னும் அசோகமித்திரன், ஜெயகரன் ஆகியோர் கடிதங்களை முக்கியமானதாக கருதுகிறேன்.

     ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் வாசிக்க ஜெயமோகன் படிக்க பரிந்துரைக்கும் சவாலான வாசிப்பு கொண்ட வகைதான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தாண்டி, தாண்டிச்செல்லும் உத்திகள் திகைப்பை அளித்தாலும், தொடர்ந்து போர்ச்சூழலிலும் அந்த இடங்களில் வாழும் மக்களின் வாழ்வு குறித்த சம்பவங்கள் நம்மை தொடர்ந்து நாவலின் உள் ஈர்க்கிறது. மரபான சங்க காலப்பாடல்களைப் படித்திருப்பது நாவலின் அங்கதங்களை படிக்க, புரிந்துகொள்ள, உள்வாங்கிட பெரும் உதவியாக இருக்கும். உரையாடல்கள் மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட நூல் இது. உதாரணமாக வங்காள போலீஸாக ஜெனரல் ஒருவரிடம் அறிமுகமாகி பாண்டியன் பேசும் பகுதி. கடலுக்கு அப்பால் பகுதியில் செல்லையாவின் வீழ்ச்சி படிப்படியாக நிகழ்வது தவிர்க்கவே முடியாத ஒன்று என நம் மனதில் படிய வைக்கும் காட்சிகள் மெல்ல மனதை பாரமாக்குகின்றன.

     தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் மற்ற ஈடுபாடுகளான இசை, இலக்கியம் குறித்த கருத்துக்களை யாரும் கேட்காமல் பின்பற்ற முடியாமல் செய்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதைக் குறிப்பிட்ட தாங்கள் எழுதுவதைப்பற்றிக் கூறினேன். தாங்கள் எந்த நவீன வசதிகளைப்பயன்படுத்தி எழுதினாலும் எனக்கு மகிழ்ச்சியே.
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு சார்ந்த இரு நூல்களைப் படிக்க வேண்டும். காந்தியின் கடிதங்கள் நூலைப்படித்துக்கொண்டு இருக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்து பலரும் சரளம் என்ற வார்த்தையைத்தாண்டி எதுவும் கூற மறுக்கின்றனர். மூலத்திற்கான மதிப்பை தான் கற்ற, உருவாக்கிய மொழிநடையில் தருவது மொழிபெயர்ப்பாளன்தானே. இதுதான் என் வருத்தம். எனது தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களைத் முன்னரே தெரிவித்துக்கொள்கிறேன்.

     நன்றி! சந்திப்போம்.
அன்புடன்,
அன்பரசு ச.ஜெ

எழுத்தாளர் வண்ணதாசன்
                                                     17.10.2014
மதிப்பிற்குரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு,
     வணக்கம். நலம் வாழ இறையை வேண்டுகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தீபாவளிக்கு தங்களுடைய கதை ‘அகஸ்தியம்’ சிறுகதை ஒரு பரிசு போல கிடைத்துள்ளது. பூனைகள் எழுதிய அறை நூலுக்கும் இதோ இந்த சிறுகதைக்கும் இடையில் எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. வெடித்து காய்ந்து கிடக்கும் பொழுதினில் அன்றும் இன்றும் காப்பாற்றியது தங்கள் எழுத்தின் ஈரம்தான்.

     ‘அகஸ்தியம்’ எனும் இச்சிறுகதையிலும் தங்கள் விரல்கள் பெரும் நம்பிக்கையோடு வண்ணம் குழைத்து வாசிக்கின்ற மனமெங்கும் ஐவ்வாது மணத்தோடு பூசிவிட்டு நேச உறவின் வெம்மையை விட்டுச்செல்கிறது. பௌணர்மியா என்று கேட்குமிடத்தில் தொடங்குகிறது ரசிப்பின் தடயங்கள். காயங்கள் , வலிகள் மறந்து மனதிற்கு பிடித்த ஒன்றைச் செய்யத்தொடங்கும் தனுஷ்கோடி அண்ணன் போல தைரியம் அனைவருக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. அவர் நாகஸ்வரம் வாசிக்கும் போது நடைபெறும் சூழல் குறித்த விவரிப்பும், ஸ்யாம் இக்கதைக்கு வரைந்த ஓவியமும் அவ்வளவு அழகு. சூறைக்காற்று மோதினாலும் தோணிகள் தொடர்ந்து வலியுடன் தவிப்புடன் பயணிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அகஸ்தியர் அத்தை தனுஷ்கோடி அண்ணனின் தங்கைக்கு சொல்லி புலம்பும் வார்த்தைகள் அப்பா! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எந்த தருணத்திலும் ரசிப்புத்தன்மையை கைவிடாத ஆத்மாக்கள். கடைகள், மரங்கள், செடிகள், கிள்ளப்படும் கோரையின் வாசம், செவ்வந்திப்பூ என மனிதர்கள் தாண்டிய உலகம் உயிர்ப்புடன் இருக்கிற கதை.

     பல வடிவங்கள், பல புத்திசாலித்தனமான கதைகள் படைக்கும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். என்றாலும் மண்ணிற்கான, உணர்வுகளை, உறவுகளை கைபிடித்து அழைத்து மனதிற்கு நெருக்கமாக நிறுத்தி மனிதர்களுக்கான நேசம் எப்புள்ளியில் தொடங்கி எங்கே  உடைகிறது என கேள்வியோடு உயிர்ப்பான ஆன்மா வாசம் வீச எழுதுவது நீங்கள்தான் ஐயா!. தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.
பிரியமுடன்,
அன்பரசு.

வண்ணதாசன் அவர்களின் முகவரி:
19, சிதம்பரம் நகர்,
பெருமாள்புரம்,
திருநெல்வேலி – 627007


                                                           627007
                                                           23.10.2014  
அன்புமிக்க அன்பரசு,
வணக்கம். தீபாவளி போய்விட்டது. மழையும் அநேகமாக வெறித்துவிட்டது. ஆனால் எங்கேயாவது ஒற்றை ஒற்றையாய் வெடிச்சத்தம் கேட்கிறது. அதேபோல் அவ்வப்போது ஒன்று இரண்டு தூறலும் விழுகிறது.
எப்போதுமே இந்த மறுநாள் களை அழகுதான்.
*
‘அகஸ்தியம் ’ கதையைப்படித்துவிட்டு உங்களுடைய மனநிலையை கனிந்த வார்த்தைகளில் பகிர்ந்திருக்கிறீர்கள். சமீபத்தில் என்னுடைய இந்தக்கதை, வழக்கத்தை விட நிறையப்பேரை தொட்டிருக்கும்போலத் தோன்றுகிறது. அப்படி நெருக்கமாக எல்லோரும் அநேகமாக உணரும்படி அதில் ஏதோ தற்செயலாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
நல்லா இருங்க.
*
எல்லோர்க்கும் அன்புடன்,
கல்யாணி. சி



மொழிபெயர்ப்பாளர் மரு.வெ.ஜீவானந்தம்
                                                     18.10.2014
மதிப்பிற்குரிய மொழிபெயர்ப்பாளர் மரு.வெ. ஜீவானந்தம் அவர்களுக்கு, நலம் வாழ இயற்கையை வேண்டுகிறேன. காந்திய பொருளாதார அறிஞர் குமரப்பா எழுதிய ‘தாய்மைப்பொருளாதாரம்’, ‘வெற்றிபெற காந்தியவழி’ – ஆலன் ஆக்ஸல்ராட், ‘இயற்கைக்கு திரும்பும் பாதை’ – புகோகா, ‘காந்திய சுயராஜ்யம்’ , தாங்கள் மொழிபெயர்த்த சில நூல்களை வாசித்துள்ளேன். இவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட வேறுபட்ட தளத்தைக்கொண்டிருந்தாலும், இவற்றின் அடிப்படைத்தன்மை மக்களுக்கான நலன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தங்களுடைய பணி மிகச்சிறப்பான ஒன்று. தங்கள் எழுத்தில் நிதானமான அமைதியும், குறையாத உறுதியும் உள்ளதுபோல் உணர்கிறேன். மருத்துவர் என்பது உடல்நலம் குறித்ததாக இருந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்படத்தக்க ஆளுமையாகத்தான் இருக்கவேண்டும்.

     நான் தங்களை, நோக்கங்களை பின்பற்றி ஒரு மொழிபெயர்ப்பாளனாக வர விரும்புகிறேன். என்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும்? சிறு கிராமத்தில் வசிப்பதால், நூலகத்தில் இருக்கும் நூல்களை மட்டுமே  படிக்கிறேன். சில ஆங்கிலக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க எழுத முயற்சித்தேன் என்றாலும் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை.  தங்களைப்போன்ற முன்னோடி அர்ப்பணிப்பு மிக்க மொழிபெயர்ப்பாளர்கள் வழிகாட்டினால் பெரிதும் நன்றியுடையவனாக இருப்பேன். மொழிபெயர்ப்பு பற்றி அதிகபட்சமாக சரளம் என்று கூறும் நிலையில்தான் பேசப்படுகிறது என்றாலும் மொழிபெயர்ப்பு நம் சமூகத்தின் பல சாளரங்களை திறக்க உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி!
அன்பரசு.




காலச்சுவடு
                                                                  18.10.2014
மதிப்பிற்குரிய காலச்சுவடு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
அக்டோபர் 2014 காலச்சுவடு சற்று தாமதமாக கைக்கு கிடைத்ததால் கடிதம் பிந்திவிட்டது. தேவிபாரதி அவர்களின் சிறுகதையான ’அ.ராமசாமியின் விலகல் தத்துவம்’ பற்றிய எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன். இச்சிறுகதையின் கருப்பொருள் அவரின் சுதந்திரமான தேர்வாக இருக்கலாம். ஆனால் சிறுகதையாக பரிசு பெற்றது என்று கூறும் போதிலிருந்தே அதாவது புதிய பிராமணப்பெண் வேசியை தலித் வாடிக்கையாளன் தலைமுறையாக தன் பாட்டன்களை கொடுமைப்படுத்திய வன்கொடுமைக்காக அப்பெண்ணை சிகரெட்டினால் சுடுவது போல் இருக்கும் காட்சிகள் ஆசிரியரின் வன்மத்தை, வக்கிரத்தை தலித் மக்களின் மேல் ஏற்றிக்கூறுவது போல் உள்ளது. அதை நிகழ்த்துவதற்கான மக்கள் சூழ்ந்த வெளியாக நாடகமேடையினைத் தேர்ந்தெடுக்கிறார். இதில் நாடக ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் பாத்திரத்தேர்வு பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஏனெனில் அதுவும் ஆசிரியரின் திட்டமிட்ட நிகழ்த்துகலையாக மாறுகிறதை யாரும் வாசிப்பிலேயே உணரமுடியும். 

வண்ணதாசனுக்கு,

மதிப்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு, அன்பரசு எழுதுவது, தங்களின் 23.10.2014 கடிதம் கிடைத்தது. தீபாவளியின் இரண்டாம் களை ஏன் மனதை ஈர்க்கிறது என்றால் தங்களின் கதைகளின் மனிதர்கள் போல் நெடுந்தொலைவிலிருந்து அன்பைச் சுமந்துகொண்டு அடித்துப்பிடித்து ஊர் மண்ணை மிதித்துவிட்டு, அதே வேகத்தோடு, ஊர் நினைவுகளோடு, அடுத்த பண்டிகை வரை தாக்குப்பிடிக்கும் நினைவுகளோடு திரும்பிச்செல்கிறார்களே.. அவர்களின் அன்பு சிதறிக்கிடக்கிறது அவர்களின் வீட்டு வாசல்களில்… அந்த காரணத்தினால்தான் என்று நினைக்கிறேன்.

தங்களின் கதை எப்போதுமான உறவுகள் பற்றிய நேசத்தை, பிரயத்தை வாசனை மாறாது பேசுகிறது என்பதோடு நம் பருவ காலத்தைப் பாருங்களேன். மழை மண் நெகிழ்வது போல இறுகிக்கிடந்த அனைத்தும் நெகிழ்கிறது. அதற்கான வெளியை சுதந்திரத்தை தங்களின் கதை உருவாக்கியது.

‘அகஸ்தியம்’ கதை மட்டுமல்லாது உயிரெழுத்தில் எழுதிய சிறுகதைகளைக்கூட படிக்கும்போது, இன்னும் நீளவேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டு படித்தேன். கடுமையான மன அழுத்த சூழலில் நல்லா இருக்கீங்களா என்ற குரல் எவ்வளவு  அற்புதமானதாக தோன்றுகிறது. உங்களின் கதைகளைப் படிக்க படிக்க உள்ளே ஏதோ உடைகிறது போல் இருக்கிறது. முன்பை விட மென்மையாக பேசுகிறேன். தங்களின் கதையின் குரலுக்கு மிக அண்மையில் என் மனம் துடிக்கிறது. நூலகத்தில் தங்களின் கதைகளைப் படிக்க படிக்க கண்ணீர் பெருகுகிறது. நான் இழந்துவிட்ட ஏதோ ஒன்றை தங்கள் கதைகளில் அடையாளம் கண்டுகொள்வதாக உணருகிறேன். இது தற்செயலாக இருக்கமுடியுமா?
அன்புடன்,
அன்பரசு.

28.10.14
முருகானந்தம்

மதிப்பிற்குரிய முருகானந்தம் அவர்களுக்கு,
      நான் தங்களுக்கு எழுத்தாளர் எழுதிய கடிதங்களை தேர்ந்தெடுத்தவற்றை மின்னூலாக வடிவமைத்திருக்கிறேன். விரைவில் தங்களுக்கு அவற்றை அனுப்பி வைப்பேன். தினகரன் தீபாவளி மலர் 2014, ல் ஜெயமோகன் காஷ்மீர் பற்றி எழுதியுள்ள கட்டுரை தவிர்த்து, வேறு முக்கியமான எதுவும் இல்லாதது போல் படுகிறது. போன ஆண்டைவிட இந்த ஆண்டு விஷயங்கள் குறைவு. இலவசமாக அளிக்கப்படும் சலவைத்தூள் தான் மிச்சமான ஆறுதல். தினமணி தீபாவளி மலர் 2014 முழுக்க வயதான ஆட்களை இலக்காக கொண்டு தயாரித்திருப்பார்கள் போல. சாமிபடங்கள், இனிப்பு செய்வது, வர்த்தகர்களின் கடைப்பொருட்களை அறிமுகம் செய்வது என்று விளம்பரங்களுக்கிடையில் சில செய்திகள் உள்ளன. விகடன் தீபாவளி மலர் 2014 எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
     கண்மணி குணசேகரின் ‘அஞ்சலை’ நாவலுக்குப் பிறகு அவரது சிறுகதைத்தொகுப்பான ‘உயிர்த்தண்ணீர்’ படித்தேன். அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வை அவர்களின் வாழ்வாதாரமான முந்திரிக்காடுகள் பின்னணியில் பேசுகிற இவ்வெழுத்துக்கள் மக்களின் மொழியில் உள்ளது கதைகளைப்படிக்க பெரும் ஆர்வமூட்டுவதாக உள்ளது. சருகு, இடைவெளி, குலைவு, சின்னக்குண்டு, சுருக்கு ஆகிய கதைகளை எனக்கு பிடித்தவையாக கூறலாம். ‘காலச்சுவடில்’ வெளிவந்துள்ள தேவிபாரதியின் சிறுகதை வடிவம் நன்றாக இருந்தாலும் உள்ளடக்கத்தை பொறுத்து அவர் கூறுவதை இலக்கியம் அறியாதவனும் கூட ஏற்றுக்கொள்வது கடினம். காந்தியின் கடிதங்களின் வழியே விரியும் வானம் மிக விசாலமானது. அதை முழுக்க அறிய வாழ்நாள் முழுவதும் அவரை கற்றறியவேண்டும்.
அன்புடன்,
அன்பரசு
28.10.2014

முருகானந்தத்திற்கு,

மதிப்பிற்குரிய முருகு அவர்களுக்கு,

     நலமறிய ஆவல். பெரியாரின் ஜாதி, தீண்டாமை பற்றிய உரைகளை படித்துக்கொண்டிருக்கிறேன். அதோடு இதை நான் படிக்கும்போது, இடையறாது காந்தியின் செயல்பாடுகளும் மனதில் வந்துகொண்டே இருக்கிறது. கடுமையாக பெரியார் காந்தியை வசைபாடினாலும், பெரியாரின் பேச்சில் ஏதோ குறைபாடு உள்ளதுபோல் இருக்கிறது. இதற்கு காரணம் காந்தி சமரசச் சொல்லாடல்களையே தன் வாழ்வு முழுவதும் பயன்படுத்தி வந்ததுதான் காரணமோ? அதிர்ச்சி தரும்படியான, அமைப்பை தகர்க்கும்படியான எந்தப்பேச்சும் காந்தியின் எழுத்தில், பேச்சில் காணமுடியாது.

     காந்தியின் மரணம் என்பது நம்மை பாதிப்பதைவிட மறக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் எனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. காந்தி பற்றிய எழுத்துக்களை தொடர்ந்து கற்பது, பின்பற்றுவது ஒருவனின் வாழ்நாள் முழுமைக்குமான வேள்வியாகத்தான் இருக்கமுடியும். காந்தியைப் புரிந்துகொள்வது கடுமையான போராட்டமாக இருக்கிறது. இருந்தாலும் அவரின் குறையாத வசீகரம் எனக்குப் பெரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அவர் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்த நீங்கள் தந்த பிரேம் எழுதி காலச்சுவடு வெளியீடான நூல் உதவக்கூடும். நான் இன்று எழுதும், இனி எழுதும் அனைத்து எழுத்துகளுக்கும் அடிப்படைக்காரணம் நீங்களும், என்.ஸ்ரீராம் அவர்களும்தான். கூறினாலும், கூறாவிட்டாலும் அவற்றின் அர்ப்பணிப்பு தங்களுக்குத்தான். தங்களின் செயல்பாடுகள், ஆர்வங்கள், அறிவிலிருந்து, தேடலிலிருந்துதான் என் வாழ்விற்கான ஒளியைப் பெறுகிறேன். நன்றி. சந்திப்போம்.

அன்புடன்
அன்பரசு
13.11.14

நா.தர்மராஜன்
                                           
அன்புடையீர்,
     தங்கள் கார்டு கிடைத்தது. மொழிபெயர்ப்பாளராக விரும்புவதை அறிய மகிழ்ச்சி. எனக்கு 80 வயது. தாங்கள் வெகுதூரத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கல்வித்தகுதி பற்றி எழுதவில்லை. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்வதற்கு ஆங்கிலத்தில் திறமையோடிருக்க வேண்டும்.  கண்ணில் குறை எனக்கு உள்ளது. கார்டில்  எழுதியிருப்பதை படிக்க சிரமப்பட்டேன். தாங்கள் பத்திரிகைகளுக்கு குறிப்பாக மஞ்சரிக்கு மொழிபெயர்ப்புகளை அனுப்பலாம். அங்குள்ள ஆங்கில ஆசிரியரிடம் உங்கள் மொழிபெயர்ப்புகளைக் காட்டினால் திருத்தங்களைக் கூறுவார்.

நா.தர்மராஜன்.
                                                     14.11.2014
புலியூர் முருகேசனுக்கு,

     மதிப்பிற்குரிய இனிய நண்பர் முருகேசன் அவர்களுக்கு,  நலம் விரும்புகிறேன். நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு நாமிருவரும் இதோ இந்த தருணத்தில் உரையாடலை கடிதத்தில் தொடங்கி தொடர்கிறோம்.

     பெரியாரின் ஜாதி – தீண்டாமை களஞ்சியம் எனும் உரைகளை படித்தேன். தீண்டத்தகாதவர்களின் நலனுக்கான தீவிரமான செயல்பாடுகள் கொண்டவை பெரியாரின் எழுத்துக்கள், உரைகள், களப்பணிகள் என்பதில் எவ்வித ஐயமும் எனக்கில்லை. இவரின் கலகக் குரலை, நல்லெண்ணத்தை யாரும் களங்கப்படுத்த முடியாது என்றாலும், இன்று அவர் கூறிய கருத்துக்களைப் புரிந்துகொள்ளாமல் அவரின் உருவச்சிலைகளை வணங்கி, மாலைகள் இடுவது அவரின் சீடர்கள் அவரது நூல்களை படித்திருக்கிறார்களா என்றே சந்தேகம் கொள்ளவைக்கிறது. காந்தி – பெரியார் குறித்த முரண்பாடுகள் இவ்விடத்தில் எனக்கு ஏற்படுகிறது. பெரிய நிலவுடைமையாளர்களிடம் கூலி வேலை செய்யும் தலித்துகள் எப்படி  புரட்சியோ, போராட்டமோ செய்யமுடியும்? பிரச்சனை வெளியில் என்பதை விட மனதில் என்பதுதான் முக்கியமானது. தலித்துகளின் வீழ்ச்சிக்கு பார்ப்பனர்கள் தாண்டி மற்ற யாவரும் எதுவும் செய்யவில்லையா? தலித்துகளிடையே துரோகம் செய்த அவ்வினத்தைச் சார்ந்தவர்களும் நிச்சயம் இல்லாமலா இப்படி ஒரு கீழ்நிலை ஏற்படும்?

     மெட்ராஸ் திரைப்படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்ததா? வணிகத்திற்கான சமரசங்களோடும் இப்படம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. முக்கியமாக பாராட்டப்படவேண்டிய முயற்சி இது.
     தங்களின் பகத், தாஸ் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் வடிவம், கதை கூறும் முறை திரைப்படக்காட்சிகள் போல என் மனதில் போனில் விவரிக்க, விவரிக்க மேலெழும்பியது. பிரதி முழுமையடைந்துவிட்டதா? குறி இதழ் வந்துவிட்டதா? நான் தங்களுக்கு அனுப்பிவைத்த ‘நல்லசோறு’ சிறுகதையினை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். அது சரியான பார்வையினை, இலக்கினை வாசிப்பவருக்கு முன்வைக்க இயலாமல் தோற்றுவிட்டது. அதனை நன்றாக செம்மைபடுத்தவேண்டும்.

     தங்களுடைய சிறுகதைகள் பரவலாக அனைவரிடமும் செல்ல மாத இதழான ‘உயிரெழுத்து’, ‘உயிரோசை’, உள்ளிட்ட இதழ்கள் உதவக்கூடும். அனுப்பிவைக்க முயலுங்கள். நான் தங்களின் சிறுகதை குறித்து முடிந்தவரை அதை உள்வாங்கி சரியான முறையில் வெளிப்படுத்துகிறேன். எழுதியவர் யாராக இருந்தாலும் எனது பேச்சு மாறுபட அவசியமில்லை. வெற்றுப்புகழ்ச்சிகளுக்கு பலன்களை கருதும் பலர் இருக்கிறார்கள். வாசகரை முட்டாளாக கருதி ஒன்றினைச்செய்வது, வாசகனை புத்திசாலியாக நினைத்து பலவற்றை செம்மையாக தருவது என்பதில் நீங்கள் இரண்டாவது காரணத்தில் விளைவுகளை உருவாக்குபவராக இருக்கிறீர்கள். உள்ளடக்கம், கதை கூறும் முறை, வடிவம், சொற்கள் என புதுமையாக படிக்க சலிக்காத புதிய அனுபவம் தரும் கதைதான் தங்களுடையது என்று கூற நீங்கள் என் நண்பராக இல்லாவிட்டாலும் தயக்கமேதுமில்லை. உண்மை அதுதான்.

     ‘இன்டர்ஸ்டெல்லர்’ படம் பார்த்தீர்களா?  பாருங்கள்.

அன்புடன்,
அன்பரசு.

ஸ்ரீராம் அவர்களுக்கு,

     நலம் வாழ வேண்டுகிறேன். முன்னர் தங்கள் சிறுகதைகளைக் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, கடுமையான மனவருத்தம் கொண்டிருப்பீர்கள். தவறு என்னுடையதுதான். எதிர்பார்ப்பு எழுத்தாளனின் வெளிப்பாட்டையும் தாண்டி இருப்பது, அல்லது அப்படி இருக்க வற்புறுத்துவது எவ்வளவு பெரிய வன்முறை. நான் படைப்பு குறித்து பேசும்போது, எழுத்தாளர் என் நண்பர் என்று கருதுவதில்லை. எனக்கு கிடைத்த அனுபவங்களின் படி பேசுகிறேன்.

     மேற்படி நான் கூறும் எந்தக்கருத்துக்களுக்கும் நான் மட்டுமே பொறுப்பு. எனது சகோதரரிடம் வருத்தம் தெரிவிப்பது நம்மிருவரிடையேயான பிளவாகிப்போன மனநிலையையே மற்றவருக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.ஏன் எனக்கே கூட வருத்தமாக இருந்தது. எனது சகோதரரின் மூர்க்கமான அவமதிப்புகளுக்குப் பின் எந்த சங்கடப்படுத்தல்களுக்கும் நான் உள்ளாக விரும்பவில்லை. எனவே நான் அவரிடம் இருந்து விலகியே இருக்கிறேன். இருவருக்கும் இதன் மூலம் நன்மையாக முடியும்.

     எனது இன்றைய எழுத்துக்களுக்கு நீங்களும், இரா. முருகானந்தம் அவர்களும்தான் ஆதாரமும், ஆதர்சமும் கூட. நீங்களும், முருகானந்தம் அவர்கள் மட்டும்தான் என்னால் எழுதமுடியும் என்று நம்பிக்கை ஊட்டினீர்கள். சென்னையில் இருந்தபோதே மிகத்தெளிவாக உன்னால் எழுத முடியும் என்று கூறினீர்கள். நெருங்கிய உறவுகளும் ஒதுக்கி புறக்கணிக்கிற சூழலிலும், தங்களின் பேச்சுக்கள் இன்றும் கூட பெரும் மனதைரியத்தை தருகிறது.

     தங்களின் எழுத்துக்களையும் கூட மின்னூலாக தொகுத்தால் பின் அவற்றை தொகுப்பதில் எந்த வித மனவருத்தத்திற்கும் இடமிருக்காது. வீணை எஸ். பாலசந்தர் கூட தன் எழுத்துக்களை தொகுப்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார் என்று காலச்சுவடில் படித்தேன். இந்த முறையில் இரா. முருகானந்தம் அவர்களின் கட்டுரைகள், அவருக்கு நான் எழுதிய கடிதங்கள், அவருக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் பலவற்றையும் மின்னூலாக தொகுத்திருக்கிறேன். எனது வலைப்பூவிலும் வெளியிட்டிருக்கிறேன். உலகின் எங்கிருந்தும் அதனைப்பெற படிக்க முடியுமல்லவா!

     மொழிபெயர்ப்பு தொடர்பான பணிவாய்ப்புகளுக்கு முயற்சிக்கிறேன். நாளிதழ்களில் வரும் செய்திக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வலைப்பூவில் வெளியிடுகிறேன். சமுதாயத்திற்கான தனிமனித பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை மின்னூலாக்கி தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பிறகு அனுப்பிவைக்கிறேன். இனி எந்த உறவுகளையும் இழக்க நான் விரும்பவில்லை. மிக கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த இந்த காலத்தில் கற்றிருக்கிறேன். தற்போது சில பதிப்பகங்களுக்கான நூல் தட்டச்சு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அபி திரைப்படம் நிறைய பார்க்கிறானா? தங்களிடம் எம். சிவகுமார் எழுதிய சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு புத்தகம் இருக்கிறதா? எப்போதும் முன்னோடியாக பல நூல்களையும் வாசித்துவிடுவீர்கள். தற்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
என்றும் எனதன்பு,
அன்பரசு.
                          


                                                                
25.11.2014

முருகானந்தத்திற்கு,
மதிப்பிற்குரிய முருகு அண்ணாவிற்கு, வணக்கம்.
     நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். திருப்பூரார் மார்க்சிய – லெனினிய செயல்பாட்டாளர் கருணா மனோகரன் என்பவரின் நூல்களை தட்டச்சுப்பணிகளை எனக்குத் தந்தார். புத்தகங்கள் வாங்க பணமில்லாத நிலையில் இந்தவேலை எனக்கு எவ்வளவு உதவியாக இருந்தது தெரியுமா? காலச்சுவடின் சந்தாவும் முடிந்துவிட்ட வேளை அது. கிடைத்த பணத்தில் முதல்வேலையாக காலச்சுவடு சந்தா கட்டிவிட்டேன். இதற்காக செபியா நந்தகுமாருக்கு நன்றி கூறியே ஆகவேண்டும். அவர் தந்த பணம் இதற்கு பெரிதும் உதவியது. ஓப்பன் இதழில் பெண்களை முன்னிலைப்படுத்தி எடுத்துவரும் விளம்பரங்களைப்பற்றி எழுதியிருந்தார்கள். இது நல்ல ஆழ்ந்த கவனிப்பிற்கு உதாரணம். ஹவால்ஸ் அப்ளையன்ஸ், பி.சி ஜூவல்லர்ஸ், ஏர்டெல் வீடியோ கால், ரேமண்ட் கம்ப்ளீட் மேன் விளம்பரங்கள், பிரஸ்டீஜ் விளம்பரம் ஆகியவற்றின் கருத்துக்களை பற்றி அதனை எடுத்த விளம்பர நிறுவனங்களிடமே கருத்து கேட்டிருந்தார்கள். ஹவால்ஸ் நிறுவனம் ஜேடபிள்யூடி நிறுவனம் எடுத்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குறித்த மொழிபெயர்ப்பைத்தான் நான் முதன்முதலில் செய்தேன். சமையல் செய்வது என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல என்று நேரடியாக, நேரடியாகப் பேசும் விளம்பரம் ஹவால்ஸ் நிறுவனத்தினுடையது.
                                   
