சினிமாவைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது - அதுல் குல்கர்னி
bollysuperstar |
அதுல் குல்கர்னி, இந்தி திரைப்பட நடிகர்
தனது சிறந்த நடிப்புக்காக இருமுறை தேசியவிருது பெற்ற நடிகர் இவர். ஹேராம், சாந்தினி பார், ரங்தேபசந்தி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.
உங்களது திரையுலக வாழ்க்கையில் திரைப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள். இப்போது நடித்துவரும் ராய்க்கர் கேஸ் என்ற வெப்தொடரில் எப்படி நடிக்க இசைந்தீர்கள்?
தியேட்டரில் படம் பார்க்கிறோமோ அல்லது லேப்டாப்பில் படம் பார்க்கிறோமோ எதுவாக இருந்தாலும் நல்ல கதை வேண்டும். ராய்க்கர் கேஸ் வெப்தொடரின் கதை எனக்கு பிடித்திருந்தது. ஒரு குடும்பத்தின் சிக்கலான உறவுமுறைகள், கொலை பற்றிய மர்மம் என இரண்டு கதைகள் கூறப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இத்தொடருக்கு வரும் விமர்சனங்களைப் பார்த்தால் தொடர் வெற்றிபெற்றிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்கு கிடைத்தாற்போன்ற கதைகள் இப்போதும் கிடைக்கிறதா? கதை சார்ந்த சினிமா என்பது இப்போது உள்ளதா என்று கேட்கிறேன்?
கடந்த இருபது ஆண்டுகளில் நாம் வாழும் நகரம், அதன் கலாசாரம், பிற விஷயங்கள் என அனைத்தும் மாறியுள்ளன. இதையொட்டி திரைப்படங்களும் அதனை பிரதிபலித்து வந்துள்ளன. இன்று அவற்றின் மொழியும், கதை சொல்லும் போக்கும் மாறுபட்டுள்ளன. காலத்திற்கேற்ப அவை மாறியிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தியேட்டரில் சினிமா பார்த்திருப்பீர்கள். இன்று அதேபோன்ற கதைகளை இணையத்தில் பார்க்க முடிகிறது. நவீன மாற்றங்கள் வேகமாக நடந்து வருகின்றன.
இணையத் தொடர்கள் நமது சினிமாவை மாற்றிவிட்டன என்கிறீர்களா?
உண்மையில் எனக்கு தெரியவில்லை. நான் நடக்கும் மாற்றங்களை அமைதியாக கவனித்து வருகிறேன். இவை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வது அவசியம்.
நீங்கள் நாடகத்தில் நடித்தீர்கள். பிறகு சினிமா, இப்போது வெப் தொடர்கள். எப்படி மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
சில விஷயங்கள் மாறும். சினிமாவில் நான் 130 நிமிடங்கள் நடிக்கிறேன் என்றால் வெப் தொடரில் 250 நிமிடங்கள் நடிக்கிறேன். ஊடகங்களுக்கு ஏற்றபடி சிறியளவு மாற்றங்கள் இருக்கும். மற்றபடி பெரியளவு வேறுபாடு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நான் நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவன். எனவே சவால்களை ஏற்று நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.
நடிகராக உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் என்னைத் திரும்பி பார்ப்பது, எந்த இடத்தில் இருக்கிறேன் என்று எப்போதும் யோசித்தது கிடையாது. எனக்குப் பிடித்த சினிமா துறையில் நான் இருக்கிறேன். இதை என் வாழ்க்கைக்காக சார்ந்திருக்கிறேன். அவ்வளவுதான்.
நீங்கள் கல்வி சார்ந்த அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம்.
பதினான்கு ஆண்டுகளாக க்வெஸ்ட் என்ற அறக்கட்டளை ஒன்றை நாங்கள் நடத்திவருகிறோம். இதில் 95 ஆயிரம் மாணவர்களுக்கு தொடக்க கல்வியை வழங்குகிறோம். 3 ஆயிரம் ஆசிரியர்கள் உதவியுடனும், 65 பணியாளர்கள் ஆதரவுடனும் செய்கிறோம். இவர்கள் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களிலுள்ள ஆசிரியர்கள் இதற்கு உதவுகிறார்கள். கல்வி இன்மைதான் அனைத்து சமூக பிரச்னைகளுக்கும் காரணம். அதை தீர்க்க கல்வித்துறையில் பணியாற்ற நினைத்து இப்பணிகளை செய்து வருகிறேன்.
நடிப்புக்கு இடையில் இதுபோன்ற பணிகளுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறதா?
தொழில் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதுவே முழுமையானதல்ல. அனைத்து விஷயங்களுக்கும் நாம் நேரம் ஒதுக்குவது முக்கியம். இது போன்ற பணிகளை நான் செய்யவேண்டிய முக்கிய கடமையாக நினைக்கிறேன்.
ஊரடங்கு காலத்தில் எங்கு, என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?
சினிமா படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் மகாராஷ்டிரத்தில் உள்ள எனது வீட்டுக்கு வந்துவிடுவேன். அங்குதான் எனது தன்னார்வ தொண்டு நிறுவனமும் உள்ளது. அந்த வேலைகளைக் கவனிப்பேன். எப்போதும் போல எனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
நன்றி: அவுட்லுக் இதழ், மே 11,2020
ஆங்கிலத்தில்: கிரிதர் ஜா
கருத்துகள்
கருத்துரையிடுக