உங்கள் உறவினர் யார் என காட்டும் டிஎன்ஏ சோதனை!
டிஎன்ஏ உறவுகளின் புதிய நெட்வொர்க்!
கல்யாணம் முதல் காதுகுத்து வரை அழைப்பிதழ் பெற்று
விழாக்களுக்கு சென்று உறவுகளை வளர்த்த காலம் ரொம்ப பழசு. இன்றைய கலாசார ட்ரெண்ட், ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் ரிக்வெஸ்ட் கோரி நட்பு,உறவுகளை பெருக்குவதல்ல;
டிஎன்ஏ மூலம் நம் வேர்போன்ற சொந்தங்களை நாடுவிட்டு நாடு தேடிக் கண்டுபிடிப்பதுதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி டிஎன்ஏ டெஸ்ட்
செய்துகொண்டார். அதில் மார்பக புற்றுநோய் எதிர்காலத்தில் ஏற்படும்
வாய்ப்பு 50% இருக்க, உடனே தன் மார்பகங்களை
ஆபரேஷன் மூலம் அகற்றி புற்றுநோய் தொந்தரவிலிருந்து விடுதலை பெற்றதுபோல அட்வான்ஸ் அனுகூலங்களும்
இச்சோதனையில் உண்டு.
23 குரோசோம்களிலுள்ள டிஎன்ஏவில் 99.5 சதவிகிதம் அனைவரின் டிசைன்களும் ஒன்றுதான். வேறுபடும்
மினி 0.5% அம்சத்தில்தான் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையில்
சர்க்கரை நோய் அல்லது புற்றுநோய் வருமா? குழந்தை பிறக்குமா?
வரை பல்வேறு அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் அதில் மக்களை தற்போது
ஈர்ப்பது முன்னோர், உறவுகள் யார்? எங்கே
வசிக்கிறார்கள் என்பதுதான். இணையம் வழியே அவர்களோடு தொடர்புகொண்டு
சுற்றுலா செல்வது, சாப்பிடுவது என உலகெங்கும் புதிய கலாசாரத்தை
டிஎன்ஏ சோதனை தொடங்கி வைத்துள்ளது.
சோதிப்பது எப்படி?
டிஎன்ஏவை சோதிக்க, டிஎன்ஏ தளத்திலுள்ள கிட் ஒன்றை முதலில் நீங்கள் 99 டாலருக்கு(ரூ.6,705) வாங்கவேண்டும். ஊசியில்
ரத்தம் உறிஞ்சி..என பயம் வேண்டாம். கிட்டிலுள்ள
டெஸ்ட் ட்யூபில் உங்கள் எச்சிலை துப்பி ஆய்வகத்துக்கு அனுப்பினால் போதும். இரண்டு மாதங்களில் ரிசல்ட் உங்களின் மின்னஞ்சல் கதவைத்தட்டும். டிஎன்ஏ விவரங்கள், தாக்கும் நோய்கள் ஆகியவற்றோடு உங்களின்
மரபணுவோடு ஒத்துப்போகும் உறவுகள் பற்றிய டீட்டெய்களும் கூடுதல் போனஸ். மரபணு உறவுகள் பற்றிய தகவல்கள் தொடர்புடையவரின் அனுமதியைப் பெற்று வழங்குகிறார்கள்.
அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள ஜார்ஜ்டவுனில் வாழும் எழுத்தாளர் டையன்
டெநபோலிக்கு அவரின் பிறந்த நாளின்போது டிஎன்ஏ டெஸ்ட்கிட் பரிசாக கிடைத்தது.
மின்னஞ்சலில் கிடைத்த 40 பக்க ரிசல்ட்டில் அவரது முன்னோர்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்ற குறிப்புடன்
1,200 உறவினர்களின் தகவல்களும் கிடைத்தது அவரை மிரளவைத்தது.
"ஐந்து சகோதரர்களுக்கு மேல் நீளும் சகோதரர்களின் எண்ணிக்கை என்னை
வியக்கவைத்தது. என் அப்பாவின் சாயலிலுள்ள வயதான சகோதரர் ஜார்ஜின்
வயது 90" என தகவல் தருபவர் உள்ளூர் உறவினர்களை கண்டுபிடித்து
புகைப்படங்களை பரிமாறி மகிழ்ந்ததோடு பாட்டிவழி சொந்தங்களை இத்தாலி சென்று சந்தித்து
திரும்பியுள்ளார்.
டிஎன்ஏ உறவுகள்!
டிஎன்ஏ சோதனைகளை செய்வதில் AncestryDNA,(1 கோடி
வாடிக்கையாளர்கள்) 23andMe(50 லட்சம் வாடிக்கையாளர்கள்) ஆகிய இணையதள சேவைநிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. இரண்டும்
தங்களுடைய தகவல்தளங்கள் மூலம் டிஎன்ஏவை பொருத்திப் பார்த்து கல்யாணமாலை போல உறவுகளை
சுழி சுத்தமாக கண்டுபிடிக்கிறார்கள். விந்தணுக்களை தானம் கொடுத்தவர்களையும்
கூட இதன் மூலம் கண்டுபிடித்து உறவினர்களாகிவரும் நிகழ்வுகளும் மேற்குலகில் நடந்துவருகின்றன.
