தொழிலாளர்களுக்கு எங்களால் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும்!



யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச முதல்வர்

பாஜக கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் மக்களிடம் முஸ்லீம் வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்காதீர்கள் என்று கூறிவருகிறார்களே?

ஜனநாயகப்பூர்வமாக அப்படி கருத்துகளைக் கூறுவதற்கு உரிமை உள்ளது. அப்படிக் கூறுவது மோசமான விளைவுகளை ஒன்றும் ஏற்படுத்திவிடாது. அது மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குவதற்காக செய்யப்படுவது. மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல வேறு யாரும் கூட தகவல்களை ஆராய்ந்து பார்த்து தங்களின் கருத்துகளை பேசுவது முக்கியம்.

இப்படி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

கட்சி சார்பில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். முழுமையான தகவல்களை அறியாமல் இப்படி பேசுபவர்கள் பிறரின் சிரிப்புக்கு ஆளாவார்கள் என்பதை மறக்க கூடாது.

ராமர் கோவிலை கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளதா?

அதற்கான அறக்கட்டளையிடம் பணிகளை ஒப்படைத்துள்ளோம். அதற்கான திட்டம் தயாராகி வருகிறது.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்?

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மார்ச் 28, 29 தேதிகளில் டில்லி நோக்கி நடந்து வந்ததைக் குறிப்பிடுவேன். இறைவனின் கருணையால் அவர்களை நல்லபடியாக வீட்டுக்கு அழைத்து வர முடிந்தது. நொய்டாவும், உத்தரப் பிரதேசமும் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி.

பதினைந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறியிருக்கிறீர்களே சாத்தியமா?

எங்கள் மாநிலத்தில் சிறுகுறு தொழிலகங்கள், 90 லட்சம் என்ற எண்ணிக்கையில் உள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. கிராம வேலைவாய்ப்புத்திட்டங்களிலும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர முடியும். எங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு என்பது பிரச்னை கிடையாது. தொழிலாளர்களுக்கு அதுவரை நாங்கள் உணவுப்பொருட்களை வழங்கி வருவோம்.

பத்து லட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு வந்துள்ளார்கள்? அவர்களுக்கான வேலைவாய்ப்பை எப்படி உருவாக்குவீர்கள்

நாங்கள் இதற்காக பல்வேறு கமிட்டிகளை உருவாக்கியுள்ளோம். இத்தொழிலாளர்கள் பல்வேறு திறன்களைக் கற்றுக்கொண்டவர்கள். அவர்களை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைத்துள்ளோம்.

மாநிலத்தில் நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்களில் சோதனைகளை செய்து வருகிறீர்களா?

மாநிலத்தில் முதலில் சோதனைகளைச் செய்வதற்கு ஒரு ஆய்வகம்தான் இருந்தது. தற்போது பதினேழு ஆய்வகங்களை உருவாக்கியுள்ளோம். அதில் தினசரி 5000க்கும் மேலான மாதிரிகளை நாங்கள் சோதித்து வருகிறோம். சிகிச்சை பெற்றவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் வசதியும் உள்ளது. நோயாளிகளுக்ககாக 52 ஆயிரம் படுக்கை வசதிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். நொய்டா, காசியாபாத் ஆகிய சிவப்பு மண்டல பகுதிகளில் சோதனைகளைச் செய்து நோய்த்தொற்று குறைந்திருந்தால் மெல்ல ஊரடங்கு விதிகளைத் தளர்த்த நினைத்துள்ளோம், நாங்கள் இதில் தேவையின்றி ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை.

 

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 1, 2020

ஆங்கிலத்தில் :இபிரவீன் குமார்

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்