சம்பளம் தர மறுத்த அமெரிக்க அதிபர்!








சம்பளம் தராத அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 25 ஆண்டுகால கார் ட்ரைவர், ட்ரம்ப் தனக்கு சம்பளம் தரவில்லை என நியூயார்க் கோர்ட் படியேறியுள்ளார்.


கார் ஓட்டுநரான சஃபியர் நோயல் சின்ட்ரோன், தான் வேலைசெய்த கூடுதல் 3,300 மணிநேரத்திற்கு ட்ரம்ப் சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டார் என நீதிமன்றத்தில் புகார் பதிந்துள்ளார். "உழைப்பவர்களை சாம்பியன் என்று வர்ணிக்கும் ட்ரம்ப் தான் பேசும் வார்த்தைக்கு உண்மையாக இல்லை" என்கிறார் நோயலின் வழக்குரைஞரான லாரி ஹட்ச்சர். வாரத்திற்கு 55 மணிநேரம் பணிபுரிந்த நோயல், இதற்கு ஊதியமாக 2003 ஆம் ஆண்டு 62, 700 டாலர்களும் 2006 ஆம் ஆண்டு 68 ஆயிரம் டாலர்களையும் ஊதியமாக பெற்றுள்ளார். நோயல் ட்ரம்பின் ஓட்டுநராக, கார் பராமரிப்பாளராக 2016 ஆம் ஆண்டுவரை பணிபுரிந்துள்ளார்


சம்பளம் தராததால் தற்கொலை!

பெங்களூருவைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்  ஆறு மாதமாக சம்பளம் தராமல் அரசு இழுத்தடித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூருவைச் சேர்ந்த சுப்பிரமணி ப்ரூஹத் பெங்களூரு மகாநகர பலிகே(BBMP) அமைப்பில் 15 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிசெய்து வந்தார். கடந்த ஆறுமாதமாக முனிசிபாலிட்டி நிர்வாகம், சம்பளம் தராததால் குடும்பம் நடத்தமுடியாமல் கடன் வாங்கி சமாளித்தவர்,  குடும்பத்தின் கல்வி, உணவுத்தேவை நெருக்கடியை சமாளிக்க முடியாமல் குறிப்பு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். "ஸ்கூல்பீஸ் ரூ. 6 ஆயிரம் கட்டமுடியாததால் இரண்டு குழந்தைகளையும் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டோம்" என்கிறார் சுப்பிரமணியின் மனைவி கவிதா. இவர் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிபிஎம்பி அலுவலகத்தின் முன்பு ஒன்றுகூடி சம்பள பாக்கியைக் கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

இடதா? வலதா?

டெல்லியைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவருக்கு, போலியோவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் செய்த தவறான ஆபரேஷனுக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு பஞ்சாப்பின் முக்‌ஷாரைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கு டாக்டர் மைனி செய்த தவறான ஆபரேஷனால், அவரின் நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கினார்.  இதுதொடர்பான   வழக்கில்தான் பத்துலட்சரூபாய் இழப்பீடு கிடைத்துள்ளது. "தவறான ஆபரேஷன் பாதிக்கப்பட்ட பெண்ணின் மேல்படிப்பையும் திருமணத்தையும் பாதித்துள்ளது" என்கிறார் புகார் கமிஷன் உறுப்பினரான என்.பி.கௌசிக். வலதுகாலில் நோய் பாதிப்பைக் கண்டறிந்த மருத்துவர் மைனி ஆபரேஷன் செய்யும்போது, இடதுகாலில் செய்ததுதான் பிரச்னைக்கு காரணம். இரண்டு கால்களையும் கவுரின் குடும்பத்தினர் அகற்றச்சொன்னார்கள் என மருத்துவர் மைனி சாதித்தாலும் டாகுமெண்ட்ஸ் வலது காலில் ஆபரேஷன் செய்ய மருத்துவக்குழு தீர்மானித்திருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.