வீக்எண்ட் பிட்ஸ்! சுடுகாட்டில் தூங்கிய எம்எல்ஏ!
சுடுகாட்டில் தூங்கிய
எம்எல்ஏ!
கட்டுமானத் தொழிலாளர்களின்
அச்சம் போக்க ஆந்திரா எம்எல்ஏ சுடுகாட்டில் தூங்கி சாதனை படைத்துள்ளார்.
தெலுங்குதேச எம்எல்ஏ
நிம்மலராம நாயுடு,
மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள பாலகோல் நகரின் சுடுகாட்டில் மூன்று
நாட்கள் தூங்கியுள்ளார் அமைச்சர். பயத்தில் நடுங்கிய தொழிலாளர்களுக்காகத்தான். "பிணங்களை எரிக்க சரியான வசதிகள் இங்கில்லை.
பிணங்களை கழுவக்கூட நீர் இல்லை. அதற்காகவே அரசிடம்
3 கோடி நிதிபெற்று குப்பைகளை அகற்றி தகன வசதிகள் செய்ய முற்பட்டால் தொழிலாளர்கள்
பேய் அச்சத்தால் நடுங்குகின்றனர்" என அச்சமின்றி பேசுகிறார்
எம்எல்ஏ நிம்மலராம நாயுடு. எம்எல்ஏ அங்கேயே சாப்பிட்டு தூங்கி
பணியை மேற்பார்வை செய்ய ஐம்பது பணியாளர்கள் பயம் தவிர்த்து விறுவிறுவென வேலையில் வேகம்
காட்டி வருகின்றனர். மக்கள்பணியில் இதெல்லாம் சகஜம் நாயுடுகாரு!
2
செய்யாத தவறுக்கு 14 ஆண்டு
சிறை!
நிஜ சம்பவங்களின்
தாக்கத்தில் சினிமா உருவாகும். சிலசமயம் இது அப்படியே ரிவர்ஸானால் அதுதான்
முகமது ஆமிர்கான்- ஆலியாவின் காதல் கதையும்கூட.
1996-97 ஆம் ஆண்டில் டெல்லி, ரோஹ்டக்,சோனேபட்,
காசியாபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தவறுதலாக
குற்றவாளியாக்கப்பட்ட ஆமிர்கான் 14 ஆண்டுகள் சிறைவாசம் கழித்து
மீண்டிருக்கிறார். "ஆலியாவின் காதல்தான் பதினான்கு ஆண்டுகள்
கொடுஞ்சிறை அனுபவத்திலிருந்து என்னைக் காப்பாற்றியது. ஏறத்தாழ
ஷாரூக்- ப்ரீத்திஜிந்தாவின் வீர் ஸரா திரைப்படம் போன்றதுதான்
எங்களுடைய காதல் கதையும்" என்கிறார் ஆமிர். இவருக்கு ஆதரவாக 2015 ஆம் ஆண்டு களமிறங்கிய தேசிய மனித
உரிமைக் கமிஷன் இவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சரூபாயை அரசிடம்
போராடி பெற்றுக் கொடுத்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தன் பதினெட்டு
வயதில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் ஆமிர். பதினான்கு ஆண்டுகளுக்குப்
பிறகு 2012 ஆம் ஆண்டு தன் 32 வயதில் விடுதலையானவர்
தனக்காக காதலுடன் காத்திருந்த காதலி ஆலியாவை மணந்து சிறைவாசி என்ற இழுக்கை துடைத்து
வாழ்ந்து வருகிறார். நெகிழவைக்கும் காதல்கதை!
3
மரக்கன்றுகளே வரதட்சணை!
தங்கம், பைக் என
வரதட்சணையை கொள்ளையடிப்பது போல கேட்டு வாங்கும் காலத்தில் மரக்கன்றுகளே போதும் என ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஒடிஷா ஆசிரியர்
ஒருவர்.
ஒடிஷாவின் கேந்திரபாரா
மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ்கந்தா பிஸ்வால், தன் கல்யாணத்திற்காக கேட்ட வரதட்சணை
பெண் வீட்டாருக்கே பேரதிர்ச்சி. 1001 மரக்கன்றுகள்தான் அவை.
சௌதாகுலட்டா கிராமத்தைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான பிஸ்வால்,
பள்ளி ஆசிரியை ராஸ்மிரேகா பைடாலை அண்மையில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வில்தான்
மேற்சொன்ன நெகிழ்ச்சி சம்பவம். இயற்கைச் சூழலை காக்கும் விதமாக
பழமரக்கன்றுகளை உறவினர்களுக்கு வழங்கிய பிஸ்வால்,
திருமணத்தில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும்விதமாக டிஜே இசை நிகழ்வையும்,
பட்டாசுகளை வெடிப்பதையும் தவிர்த்து அமைதியான முறையில் தன் மனைவி ராஸ்மிரேகாவை
கைபிடித்திருக்கிறார். ஆசிரியருக்கு ஆரத்தி ரெடி பண்ணுங்க ப்ரோ!