எகிப்து பூமியில் புத்தரின் அடிச்சுவடுகளை தேடும் ஆராய்ச்சியாளர்!




உலகம் புகழும் பதினேழு வயது அகழ்வாராய்ச்சியாளர்!




பதினான்கு வயதில் அலகாபாத்தைச் சேர்ந்த அரிஸ் அலி அமெரிக்கா, கனடாவில் கல்லூரிப்பாடங்களை படித்து பெற்ற மதிப்பெண் உலக வரலாற்றில் சாதனை ரெக்கார்ட். யெஸ் ஐந்துக்கு நான்கு புள்ளிகள். அதாவது 99 சதவிகிதம்.
இப்படி டன் கணக்கில் ஐக்யூ நிறைந்த மாணவரை எஞ்சினியராகவோ, டாக்டராகவோ உருவாக்கி பாரின் அனுப்புவதுதானே இந்தியப் பெற்றோரின் புதிய கலாசாரம். ஆனால் அந்த தவறை அரிஸ் அலியின் பெற்றோர் செய்யவில்லை. அதன் விளைவாக 17 வயதில் இந்தியா- எகிப்து தொடர்பான அகழ்வாராய்ச்சி அறிக்கையை பன்னாட்டு பல்கலைக்கழகங்களில் சமர்ப்பித்து இந்தியாவின் தொன்மை கலாசாரப் பெருமையை சிகரமேற்றி வருகிறார் அரிஸ் அலி.

அண்மையில் எகிப்தின் சக்காராவிலுள்ள ஜோசரின் பிரமிடுக்கு சென்ற அரிஸ் அலிக்கு குறிப்பிட்ட நடுகல் பற்றிய தகவல்கள் மட்டுமே லட்சியம். அது எங்கேயிருந்து பயணித்து இங்கு வந்தது என்ற வழியையும் பின்னணியையும் தேடும் சவாலும் இடர்களும் அரிஸ் அலியின் உற்சாகத்தை பல டிகிரி உயர்த்தியுள்ளது. "மௌரிய பேரரசரான அசோகர்(232-268), புத்த மதத்தை பரப்ப எகிப்துக்கு துறவிகளை அனுப்பினார். அதேநேரம் தென்கிழக்கு ஆசியா, கொரியா,ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளிலும் புத்தம் பரவியது, எகிப்திலும் இந்தியாவிலும் மிச்சமுள்ள புத்த அடையாளங்களை கண்டறிவதுதான் என்னுடைய ஆராய்ச்சி நோக்கம்" என புன்னகையுடன் பேசுகிறார் அரிஸ் அலி.


சமஸ்கிருதம், பிராமி மொழிகளைக் கற்ற அரிஸ் அலி, வெறும் ஆர்வக்கோளாறு ஆசாமி அல்ல; வேதங்களை சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்து பின்னர் அதனை எகிப்து சித்திர எழுத்துக்களாக மாற்றி எகிப்து மர்மங்களை கண்டறிய இரவும் பகலும் அபாரமாக உழைத்து வருகிறார். அரிஸ் அலியின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அண்மையில் டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகதில் Egyptian Buddhism என்ற கண்காட்சியையும் உரையும் நிகழ்த்த துணைபுரிந்துள்ளது. இதில் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜே.டி.கில், எழுத்தாளர் நயன்ஜோத் லகிரி ஆகியோர் கலந்துகொண்டது விழாவின் முக்கியத்துவத்துக்கு சாட்சி.

"பனிரெண்டாம் வகுப்பு மாணவரான அரிஸ் அலி எம்ஏ மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஜீனியஸான அவருக்கு இது வெகு சுலபம்தான்" என வியக்கிறார் தேசிய அருங்காட்சியகத்தின் தலைவரான பி.ஆர்.மணி. எகிப்திலுள்ள கெய்ரோ அருங்காட்சியகத்தை பார்வையிடவும், நூல்களை வாசிக்கவும் தொல்பொருட்களை பார்வையிடவும் அரிஸ் அலிக்கு ஸ்பெஷல் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் சினாலி, பெர்னாவா(.பி), ராகிகார்கி(ஹரியானா), பின்ஜோர்(ராஜஸ்தான்) உள்ளிட்ட ஆகிய இடங்களிலும் தொடர்ச்சியாக ஆய்வுகளை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொண்டு வருகிறார் அரிஸ் அலி.
பனிரெண்டு வயதிலேயே கலாசாரத்துறையின் கல்வி உதவித்தொகைகளை வென்ற அரிஸ் அலிக்கு அகழ்வாராய்ச்சி குறித்த ஆர்வம் அரும்பியபோது வயது மூன்றரைதான். அப்போது பெற்றோருடன் நேபாளத்திலுள்ள அசோக ஸ்தூபங்கள், பசுபதிநாத் கோவில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்த பின்னர், டிஷ்யூ பேப்பரில் பேனா மூலம் அரிஸ் அலி தத்ரூபமாக வரைந்தது அவரின் பெற்றோருக்கு ஆனந்த அதிர்ச்சி. பின்னர் அலியின் ஆராய்ச்சி ஆர்வத்திற்காக லக்னோவுக்கு இடம்பெயர்ந்த பெற்றோர், அவரை மான்டிசோரி பள்ளியில் சேர்த்தனர். பின்னர் அவரின் ஐக்யூ ஆற்றலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் கல்லூரித்தேர்வு, ஐரோப்பிய வரலாறு ஆகியவற்றை எழுதி 99% மதிப்பெண் பெற்று உலகளவில் தன்னை நிரூபித்த சம்பவம் நிகழ்ந்தது. அரிஸ் அலியின் ஆராய்ச்சிக்கு தந்தை ஃபைசல் அலி மற்றும் தாய் ஃபாத்திமா ஆகியோரின் அன்பும் ஆதரவும் அவரை இன்று உலகம் முழுக்க புகழ் பெறவைத்துள்ளது.  

இந்தியாவிலுள்ள அகழ்வாராய்ச்சி இடங்களிலிருந்து எகிப்துவரை செல்வதற்கான அனைத்து செலவுகளையும் அரிஸ் அலி தன் சொந்தப்பணத்திலேயே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதுசக்காராவில் இவர் கண்ட தர்மசக்கர குறியீடு புத்த துறவிகள் இங்கு வந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணச்சான்று என்றாலும் தொடர்ச்சியாக அக்கருதை ஆராய்ச்சி அடிப்படையில் நிறுவ மெனக்கெட்டு உழைத்து வருகிறார் அரிஸ் அலி. "இதன் அர்த்தம், அசோகருக்கும் எகிப்திலுள்ள மன்னர்களுக்கும் தகவல் தொடர்பு இருந்திருக்கிறது என்பதுதான். முதல் உலகப்போரின்போது இங்குள்ள பல்வேறு அடையாளங்கள் காணாமல்போனாலும் புத்த துறவிகள் தடையின்றி நாட்டில் பயணிக்க அனுமதி பெற்றுள்ளனர்" என ஆராய்ச்சித் தகவல்களை கூறிய அரிஸ் அலி பல்வேறு நாடுகளிலும் மிச்சமுள்ள புத்த மதத்தின் வழித்தடத்தை தேடி பயணித்து வருகிறார்.   

.அன்பரசு

நன்றி: பிஸினஸ் ஸ்டாண்டர்ட்