பெண் செய்தியாளர்களை கொச்சைப்படுத்தக் கூடாது! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!


Women, Office, Document, Letter, Reading, Mail, Bill
pixabay


இனிய தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலம்தானே?


ஊதியம் சார்ந்த பஞ்சாயத்து இருப்பதாக சொன்னீர்கள். இப்போது சென்னைக்கு வருவதாக அலைபேசியில் சொன்னது போராட்டத்திற்காகத்தானா? புரட்சிகரமான செல்ஃபீகளை நீங்களும் உங்களது சக நண்பர்களும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வரலாற்று பேறு கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


ஆழ்வார்பேட்டை ஆண்டவரே போராட்டங்களுக்கு நான் ரசிகன் என்று சொல்லியிருக்கிறார். அவரின் தாசரான நீங்கள் ஏதாவது கருத்துச்சொல்லி பேசுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா? பேசு தெய்வமே பேசு. மக்கள் கருத்து என்ன, மகேஸ்வரி ஒப்பீனியன் என்ன என்று நிறையபேரிடம் நாம் கேட்கலாம். நம்மிடம் பிறர் கேட்டால் எப்படி? நடிகர் பார்த்திபனை மனதில் செபித்தபடியே பேசினேன். நண்பர்கள் மிரண்டு ஓடிவிட்டனர்.


என்னமோ இப்போது ஆபாச படங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன. உலக சினிமா பார்க்கும் நண்பர்களின் தொடர்பு ஏற்படுத்திய பாதிப்பா? என்று தெரியவில்லை. நிறைய விஷயங்கள் அப்படி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. எடுத்த படத்தை ரசிக்க முடியாமல் இப்படியாகிவிட்டது நிலைமை. பஸ்டே கொண்டாட்டம்தான் போலீசுக்கு கல்லூரி மாணவர்களின் மீது கோபம் வருவதற்கான தற்போதைய காரணமாக உள்ளது. தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று சிலர் பெருமை வேறு பேசுகின்றனர். அரசியல் கட்சிகளின் செல்வாக்கினால் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போது நீதிமன்றம் வரை விவகாரம் சென்று வந்துகொண்டிருக்கிறது.


மாணவர்கள் விவகாரத்தில் உடலில் அபரிமிதமாக சேரும் சக்தியும், தன்னை சிறப்பாக எண்ணிக்கொள்ளும் தன்மையும்தான் ஆபத்திற்கு காரணம். அவர்களுக்கு ஓராண்டு மட்டும் ராணுவ பயிற்சி அல்லது அரசு சார்ந்து பணிகள் ஒன்றை செய்து வர பணிக்கவேண்டும். விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் அம்மா உணவகங்கள், தனியார் குடியிருப்புகள் என காணாமல் போய்க்கொண்டேயிருக்கின்றன. அப்புறம் எப்படி நிலைமை மாறும் என அரசு நினைக்கிறது?


மத்திய அரசின் சீர்திருத்த பட்டியலில் காந்தியும் இருக்கிறார் என்று தகவல் கசிந்துள்ளது. ரூபாயில் அவரையும் நீக்கிவிட்டு சுழற்சி முறையில் பல்வேறு தலைவர்களை அச்சிட்டு வழங்கும் சிந்தனையும் அரசுக்கு இருக்கிறது. இது கலவரத்தைத்தான் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். நம் வாழ்நாளுக்குள் தீரன் சின்னமலை, முத்துராமலிங்க தேவர் ஆகியோருக்கு ரூபாய் நோட்டில் இடம் கிடைப்பதைப் பார்க்கும் பாக்கியமும் கிடைக்கலாம். காதி உடையின் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. பிரதமர் மோடி அதனை அணியச்சொன்னதற்காக அல்ல. காதி என்ற நிறுவனம் எப்படி தொடங்கப்பட்டது, அந்த நிறுவனத்தின் தேவை பற்றி வாசித்து அறிந்ததால். அவர்களிடம் தைத்து விற்கப்படும் பொருட்கள் சரியில்லை. தனியாக துணி வாங்கி நம் பாணியில் தைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையெனில் ஃபேப் இந்தியா போன்ற நிறுவனங்களுடன் கைகோத்து செயல்படலாம். இதற்கெல்லாம் அரசுக்கு மனம் வரவேண்டுமே?


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


23.1.2017

__________________________________________________________________________


இனிய நண்பரே, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்.


நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நவதாராளமய பிரச்னைகளை உலகம் சந்திப்பதைப் போலவே சென்னை நிறைய விஷயங்களை எப்படியே சமாளித்து வெளியே வந்திருக்கிறது. இயற்கை ஒரு பக்கம் என்றால், பிரதமர் மோடி மறுபக்கம் நின்று பிரச்னைகளை ஏற்படுத்துகிறார். நற்பணி நடிகரின் பேட்டியைத் தவிர இந்த ஆண்டு தமிழர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை..


நீங்கள் வாசிப்பதற்கு புதிய புத்தகங்கள் ஏதேனும் வாங்கினீர்களா? கடவுள் சந்தை - மீரா நந்தா என்ற நூலை படித்து வருகிறேன். இதனை ஆசிரியரே படிக்க கொடுத்தார். உலகமயமாக்கம் எப்படி இந்தியாவை மாற்றுகிறது, குறிப்பாக இந்துமயப்படுத்தி வணிகத்தை நடத்திக்கொள்வதை ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து பேசியிருக்கிற நூல் இது. நான் இந்த நூலை புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நண்பர் வெங்கடசாமி வெண்பா கீதாயனின் ஸ்லீவ்லெஸ் போட்டோவை நெட்டில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொருக்குமான தேவை வேற சார் என்று பிலாசபி சொல்லிவிட்டு சிரிக்கிறார்.


பெண் செய்தியாளர்களுக்கான முதல் தகுதி ஆண்களின் இடுப்புக்கு கீழே கிளர்ச்சி ஏற்படுத்துவதுதானா? இதைப்பற்றி பேசும்போது இதுபோல உடை அணிந்த பெண்களை மூத்த செய்தியாளர் B***** சொல்லித் திட்டிவிட்டு இப்படியெல்லாம் ஆபீசுக்கு வந்தாத்தானே சம்பளம் ஜிவ்வுனு ஏறும் என்றார்.


இந்தியா - சீனா பற்றிய போர் நூல் ஒன்றைப் படித்து வருகிறேன். மொழி தகவல்களை சொல்லுவது மட்டுமே என்று கருதினால் கூட கடுமையாக இருக்கிறது.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


29.1.2017


__________________________________________________________________________




அன்புள்ள அன்பரசுவுக்கு, நன்றாக இருக்கிறீர்களா?


உங்களுக்கு பொதுவாகவே போராட்டங்கள் பிடிக்காது என்று நினைக்கிறேன். அதனால்தான் திரும்ப திரும்ப நீங்கள் சம்பளம் கேட்டு துறைசார்ந்த உரிமைகள் கேட்டு ஊழியர்கள் போராடும்போதெல்லாம் அவர்களை இழிவாக பேசுகிறீர்கள். இன்று நீங்களும் நானும் எட்டு மணிநேரம் வேலை பார்க்கிறோம் அல்லவா? இதனைக்கூட நாம் போராடித்தான் பெற்றோம்.


இப்போது இருக்கும் நிலைமை போராட்டங்களுக்கு சாதகமாக இல்லை என்பது உண்மைதான். அறவழியில் எங்களது ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை எப்படி சொல்வது? அதற்கு வேறுவழி இருந்தால் தாங்கள் கூறலாமே? மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போராட்டம் நடத்துவது என்றால் ஞாயிற்றுக்கிழமைதான் போராட்டத்தை நடத்தவேண்டும். இப்படி பேசவும் நீங்கள் தயங்கமாட்டீர்கள்.


அதிகாரத்தை நோக்கிய ஈர்ப்பு, நேசம்தான் உங்களை இப்படி பேசவைக்கிறத. எளிய மனிதர்கள் இந்த அதிகாரத்தை வாக்ககுரிமை மூலம் தந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். தங்களை மதிக்காத தலைவர்களை பின்னாளில் இதே மக்கள் தூக்கியெறிந்து இருக்கிறார்கள். உடை மாதிரியான விஷயங்களில் யாரும் குறிப்பிட்ட கருத்தைக்க் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. பருத்தித்துணி உடலுக்கு நல்லதுதான். ஆனால் விலை அதிகம் என்பதால்தான் செயற்கை துணிகள் வெற்றி பெற்றன. இவற்றைத் துவைப்பதும் எளிது. பிரதமரே சொன்னாலும் இதைப்பற்றி நம் பாக்கெட்டில் இருக்கும் காசு தான் எந்த துணியை வாங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யும்.


நீங்கள் பேசுவது வலதுசாரித்துவத்தை ஆதரித்து என்று புரிகிறது. ஆனால் வாசிக்கும் நூல்கள் அனைத்தும் அதற்கு எதிர்ப்பான நூல்களாகவே இருக்கிறது. உண்மையில் உங்களுக்குள் எத்தனை வலதுசாரிகள், இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. பெண்கள் இயல்பாகவே தங்களை அலங்கரிக்க ஆர்வப்படுவார்கள். அதற்காக அவர்களை பாலுறவுக்கு மட்டும் என்று நினைத்து உங்களது பொறுப்பாசிரியர் போல பேசுவது அவரது மனதிலுள்ள பிரச்னையைக் காட்டுகிறது. உடலை சந்தைப்படுத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சில பெண்கள் அதனை முதலீடாக்கி வெல்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் நாளிதழ்களில் அதனை செய்வது கடினம். டிவியில் அதனை செய்யலாம். பெண்களின் திறமையோடு மோதலாம். ஆனால் அவர்களை இப்படி கொச்சைப்படுத்தி பேசுவது தவறு என்பது எனது அபிப்பிராயம். தற்போது மாநில சுயாட்சி நூலை படித்து வருகிறேன். ஒரு முறை முழுக்க படித்தாலும் திரும்ப திரும்ப படிக்கலாம் என்று தோன்றுகிறது. காலம்தோறும் சில கருத்துகள் மாறலாம். ஆனால் நம் அடிப்படை மாறக்கூடாது எனபதை கவனத்தில் கொள்ளுங்கள் நண்பரே. எந்த நிறுவனத்திலும் நிறுவனர் குசு விட்டாலும் மணக்கிறது என்று சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது என்பார்கள். அப்படி சொல்லி முன்னேற்றம் பெறுவது மனசாட்சிக்கு விரோதமானது. நிறைய நூல்களை வாசியுங்கள் நன்றி!


.ராமமூர்த்தி


2.2.2017


கருத்துகள்