சிறுமியைக் காக்க போராடும் முன்னாள் ராணுவ வீரர் - மை பிலவ்டு பாடிகார்டு
மைடிராமா லிஸ்ட் |
தி பாடிகார்டு - சீனா 2016
இயக்கம் - சாமோ ஹங்
மிஸ்டர் டிங் ஓய்வுபெற்ற ராணுவ ஆசாமி. அவர் மனதுக்குள் இருக்கும்
வலி ஒன்றுதான். அவர் மகள் வயிற்றுப் பேத்தியை நகரில் தொலைத்துவிடுகிறார். இதனால் குடும்பத்தில்
நேரும் பிரச்னைகளால் மகள், அவரை எப்போதும் உன்னைப் பார்க்கமாட்டேன். செத்தொழி என்று
சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். வயதான காலத்தில் வரும் பிரச்னையான டிமென்ஷியா அவரை
மெல்ல தாக்கத்தொடங்குகிறது. ராணுவத்தில் வரும் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வரும் அவருக்கு
துணையாக பக்கத்துவீட்டு சிறுமி இருக்கிறாள்.
குடிநோய், சூதாட்ட அடிமையான அப்பாவுக்கு பயந்து அந்த சிறுமி பெரும்பாலான நேரங்களில் டிங்கின் வீட்டில்தான் இருக்கிறாள். அங்குதான் டிங்கோடு சாப்பிடுகிறாள். இருவரும் சேர்ந்து மீன் பிடிக்க செல்கிறார்கள். ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள். உறவுகள் யாருமே இல்லாத நிலையில் அவர் குடியிருக்கும் வீட்டு ஓனரான பெண்ணும், பக்கத்து வீட்டுச் சிறுமியும் காட்டும் அன்பு மட்டுமே டிங்கிற்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த நேரத்தில் சூதாட்டத்தில் 20 லடசம் ரூபாய் கடன் ஏற்பட்டு விடுகிறது சிறுமியின் தந்தைக்கு. அதை அடைக்க சூதாட்ட கிளப்பின் ஓனர் ஒரு வாய்ப்பு தருகிறான். குறிப்பிட்ட இடத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்று நகை அடங்கிய பேக் ஒன்றை எடுத்து வரவேண்டும். அப்படி எடுத்து வந்தால் கடன் தள்ளுபடியை யோசிக்கிறேன் எனகிறான். ஆனால் எடுத்து வரும் வழியில் தன்னைக் கொல்வது பற்றி சிறுமியின் தந்தை தெரிந்துகொள்ள, அங்கிருந்து தப்புகிறான். இதேநேரத்தில் சூதாட்ட ரவுடி கும்பல், குடிநோய்க்கு அடிமையானவரின் மகளைத் தேடி டிங்கின் வீட்டுக்கு வருகின்றனர். அவர்களை டிங் கடுமையாக அடித்து அனுப்புகிறார். இதனால் கோபமுறும் ரவுடி கும்பல் டிங்கின் வீட்டுக்கு தீ வைக்கின்றனர். அப்போது சிறுமி காணாமல் போகிறாள். டிங் தன் வாழ்க்கையே கையைவிட்டு போனதாக கவலையுறுகிறார். அவர் எப்படி ரவுடி கும்பலிடமிருந்து குழந்தையை மீட்கிறார் என்பதுதான் கதை.
கதையில் உருப்படியான பகுதி என்பது முக்கிய கதாபாத்திரமான
டிங்தான். ஓய்வு பெற்ற வயதானவர் என்பதால் மிக இயல்பாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது..
தனது பேத்தியை தவறவிட்ட குற்றவுணர்வால் மனம் குமைந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை
சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
சண்டைக்காட்சிகள் குறைவு என்றாலும் வயதானவர் எப்படி சண்டைபோடுவாரே
அந்த லாஜிக்கை மிஞ்சாமல் படம் பிடித்திருக்கிறார்கள். படம் அதிரடி சண்டைக்காட்சிகளுக்கான
ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் வயதான ராணுவ அதிகாரியின் வலி நிரம்பிய வாழ்கையை நன்றாக
உணர்த்த முயன்றிருக்கிறார்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக