பணியில் தனிப்பட்ட அரசில் கருத்துகள் அவசியமில்லை! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!



Children, Happy, Group, Friends, Brothers, Smile
pixabay


இனிய நண்பர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.


முன்பு என்னை இடதுசாரி என்று கூறினீர்கள். இன்று உங்கள் சம்பளம் உயரவேண்டும் என்பதற்காக சிவப்புக்கொடியை ஏந்தியுள்ளீர்கள். காலத்தின் கோலம் இது. நான்சி பிரைடே படித்து நெகிழ்ந்து இன்பம் சுகித்த ஆள் நீங்கள். இன்று செஞ்சதுக்கம், உரிமை, தியாகம் பற்றி பேசும் நிலை.


தினசரி எங்களது அறைக்கு நீர் போட்டுவிட மன்னரைப் பார்த்து பரிசில் பெற காத்திருக்கும் புலவர் போல காத்திருந்து நின்று நீரை வாங்கி வருகிறோம், புலவரிடம் ஏடுகள் இருக்கும். எங்களிடம் குடங்களும் பக்கெட்டுகளும் இருக்கின்றன. நான் அடுத்தமுறை ஊருக்கு வந்தால் உங்கள் வீட்டுக்கு வர முயல்கிறேன். உங்கள் ஊர் மிகவும் தள்ளி அமைந்துள்ளது. சேலத்தில் இறங்கி நாமக்கல் பஸ் பிடித்து வருவது என்பது எனக்கு கனவு போலவே படுகிறது. வாய்ப்பிருந்தால் கொடுமுடி வந்தால் அருகே வந்துவிட்டு போகலாம் அல்லவா? உங்களது புத்தகங்களை வீட்டில் கொடுத்துள்ளேன். வாங்கிக்கொள்ளுங்கள். எனது கையால் நூல்களைப் பெற விரும்பினால் அதற்குள் நூல்மீது சிலந்திகள் வலைகட்டிவிடும் வாய்ப்புகள் இருக்கிறது.


மகாபாரத காவியத்தை ஏதேனும் வழியில் புனைவாக, திரைப்படமாக பார்த்திருப்பீர்கள். நான் கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் எழுத்தில் படித்தேன். மிகவும் இயல்பான மனிதர்களாக கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து நூலை எழுதியிருக்கிறார் போல. தத்துவம், உளவியல் சார்ந்த பார்வைகள் அதிகம். நிறைய இடங்கள் ரசிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. போரில் துரியோதனன் தோற்றுப்போகும் காட்சியில் காட்சிகள் முன்பின்னாக நகர்கின்றன. இவை வாசிப்பாளர்களை சோர்வுறச்செய்கின்றன. சோர்வுறாமல் படிப்பது கஷ்டம். படித்துவிட்டால் முக்கியமான கிளாசிக் நாவல் என்று உணர்ந்துகொள்வீர்கள்.


நன்றி!


சந்திப்போம்!


.அன்பரசு


15.6.2017

*******************************


அன்புத் தோழருக்கு வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா?


தங்களுடைய பணி பரபரப்பானது. என்னுடைய பிஎஸ்என்எல் எண்ணை யாருமே தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. நான் முடிந்தவரை ஞாயிறு தொடர்புகொள்வது அதனால்தான். இருவருமே எந்த பரபரப்புமின்றி பேச முடியும் என்று நினைக்கிறேன்.


நகரில் நமக்கு நாமே நேருக்கு நேராக அமர்ந்து உரையாடுவது போல அடிக்கடி தோன்றுகிறது. இனி நாம் நினைத்தாலும் நமக்கு தோள் மீது ஏறியுள்ள சுமைகள் நம்மை சும்மா விடாது. நேரம் ஒதுக்கி அதில் தான் நாம் பேசிக்கொள்ள முடியும். நிலைமை காலந்தோறும் மாறி வருகிறது. எனது எழுத்து வேலைகள் முடிந்த ஞாயிறு இரவில் இக்கடிதத்தை

எழுதி வருகிறேன். புயலிலே தோணி நாவலைப் படித்திருக்கிறீர்களா? அந்நாவலை எழுதிய ப. சிங்காரம் பற்றிய கட்டுரை ஒன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அண்மையில் ஏதாவது வாசித்தீர்களா? நேரம் கிடைத்தால் வாசியுங்கள். இந்திமொழி போராட்டம் பற்றி ஆர். முத்துக்குமார் எழுதிய மின்னூல் ஒன்றை தரவிறக்கினேன். படித்து வருகிறேன்.


அரசின் கட்டுப்பாடுகள் எப்போதும் போல பிறரை அடக்குவதாகவே இருக்கிறது. கையும், தாமரையும் என்பதுதான் மாறுகிறதே ஒழிய செயல்பாடுகள் மாறவில்லை. மனிதர்களின் இயல்பே இப்படித்தானோ?


