காமதேனுவின் சக்தியை சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் சுயநல குடும்பம்! - காமதேனுவின் முத்தம்
காமதேனுவின் முத்தம்
காலச்சக்கரம் நரசிம்மா
வானதி பதிப்பகம்.
ப. 579 ரூ. 300
தெய்வீகத்தன்மை கொண்ட சாகச நாவல்.
கோவூர் என்ற ஊரிலுள்ள கோவிலில் பெரிய வீட்டுக்காரர்கள் ஊர் நன்மைக்காக யாகம் ஒன்றை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இதில் பெரியவீட்டுக்கார பெண்கள் யாரேனும் கர்ப்பிணியாக கலந்துகொண்டால் அந்த ஊருக்கு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்புகிறார்கள். காமதேனுவை கர்ப்பணிப் பெண் தன் கண்ணார பார்த்துவிட்டால் அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு தெய்வீகத்தன்மை கிடைக்கிறது. அவள் சொல்வதெல்லாம் பலிக்கிறது. அவள் தொட்ட இடமெல்லாம் சந்தனம், பன்னீரின் மணம் வீசுகிறது. இப்படி தமயந்தி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு தேனுகா என்ற பெண்குழந்தை பிறக்கிறது. அவள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாஞ்சாலியம்மா என்ற தமயந்தியின் மாமியார், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என கூறப்படுகிறாள். உண்மையில் அவளுடைய மகளுக்கு நேர்ந்த கொடூரமான முடிவால் அவள் புத்தி பிறழ்ந்து போனதுபோல ஆகிவிடுகிறாள்.
தமயந்தி கர்ப்பிணியாக இருக்கும்போது காமதேனுவைப் பார்க்கிறாள். அதை சொல்லவேண்டாமென அவள் வீட்டு வேலைக்காரி அங்காயி சொல்கிறாள். ஆனால் அதனை மீறி தமயந்தி தன் கணவனிடம் சொல்லி விட தேனுகாவின் வாழ்க்கை தினசரி பூஜை, புனஸ்காரம் என மாறுகிறது. அவளின் இயல்பு வாழ்க்கை நாசமாகிறது என தமயந்தி தாமதமாகவே உணர்கிறாள். ஆனால் அதற்குள் அவளால் நன்மை காலமெல்லாம் நமது குடும்பத்திற்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என அவளது குடும்பத்தினர் சுயநலமாக எண்ணுகிறார்கள். அதற்காக அவளை காலமெல்லாம் கன்னியாக வைத்திருக்க நினைக்கிறார்கள்.
அப்போது தேனுகாவை விபத்திலிருந்து காப்பாற்றி அவள் மனதில் சலனம் ஏற்படுத்துகிறான் காமேஷ்வரன். அப்போது அவளது வயது 17 முடிந்து 18 தொடங்குகிறது. அந்த வீட்டைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் இப்படி ஒரு விபத்து நேர்ந்து வாழ்க்கை மாறுகிறது. அவளைப் பற்றிய உண்மையை தமயந்தியிடமிருந்து அனைவரும் மறைக்கிறார்கள். உண்மையில் ரேணுகா என்ற பெண்ணுக்கு என்ன நடந்தது? காமதேனுவின் சக்தி என்பது உண்மையா? பெரிய வீட்டுக்கார ர்கள் தேனுகாவின் காதலை அடையாளம் கண்டார்களா? காமேஷ்வரன் தேனுகாவை காதலித்தானா, எதிர்ப்புகளையும் சதிகளையும் சமாளித்து தேனுகாவை மணம் செய்தானா? என்பதை நூல் ஏராளமான திருப்பங்களுடன் விவரிக்கிறது.
திராவிட கழக ஆட்களை கிண்டல் செய்வது தேவையில்லாத பகுதியாக சில இடங்களில் வருகிறது. கதைக்கும் அதற்கும் என்ன தொடர்பு நரசிம்மா சார்?
மற்றபடி கதை நேர்த்தியாக பயணிக்கிறது, தெய்வீக சக்தியை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நேர்த்தியாக 579 பக்கங்களில் சொல்லியிருக்கிறார்.ஆசிரியர். நம்பி வாசிக்கலாம். நேர்த்தியான வாசிப்புக்கு உறுதி தரும் நூல் இது.
கோமாளிமேடை டீம்
நன்றி: கே.என். சிவராமன், முதன்மை ஆசிரியர், குங்குமம்
கருத்துகள்
கருத்துரையிடுக