            பெண்கள் குறித்த கருத்துக்கள் மாறிவரும் காலமிது. இக்கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது ஏர்டெல் நிறுவனத்தின் வீடியோ கால் விளம்பரம்தான். இந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்க கூடும். பெண் அலுவலகத்தில் கணவனுக்கு மேலதிகாரியாக இருப்பாள். அவள் கணவனுக்கு விரைவாக செய்யவேண்டிய வேலையை நைட்ஷிப்ட் இருந்து செய்துவர பணிப்பாள். அவன் அந்த வேலையச்செய்து கொண்டிருக்கும்போது, அப்பெண் தான் தயாரித்த உணவு குறித்த வீடியோ படத்தினை அவனை அழைத்து காட்டுவாள். என்ன சொல்ல வருகிறார்கள் புரிகிறதல்லவா உங்களுக்கு? அதற்கு விளக்கமாக தப்ரூட் விளம்பர நிறுவன அதிகாரி, ஆண் வேலை முடித்து சென்றிருந்தால் அவன் சமையல் செய்திருப்பான். அவ்வளவுதான் இதிலென்ன இருக்கிறது? என்றதுடன், இந்த கண்டனங்களே எங்களுக்கு போதுமான விளம்பரத்தைக்கொடுத்திருக்கிறது என்கிறார். என்ன ஐடியாவோ, வணிகத்தில் கருணைக்கு இடமில்லை எப்போதும். மெக்டொனால்டு உணவகத்தின் விளம்பரம் யதார்த்த நிலைமையை கூறிச்செல்லுகிற விளம்பரம். கணவனுக்கும், தனக்கும் மெக்டொனால்டில் உணவு ஆர்டர் செய்து விட்டு இருவரும் அதை உண்பதுபோல் இருக்கும். அதற்கு முன் அவள் கூறும் வசனம்தான் இதில் முக்கியமானது. வாய்ப்பிருந்தால் அதை காண முயலுங்களேன்.
            இங்கே இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். சகோதரரது நடவடிக்கைகள் என்னை பாதிப்பது இயல்பானது. அதைப்பற்றி நெருங்கிய நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல்தான் இருந்தேன்; அவர்கள் என்னிடம் எனது சகோதரரின் செயல்பாடுகள் தங்களை எப்படி பாதித்தது என்று கூறும்வரை. மேலும் தங்களிடம் நான் முன்கூட்டியே கூறிய விஷயங்கள். முன்பு இந்த நண்பர்கள் கூறிய விஷயங்களால்தான் தவிர தனிப்பட்ட எவ்வித காழ்ப்புணர்ச்சியினாலுமல்ல. நான் முழுக்க என்னுடைய நேரங்களை புதிய ஒன்றை சிறந்த ஒன்றை எழுத முயற்சிக்க செலவழித்துவருகிறேன். என் வாழ்வை வெறுப்பில், பழிவாங்க செலவழிக்க நான் விரும்பவில்லை. சகோதரரின் மூலம்தான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் என்பது உண்மை. பிறகு ஏற்பட்டு நெருக்கம் அனைத்தும் இருவரும் ஒருவரையொருவர் சரியாக புரிந்துகொள்ள முயற்சித்த தன்மையினால்தான் இன்றுவரையும் நம் உறவு எவ்வித வருத்தங்களும் இல்லாமல் பயணிக்கிறது என்று நம்புகிறேன். உறவுகளை பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது. அதிலும் நெருக்கமான சில உறவுகளை. என்னுடைய நண்பர்கள் எதன் பொருட்டும் பாதிக்கப்படுவதை என்னால் சகித்திருக்க முடியாது. எனவேதான் தங்களுக்கு எச்சரிக்கை செய்தேன். முன்முடிவுகள் எதன் பொருட்டும் எடுக்க நான் விரும்பவில்லை. சங்கடங்களைத் தவிர்க்க சந்திப்புகளை கைவிடுவது மோசமானதல்ல.
நன்றி! சந்திப்போம்.
அன்பரசு.
                                                                                                                        4.12.2014
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
            வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நாமிருவரும் பல்வேறு சூழல்களில் எழுதி பகிர்ந்துகொண்ட கடிதங்கள்காற்று மழை வெயில் வெளிச்சம்எனும் தலைப்பில் மின்னூலாக ஃப்ரீதமிழ்இபுக்ஸ். காம் இணையதளத்தில் அழகிய வடிவமைப்புடன் எளிதில் தரவிறக்கும்படியான மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அந்த இணையதளத்திற்கு அனுப்பும்போது, நான் தங்களின் எழுத்துக்களையே பெரிதும் நம்பினேன். என் நம்பிக்கை வென்றுள்ளது. இது என்னால் உங்களுக்கு செய்ய முடிந்த சிறிய உதவி. தங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து காலவௌ¢ளத்தில் நீடிக்கச் செய்ய என்னாலான ஒரு பங்கு. அவ்வளவுதான்.
            ‘தெருவிளக்கு என்னும் தலைப்பில் புதிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைக்கொண்ட நூல் ஒன்றினை நான் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். வாசிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைப்பற்றி இன்னும் மேம்படுத்த முடியுமா? என்று கூறுங்கள். அது என் எழுத்தை மெருகேற்ற மாற்றிக்கொள்ள உதவக்கூடும். வேறென்ன? 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் நேரு கூறியது இன்னும் ஆச்சரியங்கள் ஏற்படுத்துகிறது. அவர் எல்லைகள் தாண்டி அனைவரையும் மனிதர்களாக பார்த்திருக்கிறார். அதனால்தான் அவரால் எந்த வெறுப்பும் இன்றி மக்களுக்கான திட்டங்களை செம்மையாக தீட்ட முடிந்திருக்கிறது. இக்கட்டுரையை மொழிபெயர்க்க வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ச்சியான இயக்கத்திற்கு உடல் பழக பல நாட்கள் ஆகும்போல. முயற்சிசெய்துகொண்டிருக்கிறேன். www.Freetamilebooks.com குழுவினரின் ஆதரவினால்தான் நான் எழுதிய மூன்று புத்தகங்கள் இந்த தளத்தில் இடம்பெற்றன. இவர்களின் ஆதரவு எனக்கு மேலும் தரமான படைப்பைத் தருவதற்கான உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தருகின்றன. அக்குழுவினரை கோமாளி மேடையில் அச்சிட நண்பர்களைக்கேட்டுக்கொண்டுள்ளேன். உலகம் முழுக்க இருந்து அனைவரும் ஒன்றாக கூடுவது காலமாற்றத்திற்கேற்ப தமிழை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் ஒரு அற்புதமான பணிக்காக என்பது எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது. ஒன்றாக கரங்கள் கோர்த்து நிற்கும்போது பிறக்கும் நம்பிக்கைக்கு என்ன அளவீடு இருக்கிறது?
            I saw the devil, The Chaser, The man from now here, Pieta எனும் படங்களைப்பார்த்தேன். இவை கொரியாப்படங்கள்தான் அனைத்தும். இதில் முதல் படம் பெண்களை கடத்திவந்து கற்பழித்து கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யும் ஒரு பள்ளி வேன் டிரைவரின் கதை. இதில் டிரைவராக நடித்திருக்கும் சைகோ கொலைகாரன் அசத்தலான நடிகர். படத்தை தூக்கி நிறுத்துவதே அவர்தான். சாதாரண பழிவாங்கும் கதையாக இல்லாமல் அந்த சைகோவினால் பாதிக்கப்பட்ட தேசிய புலனாய்வு அதிகாரி தன் கர்ப்பிணியான மனைவியைக் கொன்றவனை காவல்துறைக்கு முன்பே கண்டுபிடித்து அவனைக்கடுமையாக அடித்து உதைத்துவிட்டு, ஜி.பி.எஸ் கருவியை அவன் உடலில் பதித்து விட்டுவிடுகிறான். சைகோ டிரைவர் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து வந்து அவனின் சைகோ கொலைகளைத் தடுத்து அவனை அடித்து கடுமையாக பலவீனப்படுத்துகிறான். புத்திசாலியான சைகோ கொலைகாரன் தன்னால் பாதிக்கப்பட்டவன்தான் தன்னை அடித்து வீழ்த்துகிறான் என்பதை உணர்ந்துகொண்டவன், ஒரு சமயத்தில் தன் உடலில் ஜி.பி.எஸ் கருவி இருப்பதை அறிந்துகொண்டு அதனை எடுத்தெறிந்துவிட்டு, தான் கொலைசெய்த பெண்ணின் மிச்சமிருக்கும் சகோதரி, அவளின் அப்பாவினை கொலை செய்யப்போகிறான். பின் என்னவானது? புலனாய்வு அதிகாரி தன் மாமனாரைக் காப்பாற்றினானா? சைகோ கொலைகாரனை ஆமை போல பின்தொடர்ந்துகொண்டிருக்கும் காவல்துறை என்ன செய்தது? என்ற கேள்விகளுக்கு ரத்தம் சொட்ட சொட்ட பதிலளித்திருக்கிறார்கள். மென்மையான மனம் கொண்டவர்கள் பார்த்தால் மயங்கிவிழ வாய்ப்பு அதிகம். எதையும் தணிக்கை செய்யவில்லை. அப்படியே அப்படியே.
மற்ற படங்களும் நாயக துதி கொண்டவைதான் என்றாலும் தி மேன் ஃப்ரம் நவ் ஹியர் சிறிது பரவாயில்லை. ஆதரவற்ற குழந்தைகளை தொழிலாளர்களாக்குவது, போதைப்பொருட்கள் கடத்தப் பயன்படுத்துவதுபின் அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்வது என இருக்கும் குழுவைப்பற்றிய படம். கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை  ஒரு குற்றவாளிக்கும்பலின் செயல்களினால் பறிகொடுத்து பாதிக்கப்படும் காவல்துறையைச் சேர்ந்தவனான நாயகன் தன் பணியை விட்டுவிலகி, அடகுக் கடை வைத்து நடத்தியபடி தனியாக இருக்கிறான். அவன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பார் டான்ஸ் பெண்ணுக்கு இருக்கும் ஒரு மகளுடன் இவனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பார் டான்ஸ் பெண் போதைப்பொருட்கள் கொண்ட பை ஒன்றினை கடத்தி வந்துவிட, அவள் அதனை   அவன் நாயகனுக்கு தெரியாமல் அடகுவைத்துவிட விபரீதம் புரியாமல் அதனை வைத்துக்கொண்டு பணத்தினை பார்டான்ஸ் பெண்ணுக்கு அளிக்கிறான். போதைப்பொருட்களை இழந்த கும்பல் அதைத்தேடி வந்து குழந்தையை பணயமாக வைத்துக்கொண்டு நாயகனை மிரட்ட, அவன் பையை எடுத்துதந்துவிட்டாலும், அவர்கள் அந்த குழந்தையை போதைப்பொருட்களை கடத்தும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். நாயகனை குழந்தையை விட்டுவிடுவதாக கூறி ஒரு இடத்தில் போல¦சிடம் மாட்டிவிடுகிறார்கள். குழந்தையை மீட்டானா நாயகன்?, என்னவானாள் அக்குழந்தையின் தாய்? உணர்ச்சிகரமான அக்குழந்தைக்கும் அவனுக்குமான உறவு என்பதெல்லாம் நாம் பார்த்து ரசிக்கவேண்டிய காட்சிகள். பியேட்டா படம் கிம்கிடுக்கினியுடையது. அம்மா, மகனின்  தவறுகளை ஏற்பது மனம் கனக்கும் படி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இயக்குனருடையது அதி புனைவான உலகம். முழுக்க காட்சிரீதியான ஓவியம் போல நகருகிற படம் இது. நன்றி. சந்திப்போம்.
அன்பரசு.




