மக்களின் பிரச்னைகளுக்கு அவர்கள்தான் போராடவேண்டும்!- ஒரு துளி மணலில் ஓர் உலகு




இனிய தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.


தொழிற்சங்கம், போராட்டம் பற்றிய உங்களது பேச்சுகள் காலத்தின் கட்டாயம். ஆனால் இதற்கு என்ன பயன் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. காவிக்கட்சி ஆட்சியில் சங்கம், கருத்துக்கூறுவது, உரிமைகளைப் பேசுவது என அனைத்துமே தேச துரோகம். நீங்கள் அரசு பதவியில் இருந்தாலும் தொழிறசங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வருகிறீர்கள்.


வைப்ரேஷன் மோடில் அனைவரையும் இயக்கி கொண்டு வருவது பெரிய விஷயம்தான். இங்கு அனைவருமே காத்திருப்பது தொண்டர்களாக அணிதிரள்வதற்குத்தான். தலைவராக முன்னே அவர்களை நடத்திச்செல்ல யாராவது வேறு மாநிலங்களில் அல்லது நாட்டில்தான் ஆட்களைப் பிடிக்கவேண்டும். சித்தாந்தரீதியில் நீங்கள் தயாராவது போராட்டங்களுக்கு முக்கியமானது. உங்கள் துறைசார்ந்த ஊழியர்களைப் பார்த்தால் எதையும் முனைப்புடன் போராடிப் பெறுபவர்கள் போல தோன்றவில்லை. உங்கள் போராட்டம் வெற்றிபெற்று நின்றுபோன சம்பளத்தொகைகளைப் பெற வாழ்த்துகிறேன். மக்களிடம் நெருக்கமாக இருக்கச் செய்யும் கள அனுபவங்களே உங்களை சரியான இடத்தில் இருத்தும்.


இனி வரும் காலம் முழுவதும் சூழலுக்கு எதிரான அரசின் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் எதிர்க்கும் விதமாகவே இருக்கும். வளர்ச்சி வேகத்தில் அரசுக்கு இருக்கும் நெருக்கடி நம்மை இச்சூழலுக்குள் தள்ளலாம். விவசாயத்தையும் தொழிலாக பாவித்து அதற்கும் வரி விதிக்க இந்திய அரசுக்கு நிதிஆயோக் குழு பரிந்துரைக்க உள்ளது. இதில் சம்பாதிப்பவர்களும் உண்டே. அவர்கள் பணம் கட்டட்டும் என்கிறது அரசு. ஏழை விவசாயிகளுக்கு இதில் விலக்கு என்பது பசப்பலாகவே தெரிகிறது.


மத்திய அரசுக்கு வாக்கு பெறும் சமயங்களில் மக்களை நினைப்பதேயில்லை. அதிகாரத்தை எப்படியேனும் பெற்றால் போதும் என்ற சூழ்ச்சியை பின்பற்றுகிறார்கள். இதனால் பெரும்பாலான இடங்களில் காவிக்கட்சி ஆட்சியில் அமரும். அதை நீங்களும் நானும் பார்க்கத்தானே போகிறோம்.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


1.5.2017

********************************************************************************

அன்புள்ள நண்பர் அன்பரசுவுக்கு, நலமா?


நீங்கள் டீக்கடைக்காரர் ஆட்சிக்கு வருவதை ஆதரித்து என்னிடம் ஒருமுறை பேசினீர்கள். அன்று நான் அவரின் குஜராத் வரலாறு பற்றி பேசியது எதையும் நீங்கள் காதுகொடுத்துக் கூட கேட்கவில்லை. ஆனால் இன்று உங்கள் வலைத்தளத்தில் அவரைப்பற்றி நிறைய எதிர்ப்பான எழுத்துகளைப் பார்க்கிறேன். இந்த கடிதங்களிலும் அவரது ஆட்சியைப் பற்றி நிறைய எழுதிவிட்டீர்கள். என்ன நீங்கள் என்னிடம் பேசிவிட்டு அதை சுருக்கமாக எழுதுவீர்கள். நான் உங்களிடம் இதுபற்றி புலம்புவேன். என்ன செய்யமுடியும் இந்தியாவில்? ஒருவர் ஓட்டுப்போட்டுவிட்டால் அதற்குப்பிறகு அவர்களுக்கு நடக்கும் அரசில் எந்த பங்கும் கிடையாது. எதுவும் செய்ய முடியாது. நடக்கும் விஷயங்களை தந்தி பேப்பர் வாங்கி படித்துவிட்டு அமைதியாக தினசரி வாழ்க்கையைப் பார்க்கவேண்டியதுதான். நம் வாழ்க்கை அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.


அநீதிக்கு எதிராக குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், அல்லது சிறு குழு போராடும் என நினைத்துக்கொண்டு மக்கள் இருந்தால் அவர்கள்தான் முட்டாள்கள் என்பேன். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதை அவர்கள்தான் கேட்கவேண்டும். இதற்கென தனியாக சூட் தைத்துப் போட்டுக்கொண்டு சூப்பர் ஹீரோக்கள் வானிலிருந்து இறங்குவார்களா என்ன?


அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மக்கள் இருந்தால் அவர்கள் ஏதோ மனக்குறைபாட்டு நோயுடன் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். எந்த விஷயத்தை அரசு சொன்னாலும அப்படியே ஏற்றுக்கொண்டால் மூளை என்ற ஒன்று எதற்கு? யோசிக்க வேண்டாமா? எங்கள் துறைசார்ந்த வேலைகளைக்கூட அரசு தனியாருக்குத்தான் வழங்குகிறது. பணியிடங்களை நிறைய குறைத்து வருகிறார்கள். இதற்கான போராட்டத்திற்கு உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் எந்த ஆதரவும் தருவதில்லை. சமூகவலைத்தளங்களில் நடிகைகளில் கவர்ச்சிப் போட்டோக்களை பிரசுரிக்கவும், கிசுசுகிசுக்களை எழுதவும் மெனக்கெடுகிறீர்கள். ஆனால் மக்கள் பிரச்னைகளைப் பற்றி கவலையில்லை. பாருங்கள் நாம் இருவரும் இதைப்பற்றி பேசிப் புலம்பி இதய நோயாளிகள் ஆவதுதான் மிஞ்சும். சரி, பார்ப்போம்


.ராமமூர்த்தி

10.5.2017


கருத்துகள்