இந்தியானாவிலுள்ள வாஷிங்டனின் ஷெர்ரி ட்ரெட்வே, கலிஃபோர்னியாவிலுள்ள துணை ஷெரீப்பான ஜோஸ் பிராட்வாட்டர் ஆகியோர் இம்முறையில்
சகோதரியையும், தந்தையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
டிஎன்ஏ டெஸ்டில் உறவினர் என சுட்டிக்காட்டுபவர், மரபுரீதியான உறவை ஏற்காமலும் போகலாம். டிநபோலி தன் உறவினர்கள்
25 பேர்களை தொடர்புகொள்ள முயற்சித்தாலும் இவரின் அழைப்பை ஏற்று சந்திக்க
விரும்பியவர்கள் 9 பேர்தான். ஷெர்ரி ட்ரெட்வேவை
தன் மகளாக ஏற்கமுடியாது என அவரின் மரபணுரீதியிலான உறவினர் கூறிய கசப்பான சம்பவங்களையும்
நாம் ஏற்க பழகுவது நல்லது. அமெரிக்காவில் மட்டுமல்ல சென்னை பெருங்குடியில்
டிஎன்ஏ சோதனை செய்ய பன்னாட்டு நிறுவனம் ஈஸி டிஎன்ஏ தொடங்கப்பட்டுவிட்டது.
காசுக்கு டேட்டா!
டிஎன்ஏ நிறுவனங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு கேரண்டி
சொன்னாலும் இதில் அபாயங்களும் இல்லாமலில்லை. ஃபேஸ்புக் போல
டிஎன்ஏ சேவைதளங்களிலுள்ள டிஎன்ஏ தகவல்கள் கசியவும் வாய்ப்புள்ளது. இவற்றை காவல்துறை, காப்பீட்டுத்துறை, மருத்துவ வட்டாரங்கள் காசு கொடுத்துக்கூட வாங்கவும் முயற்சிப்பார்கள்.
மரபணுத்தகவல்களை மருத்துவர்களின் மூலம் ஆராய்ச்சி செய்து ஒருவரின் ஆயுளுக்கும்
வரக்கூடிய நோய்களைக் கணக்கிலெடுத்து பிரத்யேகமாக அவருக்கென காப்பீட்டு பிளான்களை காப்பீட்டு
நிறுவனங்கள் அமைக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு டிஎன்ஏ தகவல்கள்
வங்கிக்கு கிடைத்தால், எதிர்காலத்தில் நோயால் தாக்கப்படவிருக்கும்
உங்களால் எப்படி கடன்களைக் கட்டமுடியும்? என லோன் அப்ளிகேஷனை
மறுக்கவும் சான்ஸ் உருவாகும். இரக்கமில்லாத வணிகத்தில் தகவல்கள்
மட்டுமல்ல, மனிதர்களும் விற்பனைபொருட்கள்தான் என்பதை உணர்ந்து
செயல்படுவதே நல்லது.
டிஎன்ஏ டெஸ்ட்!
மக்களுக்கு முதன்முதலில்
2001 ஆம் ஆண்டு டிஎன்ஏ சோதனைகளை நடத்தி ஜென்ட்ரீ என்ற நிறுவனம் சாதனை
புரிந்தது. பின்னர் இந்நிறுவனம் SMGF நிறுவனத்திடம்
விற்கப்பட்டுவிட்டது. பின்னர் பென்னட் க்ரீன்ஸ்பான் மற்றும் மேக்ஸ்
பிளாங்க்பீல்ட் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஃபேமிலிட்ரீ டிஎன்ஏ என்ற நிறுவனத்தை
அரிசோனா பல்கலைக்கழக உதவியுடன் தொடங்கி நடத்தினர். 2007 ஆம் ஆண்டு
23அண்ட்மீ என்ற நிறுவனம் எச்சில் மூலம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்தும் சோதனைமுறையை
அமுல்படுத்தியது.
டாப் 5!
MyHeritageDNA
42 மையங்கள். 92 மில்லியன்
வாடிக்கையாளர்கள். தகவல்தளம் 1.1. மில்லியன்.
கட்டணம் 59-99டாலர்கள்(ரூ.4000-6,713)
AncestryDNA
தகவல்தளம் 5மில்லியன்.
350 மையங்கள். கட்டணம் 99 டாலர்கள்(ரூ.6,713).
23andMe
தகவல்தளம் 1 மில்லியன்.
31 மையங்கள்.கட்டணம் 99-199 டாலர்கள்(ரூ.6,713-13,495).
LivingDNA
தகவல்தளம்
1.1 மில்லியன். 80 மையங்கள்.கட்டணம் 129 யூரோ(ரூ.10,188).
Vitagene
25 மையங்கள். கட்டணம்
79-149 டாலர்கள்(ரூ.5,357-10,104).
நன்றி:
https://www.nytimes.com/2018/06/16/style/23-and-me-ancestry-dna.html
.