                                                                                                            5.12.2014
மதிப்பிற்குரிய இனிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு,
வணக்கம். நலம்தானே? மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். www.freetamilebooks.com எனும் இணைய தளத்தில் இரா. முருகானந்தம் அவர்களும் நானும் எழுதிப் பகிர்ந்துகொண்ட கடிதங்களின் செம்மையான மின்னூல் வடிவம்காற்றுமழைவெயில்வெளிச்சம் எனும் பெயரில் அழகிய வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது. இதனை தங்களது கைபேசியிலேயே தரவிறக்கிக்கொள்ளும் வசதியும் இத்தளத்தில் செய்யப்பட்டுள்ளது. தங்களிடம் இருக்கும் கைபேசி ஆப்பிளா, அல்லது ஆண்ட்ராய்டோ என எது இருந்தாலும் இந்த மின்னூலை எளிதில் விலையில்லாது தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ள மின்னூல்கோப்பானதெருவிளக்கு எனும் 18 கட்டுரைகள் கொண்ட மொழிபெயர்ப்பு நூலினை தங்கள் கைபேசியில் சேமித்துக்கொண்டால் பயணத்தில் கூட படிக்க முடியும். காலத்திற்கான வேகத்தில் இவை அவசியம் என்று நம்புகிறேன். நூல்களின் உள்ளடக்கம் குறித்த அதற்கான தரத்தினை உறுதிப்படுத்திய பின்தான் வெளியிடப்படுகின்றன. உலகம் முழுவதும் இருந்து இந்த மின்னூல் ஆக்கத்திற்கு பலரும் பங்களிக்கிறார்கள். சமயம் கிடைத்தால் பார்வையிடுங்கள். வேறு யார் என்னைப்போன்ற உதவாக்கரைகளுக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள். இரா. முருகானந்தத்திற்கு பாவண்ணன் எழுதிய கடிதங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை. அதைச் செய்வதற்கு முன் சில பணிகள் உள்ளன. அதன்பின் அதைத்தொகுத்து தங்களுக்கு அனுப்பி வைப்பேன்.
மெய்யருளிடம் பேசினால் ஒரு வருடம் பொறுத்துக்கொள் என்கிறார். என்னைத்தேற்ற கருமாண்டம்பாளையம் முன்னாள் ஆசிரியரும் இந்நாள் பிரபல ஜோதிடருமான ராமசாமி கவுண்டரிடம் தாய் அழைத்துபோக, உன்கிட்ட பணம் இருக்காது, இல்லையல்ல, ஒரு வருஷம் போகட்டும். பார்ப்போம்; வீண்பழி, பெண்கள் பழக்கம் வேண்டாம்; வாயை மூடிப்பேசு; என்று அடுக்கியதில் எனக்கு வெறுத்தே போய்விட்டது. மொழிபெயர்க்க பல பத்திரிகைகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுமட்டும்தான் மகிழ்ச்சி இப்போது. சுய புலம்பல் அதிகமாகிவிட்டது இல்லையா? தங்களின் சிறுகதையில் ஏதாவதொன்றை இந்த இணையதளத்திற்கு கொடுக்க தங்களுக்கு விருப்பமிருக்கிறதா? இதற்கு உங்களுக்கு பணம் ஏதும் கிடைக்காது. இதில் மின்னூல், அட்டை உருவாக்கம், பல கைபேசி இயங்குதளம் உள்ளிட்டவற்றுக்காக உழைப்பவர்களுக்கும் இதில் ஏதும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் தொடர்ந்து பல நவீன வழிகளில் உலக தமிழ்மக்களை சென்றடையும். அவ்வளவுதான். தங்களின் எழுத்துப்பணி எப்படி செல்கிறது? பல இதழ்களுக்கும் எழுதுகிறீர்களா? புதிய படங்களை பார்க்கிறீர்களா? கேள்விக்குறிகள் அதிகமாகிவிட்டன. விடைபெற்றுக்கொள்கின்றேன். நன்றி.
வாழ்த்துக்களுடன்,
அன்பரசு.
                                                                                                                        11.12.2014
மதிப்பிற்குரிய முருகு அவர்களுக்கு,
     நலம்வாழ வாழ்த்துகிறேன். திசைகாட்டி எனும் எஸ். வைதீஸ்வரன் எழுதிய கட்டுரைத்தொகுப்பை படித்தேன். பல உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான கணங்களை கவிதைபோலான மொழியில் பகிர்ந்திருக்கிறார்.
     பி.ஜே.பி தொடர்ந்து தன் பிரிவினைவாத செயல்களை பெருமளவில் மக்கள் பணத்தைக்கொண்டே நிகழ்த்துகிறது. ஜியோ பார்ஸி எனும் திட்டத்திற்காக அரசு ரூ.10 கோடியை அளித்துள்ளது. இந்த பணம் செலவிடப்படுவது எப்படி தெரியுமா? பார்ஸி மக்கள் தங்களுக்குள்ளேயே அகமணம் செய்துகொள்வதை ஊக்கப்படுத்துவதற்கான விளம்பரப்படங்கள் எடுக்கவும், அத்தகைய கருத்துக்களை பரப்பவும்தான் என்றால் என்றால் பாருங்கள் நிலைமை எப்படி சென்றுகொண்டுள்ளது என்று. பார்ஸி கோவில்களில் மற்ற மதப்பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை யாரும் அங்கு தடுப்பதில்லை. ஆனால் மற்ற மத ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களை அங்கே தீண்டத்தகாதவராக நடத்தி கோவிலில் உள்ளே அனுமதிப்பதில்லை. நேரடியாக வணிகநலன்களுக்காக மக்களைப்பிரித்துவிட்டு, தேசியம், வளர்ச்சி என்றெல்லாம் பிதற்றுவது சரியானதாக இருக்கமுடியுமா? மேற்குறிப்பிட்ட கட்டுரை அவுட்லுக் இதழில் வெளிவந்துள்ளது.
     தலித் இயக்கங்களில் அதில் பங்கு பெற்ற பலன் பெற்ற இளைஞர்கள் ஏன் தங்கள் பங்களிப்பை, சமுதாயத்திற்கு அளிக்கவில்லை என்ற கேள்வி எனக்கு அண்மையில் எழுந்தது. ஏன் என்றால் பல சலுகைகள், வசதிகள் அனைத்தும் கொடுத்தும் இன்னும் ஏன் நிமிராத சமூகமாகவே இருக்கிறது என்று எனக்கு சந்தேகம். ஆனால் அம்பேத்கர் இதுபற்றி முன்னமே எழுதியிருக்கிறார்.
     எந்த இனக்குழுவும் தனக்கு முன்பு நடந்த பிரச்சனைகளையும், அவற்றின் காரணங்களையும் அறியாது வாழ்ந்தால் அவை மீண்டும் நடப்பதை தவிர்க்கமுடியாது போகும் என்பதை வரலாறு அறிந்தவர்கள் கூறுவார்கள். தலித் சமூகத்தில் தொடர்ச்சியாக அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் என்று பலர் தம் சமூகத்திற்காக உழைத்தாலும் , ஆத்மாவை விற்று பிழைப்பு நடத்தும் சிலரால் அனைத்தும் வீணாகப்போய்விடுகின்றன. மேற்கூறியவர்களின் உழைப்பினால் பெற்ற அனைத்தையும் அனுபவித்து வாழ்க்கையை வாழும் தலைமுறையினர் ஏனோ தம்மை சமூகத்திலிருந்தே துண்டித்துக்கொள்கின்றனர். இதனால்தான் ஒரு கடுமையான பிரச்சனை ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள அவர்கள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது. எம்.ஜி. சுரேஷ் ‘அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள் ’ எனும் சிறுகதைத்தொகுப்பைப் படித்தேன். 17 கதைகளும் தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை அளிக்கின்றன. நன்றி!
அன்புடன்,
அன்பரசு.




                                                     11.12.2014

அன்பிற்குரிய இனிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு,
     நலமா? நான் தங்களுக்கு அனுப்பி வைத்த மின்னூல்களை நீங்கள் பார்வையிட்டாலே போதுமானது. அவற்றின் தரம் அவற்றை பிரதி எடுக்க, பதிப்பிக்க ஏற்ற தரத்தில் தயாரிக்கப்பட்டது என்றாலும், அதிக பக்கங்கள் கொண்டது என்பதால் பிரதி எடுக்க அதிகசெலவு பிடிக்கும். நான் சென்னையில் இருந்தபோது எனக்கு பெரும் ஆதரவாகவும், என்மேல் நம்பிக்கை கொண்டும் இருந்தவர் நீங்கள் ஒருவர்தான். அதனால் நான் தயாரிக்கும் எந்த ஒரு புதிய மின்னூலையும் தங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். பின்னாட்களிலும் அனுப்பி வைக்க முயலுவேன்.
     ‘அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்’ எனும் எம்.ஜி. சுரேஷின் 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பைப் படித்தேன். கணக்கீட்டாளர்கள், நிகாமாவின் கண்ணீர், அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள், ஒரு கதையும், ஒவ்வொரு கதையும், செய்திகள் எனும் கதைகள் எனக்கு பிடித்தமானவை. அனைத்து கதைகளுமே வாசிக்கின்ற வாசகனை ஏமாற்றாதவை எனலாம். சுய எள்ளல், பகடி என்று பயணிக்கின்ற வசீகர வடிவைக்கொண்டுள்ள எழுத்துக்கள் இத்தொகுப்பு கதைகள். சில கதைகள் இதழ்களின் நோக்கிற்கு ஏற்றாற்போல எழுதப்பட்டுள்ளன என்றாலும் மற்ற கதைகள் கதை என்று கூறமுடியாத ஒரு வடிவத்தை வாசிப்பின் வழியே பெறுகின்றன.
     சென்னை புத்தகச்சந்தையில் சமூகநீதிப்போராளி, நீயா? நானா? புகழ் திரு. இரா. முருகானந்தம் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க முடிவெடுத்துள்ளார். நீங்கள் புத்தகங்கள் வாங்க பட்டியல் தயாரித்துவிட்டீர்களா? நன்றி!
அன்புடன்,
அன்பரசு.

