இன்னோவோ காரை மறுத்த சிம்பிள் அமைச்சர்!





Image result for brahmanandam







இன்னோவா கூடாது; பார்ச்சூனர் போதும்!

மக்கள் பணி என்பதற்காக அமைச்சர்கள் தங்கள் சொகுசை குறைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமதுகான் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.


கர்நாடகாவின் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ஸமீர் அகமதுகான், அரசு வழங்கிய டொயோட்டாவை உறுதியாக ஏற்க மறுத்துவிட்டார். எளிமையாக வாழ ஆசைப்படுகிறாரா என்ன? அப்படியெல்லாம் இல்லை. அது சின்ன காராம். எனவே, பெரிய சைசில் உள்ள ஃபார்ச்சூனர் கொடுத்தால்தான் ஆச்சு என கண்டிஷன் போட்டுள்ளார் அமைச்சர் ஸமீர். "நான் சிறுவயதிலிருந்தே பெரிய கார்களில் பயணப்பட்டவன். எனவே முன்னாள் முதல்வர் சித்தராமையா பயன்படுத்திய ஃபார்ச்சூனர் காரை கொடுத்தால் போதும். முதல்வருக்கு விளம்பரம் தேவையில்லை. அமைச்சராகிய நான் சாலையில் போகும்போது அமைச்சரின் கார் என மக்களுக்கு தெரிய வேண்டாமா? " என பணிவாக பேட்டியளித்தார் அமைச்சர். அரசு ஸமீர் கேட்டபடி காரை வழங்கியதை நாம் சொல்லவும் வேண்டுமோ? சிம்பிள் ஆசை, சின்சியர் அமைச்சர்!

2

இந்தியா ரொம்ப பிஸி!

இந்தியா ஐடி துறையினர் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டும் கூட லீவு எடுக்கமுடியாதபடி பிஸிதான். ட்வென்ட்டி20, ஒருநாள், டெஸ்ட் என அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பரபர தீபிடித்தது போல கிரிக்கெட் ஆடவிருக்கிறது விராட் கோலி படை.

அடுத்த ஐந்தாண்டுகள் 2023 வரை இந்தியா 51 டெஸ்ட் போட்டிகள், 83 ஒருநாள் போட்டிகள், 69 ட்வென்ட்டி20 போட்டிகள் என மொத்தம் 203 போட்டிகளில் தடாலடியாக அடித்து விளையாடப்போகிறது. உலகளவில் பிஸியாக கிரிக்கெட் விளையாடும் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம். அடுத்த இடத்தில் மேற்கிந்திய தீவுகள்(186), இங்கிலாந்தும்(175) உள்ளன. ஆனால் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலிடமும், ட்வென்ட்டி20 போட்டியில் கரீபியன் பிரதர்ஸ் முதலிடம் வகிக்கின்றனர். கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் விரைவில் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிடவிருக்கிறது.


3

சுதேசி மாணவர்கள்!

பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடையில் பட்டம் பெற்ற மாணவர்கள் ஹூர்ரே என துள்ளி குதித்து போஸ் கொடுப்பது உலக வழக்கம். ஆனால் ஜார்க்கண்டிலுள்ள தன்பாத்  ஐஐடியில் 92 ஆண்டுகளாக இல்லாத புதிய வழக்கமாக மாணவர்கள் விதேசி உடைகளை விடுத்து சுதேசி இந்திய ஆடைகளை உடுத்தி இந்திய கலாசாரத்துடன் பட்டம் பெற நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாணவர்களின் பட்டமளிப்பு உடை மட்டுமல்ல உறுதிமொழியையும் சமஸ்கிருதத்தில் சொல்ல ஐஐடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது."மாணவர்கள் இனி வெள்ளை நிற குர்தா- பைஜாமா உடையையும், பெண்கள் வெள்ளைநிற புடவையையும் அணிய உத்தரவாகியுள்ளது. உறுதிமொழியை சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலத்தில் எடுக்கலாம். சமஸ்கிருதம் நம்முடைய இந்திய கலாசார அடையாளம்" என்கிறார் கட்டுமானத்துறை தலைவர் ஜே.கே.பட்நாயக். 1926 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ஐஎஸ்எம் கல்லூரி, 2016 ஆம் ஆண்டு ஐஐடி அந்தஸ்து பெற்றது.

4

வேகமெடுக்கும் வழக்குகள்!

இந்திய அரசு, எம்எல்ஏ, எம்பிக்களின் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க 12 விரைவு நீதிமன்றங்களை புதிதாக அமைக்கவிருக்கிறது. "பதினொரு மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைத்து மக்கள் பிரதிநிதிகளின் மீதான 791 வழக்குகளை விசாரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கியுள்ளது" என தகவல் தருகிறார் அரசின் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்.

இந்தியாவின் ஜனநாயக மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ,எம்பிக்கள் 1,765 பேரின்(36%) மீது 3 ஆயிரத்து 45 வழக்குகள் நாடெங்கும் பதிவாகியுள்ளன. பட்டியல் இனத்தவர், குழந்தைகள், பெண்கள் மீதான வழக்குகளை விசாரிக்க இந்திய அரசு விரைவு நீதிமன்றங்களை 2015 ஆம் ஆண்டிலிருந்து அமைத்து வருகிறது. தற்போது 281-727 ஆக அதிகரிக்கவுள்ள விரைவு நீதிமன்றங்கள் டெல்லி, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், கர்நாடகா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் அமைக்கப்படவிருக்கின்றன.



5
சிறுபான்மையினரின் நாயகன்!-ரோனி

ஆப்கானிஸ்தானில் பலருக்கும் நம்ப முடியாத ஆச்சரியம்தான். நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரான இந்து மற்றும் சீக்கியர்களை பிரநிதிப்படுத்தும் வாய்ப்பு விரைவில் சீக்கியத்தலைவரான அவ்தார்சிங் கால்சாவுக்கு கிடைக்கவிருக்கிறது.

1970 ஆண்டு 80 ஆயிரமாக இருந்த சிறுபான்மையினரின்(சீக்கியர் மற்றும் இந்துக்கள்) எண்ணிக்கை இன்று தொய்ந்துபோய் ஆயிரமாக சுருங்கிவிட்டதுசீக்கியர்களின் தலைவரான கால்சா, ஆப்கன் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 256 உறுப்பினர்களுடன் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மையினரின் எதிர்கால நம்பிக்கைக் குரல் அவ்தார்சிங் என மக்கள் நம்பியதன் விளைவு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி. "சீக்கிய மற்றும் இந்து சகோதரர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆப்கன் மக்களுக்கான பிரதிநிதியாக செயல்பட விருப்பம்" என்பவர் காபூலில் வாழ்ந்து வருகிறார். முஸ்லீம்களின் தேசத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தீண்டாமையோடு நடத்தப்பட்டு வருகின்றனர். சம உரிமைகளை கேட்டுப்பெறும் போராட்டத்தோடு ஐஎஸ் மற்றும் தாலிபன் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பும் அவ்தார்சிங்கிற்கு உருவாகியுள்ளது.

குறிப்பு: சீக்கியர்களின் தலைவரான அவ்தார்சிங் கால்சா தாலிபன்களால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார். 


பிரபலமான இடுகைகள்