சயாம் பூனை மிரட்டல் தலைவனை கண்டுபிடிக்கும் சங்கர்லால் - நியூயார்க்கில் சங்கர்லால் - தமிழ்வாணன்








shocked sherlock holmes GIF
ஜிபி





நியூயார்க்கில் சங்கர்லால்

தமிழ்வாணன்

 

தமிழ்வாணனின் அதிரடியான துப்பறியும் நாவல். டோக்கியோ சென்றிருக்கும் சங்கர்லால் அமெரிக்காவுக்கு பமேலா என்ற பணக்கார பெண்ணின் அழைப்புக்காக வருகிறார். ஆனால் அதற்குள் அவர் வருவதைப் பற்றிய செய்தி சட்டவிரோத குழுவின் தலைவனான பூனை என்கிற ஜாக்சனுக்கு கிடைக்கிறது. இதனால் சங்கர்லால் வந்தால் தனக்கு கிடைக்கிற பணம் கிடைக்காது என்பதால் அவரைக் கொல்வதற்கான ஒத்திகைப் பயிற்சியை நடத்த முயல்கிறான். இதில் அநியாயமாக ஜங்கிள்ஜான் என்பவன் உயிரை விடுகிறான்.

போலீசார் இந்த வழக்கில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கும் சங்கர்லால் துப்பறிவதில் பெரிய ஆர்வம் இல்லை. அவரோடு போட்டியிட்டு அவரை அவமானப்படுத்த நினைக்கிறார் நியூயார்க் காவல்துறை தலைவர் வில்லியம்ஸ். சங்கர்லால் பமேலாவுக்கு வந்த மிரட்டல் கடிதத்தைப்படித்துவிட்டு அவரை கவனமாக பாதுகாக்க நினைக்கிறார். ஆனால் அதற்குள் பூனை ஜாக்சன் முந்திக்கொள்ள நினைக்கிறான். பமேலாவைக் கொல்ல குறிப்பிட்ட நாளில் திட்டமிடுகிறான். ஆனால் அதற்குள் சங்கர்லாலைக் கொல்ல திட்டமிட்டு, அது நடக்காமல் போக அவனது அடியாள் ஆல்பர்ட்டை கொல்ல ஜாக்சன் உத்தரவிடுகிறான். இதில் நடக்கும் தாறுமாறு விஷயங்கள் சங்கர்லாலை உசுப்புகின்றன. பமேலாவின் ரோல்ஸ் காரில் பூனை ஜாக்சனின் கும்பலைச் சேர்ந்த அழகி ஒருத்தியின் பிணத்தை வைத்து அச்சுறுத்துகின்றனர். காவல்துறையும் இந்த அழகி கொலை வழக்கில் சங்கர்லாலை கைது செய்ய ஆர்வம் காட்டுகிறது. சங்கர்லால் எப்படி இந்த சதி வலையிலிருந்து தப்பி உண்மையான குற்றவாளியை பிடிக்கிறார், கூலிக்கொலைகாரர்களைக் கையும் களவுமாக பிடித்தாரா என்பதுதான் நாவலின் முக்கியமான பகுதி.

 

இந்த நாவலில் சங்கர்லால் ஆங்கில துப்பறியும் படங்களில் வரும் டிடெக்டிவ் கணக்காக வருகிறார். ஆஸ்டெரியா விடுதியில் தேநீர் பருகுகிறார்.  மஸ்டாங் காரில் வேகமாக சென்று கூலிக்கொலைக்காரர்களுடன் மோதுகிறார். துப்பாக்கியால் சுடுகிறார். பல இடங்கள் அனைத்தும் நம் மனதில் காட்சிகளாக விரியும்படி தமிழ்வாணன் எழுதியிருக்கிறார். இதனால் வாசகர்கள் படிக்கும்போது அந்த சம்பவத்தில் தானும் ஒரு பகுதி போல உணர நேர்கிறது. நாவலின் வெற்றியும் அதுவேதான்.

கோமாளிமேடை டீம்

 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்