                                                           15.12.2014
அன்புள்ள முருகு அவர்களுக்கு,
     வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நான் இன்று இரண்டு விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று, ஜியோ பார்ஸி என்று ஒரு திட்டத்தினை மத்திய அரசு அந்த இன மக்களுக்காக தொடங்கி, அதற்கு பத்து கோடி ரூபாய் நிதியளித்திருக்கிறது. பார்ஸி இனமக்களின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதால், அதனைத்தவிர்க்க, சுத்தமான பார்ஸி ரத்தத்தை உருவாக்க, அவர்களின் பார்ஸி இனத்திற்குள்ளாக திருமணம் செய்துகொண்டு, குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ளச்சொல்லி, பிரச்சாரம், விளம்பரம் செய்யப்படுகிறது. இதை பலர் ஆதரித்தும், சில சுதந்திரச்சிந்தனையாளர்கள் எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள்.
     இங்கு வேறுவிதமாக அழுத்தம் செயல்படுத்தப்படுகிறது. பார்ஸி இன ஆண்கள் வேறு மதம் சார்ந்த பெண்களை திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு வழிபாட்டு ஸ்தலத்தில் எந்த வித தடையும் இல்லை. ஆனால், அதுவே, பெண்கள் வேறு மதம் சார்ந்த ஆணைத்திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இக்கட்டுரை பலரிடம் கருத்து கேட்டு முழுமையான கட்டுரையாக அவுட்லுக் இதழில் வந்துள்ளது.
     இதில் நான் பிரச்சனைக்குரியதாக பார்ப்பது, நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து பார்த்துக்கொள்வது இன்றைய பொருளாதார அழுத்தத்தில் சாத்தியமானதா? நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தால் அதன் தாயின் உடலில் என்ன சக்தி இருக்க முடியும்? இன்று பெண்கள் ஆண்கள் செய்யும் பல விஷயங்களை செய்யத்தொடங்கிவிட்டார்கள். இந்த சூழலில் இப்படி கூறுவது அதுவும் தங்கள் ஜாதிக்காக, சமுதாயத்திற்காக என்று கூறுவது பொருத்தமானதாக நான் நினைக்கவில்லை. இங்கு நான் ஒன்றைக்குறிப்பிடவேண்டும். பழங்குடி மக்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் என்று கண்டிப்பாக வற்புறுத்தி, விலங்குகளைவிட கேவலமாக அவர்களை நடத்தி, எந்த சுகாதாரமும் இல்லாத சிகிச்சைகளை அளித்து அவர்களை கொல்கிறது. ஆனால் அதேசமயம் அவர்கள் எந்த சாதியிலும் இல்லாது அப்பாற்பட்டவர்கள். சாதியில் இருப்பவர்களின் வாக்குகளைப்பெற அவர்களுக்கு இதுபோல சலுகைகள் அளிப்பது. திரும்ப நாம் பின்னோக்கி செல்வதை ஊக்குவிக்கிறதா மத்திய அரசு? இந்த கேள்வியே அபத்தம் ஆமாம்தானே? நடப்பு அரசின் தத்துவமே அதுதானே? பிரிவினை, கலவரங்கள், அதில் ஈட்டும் வணிக லாபங்கள். யார் தயங்கிப்போக முடியும்?
     மாணவர்களுக்காக மகாத்மா – ஏ.எல். ராஜேஷ் என்பவர் எழுதிய கிராபிக் வடிவில் அதாவது காமிக்ஸ் முறையில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றினை கூறும் நூல் ஒன்று வெளியாக இருக்கிறது. இது நடப்பினை புரிந்துகொண்டு செயல்படும் திறனை குறிக்கிறது. விலை ரூ.100.
     நவஜீவன் ட்ரஸ்ட்தான் காந்தியின் நூல்களை அச்சிட்டு வெளியிடுகிறது. அதன் விற்பனை குறித்த விஷயங்களை நவஜீவன் வித்யாபீடம் எனும் குஜராத்திலுள்ள தற்போது சுதர்சன் அய்யங்கார் என்பவர் நிர்வாகம் செய்யும் ஆசிரமத்தின் மூலம் செய்கிறார்கள். நவஜீவன் ட்ரஸ்ட் நிர்வாக மேலாண்மை இயக்குநரான விவேக் தேசாய் என்பவர் ஆர்.எஸ்.எஸ் சாய்வு கொண்டவர் போல. காந்தியின் எழுத்தில் உள்ள வரலாற்று சம்பவங்களை மத்திய அரசின் நோக்கங்களுக்கேற்ப மாற்றி எழுதி, அச்சிட்டு வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த செயல்பாடுகள் இங்கு மட்டுமல்ல, காந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு, கடிதங்கள் ஆகியவற்றை அச்சிடும் பப்ளிகேஷன் டிவிஷன் அமைப்பும், அதில் உள்ள பல்வேறு எழுத்துக்களை மறுதணிக்கை செய்து வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். இதற்கு சுதர்சன் அய்யங்கார் கடும் எதிர்ப்பைத்தெரிவித்து இருக்கிறார். காரணம் பகவத் கீதை பற்றி காந்தி எழுதிய நூலின் அட்டைப்படத்தில் கடவுளின் சுதர்சனச்சக்கரம் இடம்பெற்றுவிட்டது. அதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, சுதர்சன்அய்யங்கார் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று இயல்பாக கூறியிருக்கிறார் விவேக் தேசாய்.  சுதர்சன அய்யங்காரின் கூற்று என்னவென்றால், ‘’காந்தியின் எழுத்து எந்த தணிக்கையும் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்படவேண்டும். அட்டைப்படத்தில் உள்ள சுதர்சனச்சக்கரம் நீக்கப்படவேண்டும். காந்தி எந்த மதத்திற்கும் ஆதரவாக செயல்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
     வரலாறு என்பது என்ன? வென்றவர்கள் தனக்கு ஏற்ப எழுதிக்கொள்வதுதானே! பல பல்கலைக்கழகங்களில் நடப்பு மத்தியஅரசு வந்தவுடன் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய பாடமாக உள்ள புத்தகங்களை நீக்கிவிட்டு, புராண சம்பவங்களை உள்நுழைக்கத்தொடங்கிவிட்டார்கள் கர சேவகர்கள். இதுதான் இன்றைய நிலைமை. நன்றி! சந்திப்போம்.
அன்புடன்,
அன்பரசு.
                                                           25.12.2014
அன்புள்ள முருகானந்தம்,
வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? உடல்நலம் சற்று தேறி வேலைகளை செய்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். சற்று முன்னாடியே எழுதியிருக்க வேண்டிய கடிதம்தான் இது. தாமதமாகிவிட்டது. முன்கூட்டியே புத்தாண்டு 2015 வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டு பல நல்ல செயல்பாடுகளையும், ஊக்கமான மனநிலையையும் தங்களுக்கு அளிக்கவேண்டுமென இயற்கையை வேண்டுகிறேன்.
     ஓபன் இதழில், பார்ஸி மக்களின் விஷயங்களைப்பற்றி மீண்டும் ஒரு கட்டுரை படித்தேன். எந்த அன்பும், பிடிப்பும் இல்லாமல் சமுதாயத்திற்கு என்று ஒரு பெண்ணை சொந்த சாதியில் உறவுக்காரராக பார்த்து எப்படி மணமுடிக்க இயலும் என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் செய்தேன் என்று ஒருவர் கூறுகிறார். இந்த ஒரு இனம் மட்டுமல்ல அழிவைச் சந்திப்பது, உலகில் உள்ள பல பழங்குடி மக்களின் நிலையும் இதுதான். அவர்களின் வாழிடங்கள் அழிவது, நகரத்தில் தொழிலாளியாக இடம்பெயர்வது என்று பல காரணங்களை கூறலாம்.
 நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிற விளம்பரங்கள் வருகிறது பார்ஸி இனமக்களை வற்புறுத்தி தங்களின் சாதிக்குள் திருமணம் செய்யச்சொல்லி. ஆனால் ஒன்று, இன்றைய பொருளாதாரச்சூழலில், ஆணும் பெண்ணும் குடும்பத்திற்காக உழைக்கின்ற நெருக்கடி. எப்படி சமுதாயத்தை காப்பாற்ற பல குழந்தைகளை பெற்றுக்கொள்வது? அந்த அளவு ஆரோக்கியமான உடல்நலன், மனநலன், பொருளாதாரம் எத்தனைபேரிடம் இருக்கிறது? வேண்டுமென்றால் இருப்பவர்களின் நகல்களை வேண்டுமானால் அரசு இன்னும் கொஞ்சம் செலவு செய்து வைத்துக்கொள்ளலாம். அரிதான இனப்பிரிவு என்று அருங்காட்சியத்தில் பாதுகாத்துவைக்கலாம்.
     பெண்கள் படிக்கவெளியே செல்கிறார்கள். அங்கு பலரைச்சந்திக்கிறார்கள். அவர்களில் ஒருவரை விரும்புகிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். தூய்மையான வேறு சாதிக்கலப்பில்லாத ஒருவரை எந்த இனக்கலப்பிலும் இன்று பார்க்க முடியாது.
     புலியூர் முருகேசன் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு உள்ளிட்ட நான்கு புத்தகங்கள் அவரின் ஆம்பிரம் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது. விழா 28 ஆம் தேதி கரூரில் நடைபெறுகிறது. தாங்கள் வருவீர்களா? வாய்ப்பிருந்தால் சந்திப்போம்.
அன்புடன்,
அன்பரசு.




