ஊரடங்கு காலத்தில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் தற்காலிகமானவைதான்! - உளவியலாளர் பி.என். கங்காதர்
pixabay |
பி.என். கங்காதர்
உளவியலாளர், தேசிய உளவியல் நலம் மற்றும் நரம்பியல் கழக தலைவர்
ஊரடங்கு காலத்தில் முக்கியமான மனநிலை தொடர்பான பிரச்னை என்னாவாக உள்ளது என்று நினைக்கிறீர்கள்?
நிறைய வகையான உளவியல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் அவையெல்லாம் தற்காலிகம்தான். விரைவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு நிலைமை மாறும். உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் காணாமல் போகும். இவை அனைத்துமே வயதுக்கு தகுந்தாற்போல மாறுபடும். உதாரணமாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்படும். எரிச்சலுக்கு உள்ளாவார்கள். அதேசமயம் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி ஆண்டு ஒன்று வீணாவதை நினைத்து வருந்துவார்கள். வேலை செய்து வருபவர்கள், தங்களது வேலை பற்றியும் பொருளாதார நிலை பற்றியும் கவலைப்படுவார்கள். பொருளாதார சூழ்நிலையும் அவர்களுக்கு கவலை ஏற்படுத்தும். வயதானவர்கள், தங்களுக்கு கொரோனா வந்துவிடும் என்று நினைத்து பயந்துகொண்டிருப்பார்கள். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகம்தான். நிலை மாறி விதிகள் மாற்றப்பட்டதும் அறிகுறிகள் மறைந்துவிடும்.
மன அழுத்த பிரச்னையை நாம் எப்படி சமாளிப்பது?
இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இவற்றுக்கு ஆலோசனை தேவை. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். செடிகளை வளர்ப்பது, இசை கேட்பது, ஓவியங்களை வரைவது என ஏதாவது ஒரு படைப்பு சார்ந்த கலையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். இதன் விளைவாக நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். உங்கள் குடும்பத்தினரோடு ஏதாவது உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடலாம். அல்லது பலகை விளையாட்டுகளை ஏதாவது விளையாட முயலலாம்.
அண்மையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நோய்த்தொற்று பாதிப்பையும் மீறி சாலையை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது?
அரசு அதிகாரிகள் அனைத்து சூழ்நிலைகளிலும் தங்களால் முடிந்த விஷயங்களை, செயல்பாடுகளை செய்துதான் வருகிறார்கள். மக்கள், அரசு கூறும் விதிகளை மதித்து நடந்துகொள்வது முக்கியம். விதிகளை உடைப்பது அனைவரையும் ஆபத்தில் தள்ளும் என்பதை மறந்துவிடாதீர்கள். நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் வேளையில் அனைவருக்கும் ஆபத்தான செயலாகவே இந்நடவடிக்கை கருத்தில் கொள்ளப்படும். இந்தியாவில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் அரசியல்மயப்படுத்தப்பட்டு அதற்கு எதிரான செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது வைரஸை விட ஆபத்தானது.
இந்தியாவில் உளவியல் சார்ந்த சிகிச்சை என்பது அரசு, சமூகம், கொள்கை வகுப்பாளர்கள் என அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த சூழ்நிலை மாற வாய்ப்புள்ளதா?
தற்போதைய சூழலில், உளவியல் நலம் என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக இல்லை. கடந்த பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனநல மருத்துவமனைகளை நாங்கள் மேற்பார்வை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு மனநல மருத்துவமனைகளின் தரம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மனநல சிகிச்சை, அதற்கான மருந்துகள் என பல்வேறு கட்ட அளவிலும் தரம், நிலைமை மேம்பட்டிருக்கிறது. மாநில அளவிலுள்ள தொடக்கநிலை மருத்துவர்களுக்கு உளவியல் சார்ந்த மருத்துவம் மற்றிய அறிமுகத்தை ஏற்படுத்த நாங்கள் முயன்று வருகிறோம். இன்று எம்பிபிஎஸ் அளவில் மனநலம் சார்ந்த படிப்புகளையும் அரசு கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மனநல பிரச்னையில் தவிப்பவர்களை ஊரடங்கு காலத்தில் எப்படி பராமரிப்பது?
இப்போது அவர்களுக்கு பிரச்னையாக இருப்பது, வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஒன்றுதான். மற்றபடி அவர்களுக்கான மனநலசிகிச்சை, தீர்வை போனிலேயே அளிக்க முடியும். தேவையான மருந்துகளை மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம், ஊரடங்கு என்பதும் பெருந்தொற்று என்பதும் தற்காலிகமானதுதான். நாம் இதிலிருந்து விரைவில் மீண்டுவிட முடியும்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, மே4,2020
ஆங்கிலத்தில்: சுகந்தா இந்துல்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக