மாநில அரசுகள் நீராதார திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிதியை செலவிட வேண்டும்! - ஜல்சக்தி துறை அமைச்சர்



BJP delegation to meet Union Jal Shakti Minister Gajendra Singh ...
NIE




மாநில அரசுகள் நீருக்கு செலவு செய்யத் தயங்குகின்றன

ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்

நாட்டின் நீர்த்தேவை இப்போது என்ன நிலையில் உள்ளது?

நீர் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ளது. அதனை மக்களுக்கு வழங்க அவர்கள்தான் முயற்சிக்க வேண்டும். நாட்டிலுள்ள 5,500 நீராதாரங்களில் 138 இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவை நாட்டின் நீர்த்தேவையில் 60 சதவீதத்தை நிறைவு செய்கின்றன. ஏப்ரல் 30 நிலைமைப்படி நம்மிடம் 56 சதவீதம் நீர் உள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் நாம் பெற்ற நீரை விட 46 சதவீதம் அதிகமாகும். இமாலயத்தில் அதிக பனி படர்ந்து அது உருகி கிடைத்த நீர் கங்கை யமுனைக்கு வந்துள்ளது. எனவே, சென்ற ஆண்டு சென்னையில் தண்ணீருக்கு தவித்த நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை.

 2025ஆம் ஆண்டு நன்னீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நேஷ்னல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆஃப் பைப்லைன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டுள்ளதே?

நாங்கள் இந்த அறிக்கையை மனதில் கொண்டுதான் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருகிறோம். பெருந்தொற்று பிரச்னைக்கு பிறகு உலகில் பல்வேறு சவால்களை சந்திக்க இந்தியா தயாராகி வருகிறது. நீர் சார்ந்த தேவையும் அதிகரிக்கும். அதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம்.

2024க்குள் ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நீர் வழங்கும் திட்டம் என்னவானது?

திட்டங்களை நிறைவேற்றும் முன்னரே நாங்கள் அதன் இலக்குகளை எட்டுவது பற்றிய கருத்துகளை தெரிவிக்க விரும்பவில்லை. பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னர், நாங்கள் இதற்கான பணிகளைத் தொடங்குவோம். அதற்கு முன்னரே நாங்கள் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் பல்வேறு மாநிலங்களிலுள்ள குடிநீர்த்துறை அமைச்சர்கள், பொறியாளர்கள், அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். எனவே பெருந்தொற்று பிரச்னை தடுக்கப்பட்டவுடன் இதற்கான பணிகளை விரைந்து தொடங்குவோம். இப்போதே கட்டுமானப் பணிகளுக்கான நீர்த்தேவை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பெருந்தொற்று காரணமாக அரசு தனது திட்டத்தொகையை வெட்டிவிட வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக ஆம் என்றுதான் சொல்வேன். மத்திய அரசின் வருமான ஆதாரங்களை பெருந்தொற்று கடுமையான பாதித்துள்ளது. இதனால் ஜல்ஜீவன் திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்கள் அனைத்திலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு 50:50 சதவீதம் இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு இத்தொகையை அதிகரிக்க வாய்ப்பில்லை. மாநில அரசுகள் அவர்களாகவே இதற்கான நிதியை திரட்ட முயல வேண்டும். நீர் என்பது முக்கியமான ஆதாரமாக அவர்கள் கருத்தில் கொண்டு இதனை ஏற்கவேண்டும்.

பெருந்தொற்று பாதிப்பு சூழலை மேம்படுத்தியுள்ளதாக நினைக்கிறீர்களா?

எந்த சந்தேகமுமின்றி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திற்கு முன்பே நாங்கள் கங்கை, யமுனை ஆற்றில் நீர் மாதிரிகளை எடுத்து வைத்திருந்தோம். தற்போது அதன் தூய்மைத்தன்மை கூடியுள்ளது உண்மைதான். நாற்பது நாட்களுக்கு மேலாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அதன் கழிவுகள் ஆற்றில் விடப்படவில்லை என்பதால் ஆற்றின் நீர் தூய்மையாகியுள்ளது. எங்கள் துறை நவாமி கங்கை திட்டத்திற்காகவும் பணியாற்றி வருகிறது.

ராஜஸ்தானின் பில்வாரா மாதிரி, பெருந்தொற்று பாதிப்பைத் தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளதே?

இம்முறையை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். நோய் அறிகுறிகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துவிட்டு நோயாளிக்கு சிகிச்சை செய்வதே இம்முறை. அரசு இதில் பெரியளவு செயல்படவில்லை. மக்கள் விதிகளை பின்பற்றி இயங்கியதால் இம்முறை வெற்றி பெற்றுள்ளது. இதே மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூரில் ஏன் இம்முறை செயல்படுத்தப்படவில்லை என்று மாநில அரசுதான் கூறவேண்டும்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆங்கிலத்தில்: லிஸ் மேத்யூ

கருத்துகள்