ஸ்ரீராம்
                                                           30.12.2014  
     மதிப்பிற்குரிய ஸ்ரீராம் அவர்களுக்கு, இயற்கையின் ஆசிர்வாதங்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். 2015 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டுத் தருணமிது. தங்கள் மனைவி, மகன் உட்பட அனைவரும் ஆரோக்கியம் மேம்பட்டு, மகிழ்ச்சியான வாழ,உளமார இறையை துதிக்கிறேன்.
     இந்த 2015 ஆம் ஆண்டு, கடந்தபோன ஆண்டைவிட உற்சாகம் ஊட்டும்விதமாக தங்களின் செயல்பாடுகள் அமையட்டும். இந்த ஆண்டு பல சிறுகதைகள் எழுதவும், அவற்றிற்கான செறிவான அங்கீகாரங்கள் கிடைக்கவும், அதற்கான சூழலைத் தாங்கள் பெறவேண்டும். தாங்கள் ஃபேஸ்புக்கில் படித்தவற்றைப்பற்றியும், பார்த்த படங்கள் பற்றியும் எழுதிவருவதை அறிந்தேன். எத்தனைபேர் இதனை நேர்மையாக பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள்? பல  புதிய விஷயங்களை அறிய இதுபோன்ற பல மனிதர்கள் உலாவும் கலாச்சார வெளிகள் காலத்தின் அவசியம். பின்னாளில் இதில் நீங்கள் எழுதும் எழுத்துக்கள் கட்டுரையாக மாறக்கூடும். தங்களின் செயல்பாட்டிற்கு என் வாழ்த்துக்கள்.
     தங்களிடம் கணிசமாக சேர்ந்திருக்கும் கடிதங்கள் தங்களுக்கு பிராண சங்கடத்தை படிக்கும் போது ஏற்படுத்தக்கூடும். எந்த போலித்தனங்களுமில்லாமல், என் அறிவிக்குட்பட்டு, சில விஷயங்களை என் நண்பராக நினைத்து தங்களிடம் பகிர முயன்றேன். அது சரியாக அதனை பிரதிபலிக்கலாம் அல்லது அதில் தோல்வியுற்றிருக்கலாம். முன்முடிவுகளின் அபாயத்தை நான் தங்களிடம்தான் கற்றுக்கொண்டேன். இது எனக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது. சிறுகதைகள் பற்றி முன்வைத்த கருத்துக்களில் சிலவற்றை மட்டும் நீங்கள் எடுத்துக்கொண்டு வருத்தப்படுவதாகத் தோன்றுகிறது. சில சிறுகதைகளை நன்றாக இருப்பதாக பாராட்டியும் கடிதம் எழுதியிருக்கிறேன். சிறுகதைக்கான பெரிய அங்கீகாரங்கள் தங்களுக்கு கிடைக்கும்போது, நான் தங்களுக்கு எழுதும் கடிதங்களில் குறிப்பிடும் கருத்துக்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்ட என் அறிவிற்கு எட்டியதை எழுதுகிறேன். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் நான் தங்களுக்கு என்று எழுதிய கடிதத்தை மற்றவர்களிடம் காண்பிப்பது, நம்மிருவருக்கிடையிலான பிளவான உறவைத்தான் குறியீடாக காட்டுகிறது என நினைக்கிறேன். அருகிலிருக்கும் மனதிற்கு உரக்கப்பேச என்ன அவசியம் வந்தது? உண்மையான அன்பிற்கு என்ன மிச்சம்? நான் எதையும் தங்களிடம் எதிர்பார்த்து வரவில்லை. கிடைத்தது ஏளனங்களும், புறக்கணிப்புகளும்தான். சிறிது காலம் தேவைப்படுகிறது அனைத்திற்கும்.
நன்றி!
அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
அன்பரசு.

இரா.முருகானந்தம்
                                                                  30.12.2014
அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு,
     வணக்கம், இந்த புத்தாண்டு தங்களுக்கு இனியதான ஒன்றாக அமைய இறையை வணங்குகிறேன். புலியூர் முருகேசன் அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு கரூர் சென்றிருந்தேன். அங்கு சென்றதற்கு ஒரே பிரயோஜனம் என்னவென்றால், கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் பேசியதுதான். அவர் சில விஷயங்களை நேர்மையாக நேருக்குநேராக பேசினார். வலியாகத்தான் இருந்தது. ஆனால் உண்மை அதுதான். நான் எதிர்பார்த்தது வேறு. மற்றபடி விழா கடுமையான சோதனையாக இருந்தது. மதுரை மன்னர் பெயரில் ஒருவர் வரலாறு வகுப்பெடுத்தார். அலுப்புதான். நேரம்காலம் தெரியாமல் வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் விட்டு வதக்கியது போல் பேசினார்கள். சமகால பதிப்புச்சூழலை வா.மு. கோமு மட்டும்தான் அங்கதமாக பேசினார். மற்றபடி வந்தவர்கள் எல்லாம் தீவிரப்புரட்சி வேண்டும்…டும்..டும் ஆட்கள்தான். ஸ்பீக்கர் அருகிலே நானும் பிரகாஷ் அண்ணாவும் உட்கார்ந்துவிட தலை விண் விண் என்று வலியெடுக்க தொடங்கிவிட்டது. அரங்கத்தை காலை 11 மணிக்கே சென்று ஒழுங்கமைப்பதில் உதவி செய்தேன். உடல் களைப்போடு, தலைவலியும் சேர, கிளம்பலாம் என்று முடிவு செய்தேன். க.சீ. சிவகுமார் அண்ணனைப்பார்த்தால் எப்போதடா முடியும் இந்த நிகழ்ச்சி என்று எங்களுக்கு முன்னே தலையில் கை வைத்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்.
ஆம்பிரம் பதிப்பகத்தின் நூல்களை விற்க என்னை அழைத்தார் முருகேசன். எனக்கு அப்போதிருந்த மனநிலை என்னவென்றால் ஜாகிர்ராஜாவின் பேச்சினை யோசித்து  கடுமையான சோர்வுற்றிருந்தேன். நான் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பலாமா என்று பிரகாஷ் அண்ணனிடம் கேட்டேன். வெகு மகிழ்ச்சியாக சரி என்றார். அப்பாடா என்று மூத்திரச்சந்தை தாண்டி வந்து ஓடிவந்துவிட்டோம். முருகேசன் அவர்களுக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் தாங்கமுடியவில்லை. கச்சிதமாக தொகுக்கப்பட்ட உரை ஒன்றுகூட இல்லை எனும்போது எப்படி சமாளிப்பது? நீங்கள் எப்படியோ வரவில்லை. நல்ல முடிவு. அரச பரம்பரை, பிஎன்ஒய் கூட வரவில்லை. வரம் வாங்கிவந்தவர்கள் நீங்கள். தப்பித்துவிட்டீர்கள். தங்களை வரக்கூறி அழைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்று உடலும், மனதும் கொண்ட சோர்வு என்பதை என்னால் விவரிக்கவே முடியவில்லை. பல மணி நேரங்கள் அப்பட்டமாக வீணடிக்கப்பட்டது. வறண்டுபோன சித்தாந்தங்களை எப்படி எவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருப்பது? ஏதோ கனவு போல பேசிக்கொண்டே போனார்கள். மைக் பிடித்தால் போதும். அத்தனையும் பேசி நம்மை வதைத்துவிடுகிறார்கள். மிக மோசமான நாள் எனக்கு அது.
அன்புடன்,
அன்பரசு.

  





கருத்துகள்