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


19.6.2017

**************************************************

அன்புள்ள அன்பரசுவுக்கு, வணக்கம்.



நீங்களும் நானும் கருத்திபாளையத்தில் புதிய கலாசாரம் இதழை வாசித்தது நினைவுக்கு வருகிறது. இளமையில் நாம் செய்யும் பல்வேறு விஷயங்கள் மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அடிப்படையான மனிதநேயம் என்பதில் இடறி கீழே விழுந்துவிடக்கூடாது. நான் சொல்ல வருவது இதுதான். நீங்கள் பத்திரிகையில் இருக்கிறீர்கள். நான் அரசு பணியாளராக இருக்கிறேன். நாம் பணியை உணர்ந்து கவனமாக செய்யவேண்டும். அந்த பணிக்கான வரையறைகள்தான் இங்கு முக்கியம். தனிப்பட்ட கருத்தியல், அரசியல் கருத்துகள் அவசியமில்லை. அவை வேலையைக் கெடுத்துவிடும். பாகுபாடு பார்க்க வழிவகுத்துவிடும்.


உண்மையில் உங்களோடு அலைபேசியில் பேசுவதையே நான் விரும்புகிறேன். உங்கள் பேச்சில் இருக்கும் நக்கல் எழுத்தில் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. சிலசமயம் அவற்றை எடிட் செய்து விடுகிறீர்கள் போல. உங்கள் இயல்பாக எதனையும் நறுக்கென்ன நக்கல் செய்துவிடுவது நன்றாக கைகூடி வருகிறது. அதனை நீங்கள் எழுத்தில் கொண்டுவந்தால் நீங்கள் எழுத்தில் வெல்வீர்கள் என்று தோன்றுகிறது. முயலுங்கள். ஏனெனில் நீங்கள் எழுத்தில் பல்வேறு நூல்களை எனக்கு வாசிக்க சொல்லி பேசியிருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்தை திரும்ப படித்துப் பார்த்தாலே உங்களுக்கு இந்த உண்மை புரியும். அடுத்தமுறை ஊருக்கு வந்தால சேலத்தில் இறங்கிவிடுங்கள். அங்கிருந்து நாமக்கல் ராசிபுரத்திற்கு பஸ் பிடித்தால் என்னை சந்திக்கலாம். நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது இல்லை அல்லவா? ஒருமுறை வரலாம்.


புராணங்களுக்கு எதிரான மஞ்சை வசந்தன் போன்றோர் எழுதிய நூல்களைத்தான் படித்திருக்கிறேன். நீங்கள் கூறிய சமாச்சாரங்களுக்கு நான் எதிரானவன். புராணங்களால் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்பதால் எனக்கு நூல் பிரபலமாக இருந்தாலும் அதனைப் படிக்க ஆர்வம் இல்லை. பைரப்பா பற்றி நீங்கள் சொன்னது ஆர்வமூட்டுகிற தகவலாகத்தான் இருக்கிறது. இனி வரும் காலத்தில் புராணங்களிலிருந்து தனியாக குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எடுத்துக்கூட எழுதுவார்கள். புராணங்கள் எப்படி இருந்தாலும் இந்தியாவில் விற்றுப்போகிறது. அப்புறம் என்ன கவலை? தமிழகத்தைப் பற்றி புரிந்துகொண்டால் மட்டுமே பிற மாநிலங்களை விட நாம் வளர்ச்சி பெற்றுள்ளதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். அந்தவகையில் இந்திமொழிக்கு எதிரான போராட்டம் பற்றி நீங்கள் வாசித்து வருவது மகிழ்ச்சி தருகிறது.


எனது பணிசார்ந்த விஷயங்கள் எப்போதும் போல மேலே உள்ளவர்களுக்கும் எனக்கும் சண்டைகளும் சிடுக்குகளுமாகவே செல்கிறது. கல்லூரிக்கான புராஜெக்ட் போல முன்னர் பணிசெய்தவர்களின் புள்ளிவிவரங்களை அப்படியே பதிந்து வைத்துவிட்டு அன்றைய வேலை முடிந்தது என்று கையெழுத்து போட்டுவிட்டு அலுவலர்கள் சென்றுவிடுகிறார்கள். நேர்மையாக பணியாற்ற எந்த விஷயம் இவர்களைத் தடுக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நான் அலைந்து திரிந்து கிடைக்கும் விவரங்களை பதிந்துதான் பணியாற்றுகிறேன். மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக வேலை செய்வது முக்கியம் என நினைக்கிறேன். பார்ப்போம். எங்கள் வீட்டில் அம்மா நலமாக இருக்கிறார். உங்கள் வீட்டிலும் எல்லோரும் நலம்தானே?


நன்றி!


.ராமமூர்த்தி

22.6.2017




கருத்துகள்