பழைய படங்களை ரீஸ்டோரேஷன் செய்வதே இனி எதிர்காலம்!









பழைய திரைப்படங்களுக்கும் பாதுகாப்பு தேவை




முழுநீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா முதற்கொண்டு ரிலீசுக்கு காத்திருக்கும் சூப்பர்ஸ்டாரின் காலா வரை அனைத்து படங்களும் உங்கள் நினைவிலிருக்கலாம். ஆனால் அவற்றை பாதுகாப்பாக சேமித்தால்தானே அடுத்த ஜெனரேஷனுக்கு அதனை திரையிட்டு காட்ட முடியும். அப்பணியைத்தான் தனது ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் மூலம் செய்துவருகிறார் மும்பையைச் சேர்ந்த சிவேந்திரசிங் தங்கர்பூர்.

மும்பையின் தர்தியோ சாலையிலுள்ள ஆபீசில் நுழைந்தால் ஹாலில் நம்மை மிட்செல் கேமரா கம்பீரமாக வரவேற்கிறது. உள்ளே சுவரில் லூயிஸ் புனுவெலின் படபோஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. சின்ன ஷெல்ஃபுகளில் படபோஸ்டர்கள், பாட்டு புத்தகங்கள், சென்சார் சான்றிதழ்கள், சினிமா இதழ்கள் ஆண்டு, மொழி, இயக்குநர் என கச்சிதமாக பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் தேசிய திரைப்பட ஆவணமையம்(NFAI) தவிர ஃபிலிமில் உருவான திரைப்படங்களின் நகல்களை பாதுகாக்கும் ஒரே அமைப்பு இந்தியாவில் ஃபிலிம் ஹெரிடேஜ் அமைப்பு மட்டுமே.

 2014 ஆம் ஆண்டு ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷனை தன்னார்வ தொண்டு நிறுவனமாக சிவேந்திர சிங் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து தனது நிறுவனத்தின் மூலம் பழைய திரைப்படங்களை எப்படி சேகரித்து பாதுகாப்பது என பயிற்சி வகுப்புகளை இந்தியாவெங்கும் நடத்திவருகிறார். வரும் மாதங்களில் நடைபெறும் பயிற்சி வகுப்பை இங்கிலாந்தின் போர் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தவரான டேவிட் வால்ஸ், ஆஸ்திரேலியாவின் தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தில் பணிபுரிந்த மைக் நியூன்ஹாம் ஆகிய இருவரும் நடத்தவிருக்கிறார்கள். இதற்கு முன்பு நடந்த பயிற்சி முகாம்களில் என்எஃப்டிசி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஃபிலிம்களை பாதுகாப்பது குறித்த பயிற்சியினை சிவேந்திராவின் அமைப்பில் பெற்றுள்ளனர்.
ஃபிலிமில் உருவான படங்களை பாதுகாக்க காப்பகம் அமைக்க என்ன செலவாகும்? தோராயமாக ஐந்துகோடி. டர்டியோ சாலையில் ஆவணப்படங்களையும் நவி மும்பையில் ஃபிலிமில் எடுக்கப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களை சிவேந்திராசிங் மற்றும் அவருடைய மனைவி டீஸா செரியன் ஆகியோர் தங்களின் சொந்தபணத்தை செலவு செய்து பாதுகாத்து வருகின்றனர். டிஜிட்டலில் சினிமா மாறினாலும் ஃபிலிமில் படம் எடுத்துவருபவர்களில் ஒருவர் ஆங்கிலப்பட இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன்.

தன் டன்கிர்க் படம் மூலம் ஆஸ்கர் விருது வென்றுள்ள இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மும்பையிலுள்ள ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனுக்கு வருகை தந்து ஃபிலிம் புதுப்பிப்பு பற்றி உரையாற்றவிருக்கிறார். இதன் மூலம் பெறப்படும் கவனம் அமைப்பின் ஃபிலிம் பாதுகாப்புக்கு நிதியுதவிகளைப் பெற்றுத்தரும் என சிவேந்திரா நம்புகிறார்."பேசும்பட காலகட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 700 படங்கள் மட்டுமே இன்று நம்மிடம் சேமிப்பிலுள்ளன. "ராஜா ஹரிச்சந்திரா படத்தில் மிச்சமுள்ளது ஒரு பகுதிதான். வசனப்படமான ஆலம் ஆராவும் இன்று நம்மிடம் இல்லை" என அதிர்ச்சி தகவல் தருகிறார் சிவேந்திரா.

இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சியின் ஃபிலிம் பவுண்டேஷன் சிவேந்திராவின் ஃபிலிம் பாதுகாப்பு குறித்து அறிந்து உதய்சங்கரின் கல்பனா(1948) என்ற படத்தை பாதுகாக்க உதவி கோரியது. நெகட்டிவ் தேடிக்கொடுத்து சிவேந்திரா செய்த உதவியால் புதுப்பிக்கப்பட்ட அத்திரைப்படம் 2012 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் திரையிடப்படும் கௌரவம் பெற்றது. அதோடு இலங்கை இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பெரிஸின் நிதானயா(1972) என்ற படத்தையும் புதுப்பித்து கொடுத்துள்ளார் சிவேந்திரா.

 "படங்களை தன்மை மாறாமல் புதுப்பிப்பது பெரும் சவால் என்பதோடு அதிக செலவு பிடிக்கும் விஷயமும்கூட. சேமிக்கும் இடத்தில் தட்பவெப்பநிலை மாறாமல் ஃபிலிம்களை பராமரித்து பாதுகாக்கவேண்டும்" என்கிறார் சிவனேந்திரா. கிளாசிக் படங்கள் என்பவை வெறும் காலகட்டத்தை தேக்கிவைத்துள்ள பொருட்கள் மட்டுமல்ல; அக்காலகட்ட மக்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள ஆத்ம ஆவணங்கள். மனிதர்களின் பிறப்பு, இறப்பு எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதேபோல்தான் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் சினிமாக்களும் அவ்வளவு முக்கியமானவை.

கிளாசிக் பாதுகாப்பு!

படத்தை ரீஸ்டோரேஷன் செய்வது ஃபிலிமை ஒளி,ஒலி குன்றாமல் பிரதி எடுப்பதேயாகும். புதிய இசை, கருப்பு-வெள்ளைப் படத்தை வண்ணத்திற்கு மாற்றுவதற்கு Revisionism என்று பெயர். செல்லுலோஸ் நைட்ரேட், அசிடேட் ஆகியவற்றில் உருவான ஃபிலிம்களை நெருப்பு, சிதைவுகளிலிருந்து பாதுகாப்பது மிகசிரமமான பணி. உலகெங்கும் 1930 ஆம் ஆண்டிலிருந்து ஃபிலிம் திரைப்படங்களை புதுப்பித்து வருகின்றனர். மார்ட்டின் ஸ்கார்ஸியின் ஃபிலிம் பவுண்டேஷன் போட்டோ கெமிக்கல் முறையில் முக்கிய படங்களை புதுப்பித்து திரைப்பட விழாக்களில் திரையிட்டு வருகிறது. ஃபிலிமிலுள்ள கறைகள், தூசுகளை அகற்றி, கீறல்களை சரிசெய்து கிழிந்தவற்றை ஒட்டி ஒவ்வொரு பிரேமையும் கணினியின் ஸ்கேன் செய்து பதிவதே நவீன ஃபிலிம் புதுப்பிப்புமுறை.


தி ஃபிலிம் ஃபவுண்டேஷன்

1990 ஆம் ஆண்டு முதல் ஃபிலிமில் உருவான படங்களை புதுப்பிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸியால் தொடங்கப்பட்ட அமைப்பு. இதுவரை உலகசினிமா திட்டத்தின் கீழ் 800 திரைப்படங்களை புதுப்பித்து பல்வேறு கல்வி, ஆவண மையங்கள் பயன்படுத்த உதவியுள்ளனர். உலகசினிமா திட்டத்தின் கீழ் 21 நாடுகளிலுள்ள முக்கிய சினிமாக்களில் 31 படங்களை புதுப்பித்துள்ளது இந்த அமைப்பு. The Story of Movies என்ற திட்டத்தின் கீழ் ஒருகோடி இளைஞர்களுக்கு திரைப்படங்களின் வரலாறு மற்றும் அதன் மொழி குறித்த இலவச பயிற்சியையும் ஃபிலிம் பவுண்டேஷன் வழங்கியுள்ளது

-ச.அன்பரசு, கா.சி.வின்சென்ட்
ஆங்கிலப்பட இயக்குநர் நோலன் மும்பைக்கு வருகை தந்தபோது எழுதப்பட்ட கட்டுரை           
    


பிரபலமான இடுகைகள்