அபூர்வ வெள்ளாட்டின் கதை - பூனாச்சி - பெருமாள் முருகன்
அன்ஸ்ப்லாஸ் |
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
பெருமாள் முருகன்
காலச்சுவடு
சமூகம் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லி படாதபாடு பட்ட பெருமாள் முருகனின் கதை. எளிமையாக மேய்ச்சல் நிலத்தில் மேயும் வெள்ளாட்டை வைத்தை கதையை எழுதிவிட்டார்.
இவர்களுக்கு அதிசயம் போல கிடைக்கும் கருப்பு மூடு ஆடுதான் பூனாச்சி, உருவ அளவில் பொசுக்கென இருக்கும் ஆட்டுக்குட்டியை வழிப்போக்கர் கிழவனுக்கு இலவசமாக கொடுத்துவிட்டு போகிறார். வீட்டுக்கு கொண்டு போனால் அது பூனைக்குட்டியா என்று கேட்கிறாள் கிழவி. அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் ஏதோ புழு போலத்தான் அவர்களுக்கு தெரிகிறது. முழு கருப்பு நிறம் என்பதால் இருக்கும் ஆடுகளிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த ஆட்டுக்குட்டி எப்படி அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது, அதன் சிறப்பு என்ன என்பதை பின்னாளில் கிழவனும் கிழவியும் அறிகிறார்களா என்பதுதான் கதை.
நாவல் மொத்தம் 169 பக்கங்கள்தான். வேகமாக வாசிக்க முடியும் எளிமையான கதையும் கூட.
கதையின் முடிவு தொன்மைக் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மேய்ச்சல் நிலத்தில் வானம் பார்த்த பூமியில் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை இது. நாவல் முழுவதும் வரும் நிலங்கள் வானம் பார்த்த பூமியைச்சேர்ந்தவை. இயற்கை என்ன கொடுக்கிறதோ அதை வைத்தே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இயற்கை இவர்களை புறக்கணித்தால் வாழ்க்கையும் தடம் புரண்டு விடுகிறது. இதனை எளிய மொழியில் மண்ணின் மணத்துடன் பதிவு செய்திருக்கிறார் முருகன்.
இதில் வரும் ஆட்டுக்கு எண் கொடுக்கும் சடங்கு, முழுக்க அரசை தீவிரமான பகடிக்கு உள்ளாக்குகிறது. அரசு அதிகாரிகளின் நடத்தை, மனிதர்களின் பேராசை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படையா நாவல் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மனது எப்போதும் போதும் என்று சொல்லாது என்பதை கிழவனும் கிழவியும் சொல்லிக்கொண்டே ஆசைப்படுகிறார்கள். ஆனால் இயற்கை கொடுப்பதற்கும் அளவு உண்டு அல்லவா? இறுதியில் அதுபோன்ற சூழல் ஏற்படும்போது பூனாச்சியின் நிலைமை பரிதாபமாகிறது.
நாவல் முழுக்க வெள்ளாட்டின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு படியுங்கள். நூல் புதுமையாக தோன்றும்.
கோமாளிமேடை டீம்
நன்றி: தமிழ்புக்ஸ்வேர்ல்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக