அதிபர் தேர்தல் வேட்பாளரை ஜெயிக்க வைக்க நூதன சதிகள் - கத்தியில்லாத யுத்தம்!
லயன் முத்து காமிக்ஸ் |
டிடெக்டிவ் காரிகன் தோன்றும்
கத்தியில்லாத யுத்தம்
காரிகன் மிகத்திறமையானவர்தான். ஒவ்வொரு முறையும் அவருக்கு சவாலான விஷயங்களை உளவுத்துறையும்தான் எப்படித் தரும்? இப்படி நினைத்து கதையை சுமாராக கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓமர் என்ற அரசியல் தலைவர் நிற்கிறார். ஆனால் அவருக்கு தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்லை. நேர்மையானவர்தான், அதனால்தான் அவர் வெல்ல வாய்ப்பில்லை என்று அவருக்கு புரிந்துவிடுகிறது. அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் உளவுத்துறைக்கு சில சமூகவிரோதிகள் அனுப்பி வைக்கின்றனர். உடனே உளவுத்துறை தலைவர் காரிகனை அழைத்து ஓமரைப் பாதுகாக்கும் வேலையைக் கொடுக்கிறார்.
காரிகனுக்கு இதுபோல ஏப்பை சாப்பையான வேலைகளில் இஷ்டம் கிடையாது. இருந்தாலும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது என்பதால் கொட்டாவியை அடக்கியபடி வேலைக்குப் போகிறார்., அங்கு பார்த்தால் ஓமரின் மகள், ஓமரை பாதுகாக்கும் பிரிக்ஸ் என்ற மெய்க்காப்பாளன் ஆகியோர் காரிகனை கண்டபடி பேசி மனத்தை குலைக்க பார்க்கிறார்கள். காரிகன் அங்கு நடைபெறும் கைகலப்பில் பிரிக்ஸை தூக்கி வீசி விடுகிறார். பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தன் வேலையைச் செய்கிறார். அப்போதுதான் அதன் பின்னணியில் ஓமரை தேர்தலில் வெற்றிபெறச்செய்ய சில சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருவதை கண்டுபிடிக்கிறார் காரிகன். ஓமருக்கான தேர்தல் செலவுகளையும் அவர்கள்தான் வேறு வேற பெயர்களில் நிதியளித்து செய்து வருகின்றனர். அவரை பிரபலப்படுத்த அவர் மீது முட்டை வீசுகின்றனர். அவரைத் தாக்க முற்படுகின்றனர். இந்த சதி செயலுக்கு ஓமரும், அவரது மகளும்தான் காரணம் என காரிகன் சந்தேகப்படுகிறார். இறுதியில் உண்மை தெரிய வந்ததா? உண்மையான குற்றவாளி பிடிபட்டானா என்பதுதான் இறுதிக்காட்சி.
ஏராளமான உரையாடல்கள்தான் கதையை நகர்த்துகின்றன. இறுதிப்பகுதியில் வரும் கார் சேசிங், துப்பாக்கிச்சூடு பகுதியில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கதையை வாசிக்கிறோம். மற்றபடி இந்த காமிக்ஸ் எதிரிகளுக்கும், காரிகனுக்கும் நடக்கும் மூளை விளையாட்டுதான். அதில் காரிகன் வெற்றி பெறுவார் என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே?
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக