சட்டப்படி மரணம் சாத்தியமே!
ஆராய்ச்சியாளர்களுக்கு
விசா!
ஆராய்ச்சிபடிப்புதான்
உங்கள் லட்சியமா?
உடனே கிளம்புங்கள். இங்கிலாந்து உங்களுக்கு விசா
தர காத்திருக்கிறது. நாட்டின் ஆராய்ச்சித்துறையை செழிப்பாக்க
இங்கிலாந்து முடிவு செய்து விசா முறைகளை எளிமை செய்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு
ஆண்டுகளுக்கும் மேல் தங்குவதற்கு வசதிகளை செய்துதரவுள்ளது.
"இங்கிலாந்து
ஆராய்ச்சித்துறையில் முன்னணி வகிக்கும் நாடு. உலகளவிலான ஆராய்ச்சியாளர்கள்
இங்கு பயிற்சி பெறவும் பணிபுரியும் நாங்கள் வசதிகளை செய்துதரவுள்ளோம்"
என்கிறார் குடியுரிமை அமைச்சர் கரோலின் நோக்ஸ். UKRI எனும் அமைப்பு, நாட்டின் ஏழு ஆராய்ச்சி கவுன்சில்களை
ஒருங்கிணைத்து ஆராய்ச்சிப்பணிகளை செய்யவிருக்கிறது. நேஷனல் ஹெல்த்
சர்வீசஸ் அமைப்பில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் விசா கெடுபிடிகள் நீக்கப்படுவது
மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த மாணவர்களை அப்பணிகளுக்கு ஈர்க்கும் வாய்ப்புள்ளது.
2
பசி பரிதாபம்!
நாக்பூரிலுள்ள
டடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் தலை நுழைத்து சிக்கிக்கொண்ட
ஓநாயை விலங்குநல ஆர்வலர்கள் காப்பாற்றியுள்ளனர்.
உணவுதேடி காப்பக
பகுதியில் ஓநாய்க்கூட்டம் சுற்றிவந்தது. அதிலிருந்த ஓநாய் ஒன்று உணவுக்காக
பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் தலையைவிட்டு வெளியேற முடியாமல் தடுமாறியது. தகவல் கிடைத்த தனாய் பன்பாலியா குழுவினர் 3 மணிநேரம்
போராடி பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து ஓநாயின் தலையை விடுவித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
"உணவின்றி தவித்த ஓநாய் மிகவும் பலவீனமாக இருந்தது. கண்டெய்னரில் துளைகள் இருந்ததால் ஓநாயை காப்பாற்ற முடிந்தது" என்கிறார் பன்பாலியா.காயங்களுக்கான சிகிச்சைக்குப் பிறகு
ஓநாய் திரும்ப வனத்திற்கு திரும்பிவிட்டது.
3
சட்டப்படி மரணம்!
மத்தியப்பிரதேசத்தின்
சாகர் மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு புதிய சட்டப்படி
உடனடி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில்
இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம், பனிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளை
கற்பழித்தால் குற்றங்களுக்கு உச்ச தண்டனையாக மரணதண்டனையை சட்டமாக்கியது. ரேலி டெசில் என்ற கோவிலில் ஒன்பது வயது சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கி நாராயணன்
படேல் இச்சட்டத்தில் மரணதண்டனை பெறும் முதல் நபராகியுள்ளார். "366,
376, பாப்ஸ்கோ சட்டப்படி மரணதண்டனை" என சூப்பரிடெண்ட்
சத்யேந்திர சுக்லா தகவல் தெரிவிக்க, உள்துறை அமைச்சர் பூபேந்திர
சிங், "இது வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் என்பதோடு,
குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மணி" என உற்சாகமாகியுள்ளார்.
46 நாட்களில் வழக்கு விசாரிக்கப்பட்டு நாராயணன் படேலுக்கு மரணதண்டனையை
விதித்துள்ளார் நீதிபதி சுதான்சு சக்சேனா.
4
ஆந்திராவில் விளையாட்டு
பல்கலைக்கழகம்!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில்
விரைவில் கேம் டிசைன் பல்கலைக்கழகம் அமையவிருக்கிறது. இதனை ஐ.நாவின் சகோதர அமைப்பான யுனெஸ்கோ உருவாக்கவிருக்கிறது.
ஆந்திராவின் பொருளாதார
மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் நூறு ஏக்கரில் அமையவிருக்கும் இப்பல்கலைக்கழகத்தின்
மூலம் பத்தே ஆண்டுகளில்
50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகுமாம். விளையாட்டு
வழியாக கல்வியைக் கற்றுத்தரும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய யுபிசாஃப்ட்,
சாம்சங், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களன்
ரெடியாக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அமராவதி நகரை அரும்பாடுபட்டு கட்டிவரும் முதல்வர் சந்திரபாபு நாயுடு,
டிஜிட்டல் உலகின் வரவேற்பாளர். எனவே விரைவில் ஆந்திராவின்
பல்வேறு மாவட்டங்களிலும் டிஜிட்டல் வகுப்புகள், அங்கன்வாடி மையங்கள்
ஆகியவையும் தொடங்கப்படுவதோடு புதிய கல்வி மையங்களும் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக
உள்ளது.