வாழ்க்கையில் நளபாகத்தை சமைத்து பரிமாறியவனின் கதை - நளபாகம் - தி.ஜானகிராமன்
பனுவல் |
கணையாழியில் தொடர்கதையாக வந்து இப்போது நாவலாகி உள்ளது. அடிப்படையாக ஜானகிராமனின் கதைகள் அனைத்தும் மனம், உடல் விதித்துள்ள விதிகளை மீறுவதுதான். இதிலும் அதே விஷயங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை நேரடியாக நடைபெறுவதில்லை. நம்பிக்கை. வீண்பழி, வதந்தி, கிசுகிசு ஆகியவை இந்த நாவலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
நாயுடு என்ற சுற்றுலா அழைத்துச் செல்பவரிடம் தலைமை சமையல்காரராக காமேஷ்ச்வரன் இருக்கிறார். அங்கு சுற்றுலா வரும் ரங்கமணிக்கு அவரது வம்சம் தழைக்காத சோகம் உடலிலும் உள்ளத்திலும் இருக்கிறது. அவருக்கு, சமையக்காரரைப் பார்த்ததும் அவர் மூலமாக தன் வம்சத்தை மீள கொண்டு வந்துவிட முடியும் என கணக்கு போடுகிறார். இதற்காக அவரை தனது வீட்டுக்கு வேலைக்கு வந்துவிட அழைக்கிறார். இவரின் மனக்கணக்கை புரிந்துகொள்ளாத காமேஷ், இப்படி பாசமாக அழைக்கிறாரே என்று கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூரிலுள்ள நல்லூருக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை.
தி.ஜாவுக்கு பழமையான விஷயங்கள், காவிரி ஆறு, கொல்லைப்புறம், மரங்கள், உணவு என என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் வாசகர்களுக்காக பரிமாறியிருக்கிறார். நூலை வாசிக்கும்போது , நாம் அந்த மண்ணில் நடைபோட்டுக்கொண்டு இருப்பது போல உணர்வு தோன்றுகிறது. காவிரிக்கரை காட்சிகள், நீர் எடுத்துவருவது ஆகிய பகுதிகள்.
கதையின் முக்கியமான முடிச்சு ரங்கமணியின் மருமகள் பங்கஜத்திற்கு குழந்தை பிறக்காமல் இருப்பது. அதை முத்துசாமி ஜோதிடர் ஜாதகங்களை புரட்டிப் பார்த்து சாத்தியமில்லை என்று உதட்ட பிதுக்கி விடுகிறார். ஆனால் மகனுக்கு பிள்ளை இல்லை, மருமகளுக்கு உண்டு என சொல்லிவிடுவதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
தனக்கென வாழாமல் யார் என்ன வேலை சொன்னாலும் அம்பாளை வணங்கியபடி செய்யும் காமேஷ்வரன், அதே குணத்தால் நல்லூர் முழுக்க கெட்டபெயரை சம்பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில் அவன் எடுத்த முடிவுதான் இறுதிப்பகுதி.
சமையலில் இருக்கும் அத்தனை ருசியையும் இந்த நாவலிலுள்ள மனிதர்களிடம் பார்க்கலாம். அதேசமயம் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்குச் சொல்லும்போதும், அவர்களின் மனதை படிக்க முயலும் போதும் அனைத்து உரையாடல்களும் கூர்மை பெறுகின்றன. ரங்கமணி, முத்துசாமி ஜோதிடரிடம் பேசுவது, துரை காமேஷ்வரினிடம் பொத்தல் குடம் என்பது, பங்கஜம் காமேஷ்வரனிடம் அவர் எதற்கு அங்கு வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும் என்று பேசும் இடம் என ரசிக்கத்தக்க கவனமான படிக்கவேண்டிய இடங்கள் உள்ளன.
நமக்கு பசியும் நிற்கப்போவதில்லை. அதற்கான சமையலும் நின்றுவிடப் போவதில்லை. நூலின் முடிவும் அதையே நமக்கு உணர்த்துகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக