திருமண வாழ்க்கையின் இன்பம் ஏழே ஆண்டுகள்தானா? மிஸ்டர் ரோனி பதில்
ஜிபி |
மிஸ்டர்
ரோனி
எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது ஏழு ஆண்டுகள்தான் என நண்பன் கேலி செய்து சிரிக்கிறான்.
இது உண்மையா?
ஆறு
ஆண்டுகள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்களே?
இதுவல்லவா பெரிய விஷயம். மகிழ்ச்சியான திருமண உறவு ஏழு ஆண்டுகள் என்று சொல்வது உளவியல்
சார்ந்த ஆய்வுகள் படிதான். அதில் உண்மையும் இருக்கிறது. 1999ஆம்ஆண்டு ரைட் ஸ்டேட் பல்கலைக்கழகம்
திருமணமாகி பத்தாண்டுகள் ஆனவர்களை சோதித்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தம்பதிகளின்
மகிழ்ச்சி குறைந்து அவர்களின் வாழ்க்கை உறைந்து போனதை ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.
இதன் அடிப்படையில்தான் ஏழு ஆண்டு இன்பம் கான்செப்ட் தோன்றியது.
கணவன்,
மனைவி இருவருக்குமான கெமிஸ்ட்ரி என்பது உங்கள் மனப்பொருத்தத்தைப் பொறுத்தது. உங்களின்
நோக்கம், தொழில், மனைவியின் கனவு, பிறந்த குழந்தைகள், அவர்களுக்கான கல்வி என பத்தாண்டுகளுக்கு
ஒருமுறை இயல்பாகவே நமது நோக்கம் மாறியபடியே இருக்கும். அதற்கேற்ப நீங்கள் அனுசரித்துச்
செல்வதுதான் முக்கியம். உங்களின் செயல்பாடுகளை விளக்காமலேயே இன்னொரு உயிர் புரிந்துகொள்ளும்படி
இருந்தால் ஏழு ஆண்டுகள் மட்டுமல்ல நூறு ஆண்டுகள் ஆனாலும் இன்பம் குறையாமல் கூடும்.
வியாழன் தனக்குள் உள்ள வாயுக்களை வெளியிட்டுவிட்டால்
அதன் அளவு குறையுமா?
வியாழனின்
மையத்தில் ஹைட்ரஜனும் ஹீலியமும் உள்ளன. இவற்றை வியாழன் காலப்போக்கில் வாயுக்களாக வெளியேற்றினாலும்
வியாழன் பெரியளவில் மாற்றங்களைச் சந்திக்காது. அப்போதும் சனி கோளைவிட பெரிதாகவே இருக்கும்.
நாசா வியாழனில் ஜூனோ எனும் திட்டத்தை செயல்படுத்தி பல்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்தது.
நம் உடலின் எந்தப்பகுதி வேகமாக பரிணாம
வளர்ச்சி அடைந்து வருகிறது?
நமது
உடல் என்பது தடாலடியாக பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாது. இன்று நாம் பெற்றுள்ள விரல்கள்,
நமது முதுகெலும்பு ஆகியவை பல்வேறு நிலப்பரப்பு, சூழ்நிலைகள், தாங்கும் திறன் சார்ந்த
மாற்றம் கண்டவை. நாம் பல்வேறு ஆண்டுகளாக மென்மையான உணவுகளைச் சாப்பிட்டு வருகிறோம்.
இதனால் நமது தாடைப்பகுதி மெல்ல சுருங்கி வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நான் ஓட்டிச்செல்லும் கார்களின் பானட்
மற்றும் கண்ணாடி மீது திடீரென பறவைகள் மோதி விழுவது ஏன்?
காரணம்,
அவை கார்களை தங்களைக் கொல்ல வரும் எதிரியாக கருதுவதுதான். அவை வேண்டுமென்றே உங்கள்
மீது வந்து மோதுவதில்லை. தன்னைக் காத்துக்கொள்ள நினைத்து பறந்து வரும்போது ஏற்படும்
இடர்ப்பாடுகளால் தடுமாறி காரின் கண்ணாடி மீது மோதி விடுகின்றன. கணநேரத்தில் அவற்றுக்கும்
தனது கூடு, குஞ்சு, ஆதார் கார்டு, ஆரோக்கிய சேது செயலி என அனைத்தும் ஞாபகம் வந்திருக்கும்.
குற்றங்கள், அவை பற்றிய செய்திகள், கிசுகிசுக்கள்
நம்மை ஈர்ப்பது ஏன்?
இயல்பாகவே
மனிதர்கள் ஆதியில் வேட்டைச் சமூகமாக இருந்ததால், குற்றம் சார்ந்த செய்திகள் நம்மை பெரிதும்
ஈர்க்கின்றன. யார், எப்படி, எப்போது, எங்கே என தினத்தந்தியில் வரும் செய்திகளை படித்து
சிலாகிக்கும் குணம் இப்படித்தான் உருவானது. குற்றம் சார்ந்த மனிதர்களுக்கு ஏற்படும்
பரவசத்தை மேக்கிங் தி மர்டர், ஜின்க்ஸ், தி கீப்பர் போன்ற வெப், டிவி தொடர்களும் அதிகரிக்கின்றன.
பாட்காஸ்டாக இப்போது சீரியல் எனும் தொடரை ஒலிவடிவில் கேட்டு பரவசமுறலாம். வெறும் உற்சாகம்
என்பது மட்டுமன்றி, எப்படி குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள், குற்றவாளியின் நோக்கம்
என என்பதை அறிய ஆண்களை விட பெண்களே அதிகம் மெனக்கெடுகிறார்களாம். பெண்கள் புத்திசாலியாக
இருப்பதன் காரணம் இதுதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக