மனநிலையை சிதைக்கும் கொள்ளைநோயில் இருந்து தப்பி ஓடும் தாயின் கதை! - பேர்ட் பாக்ஸ்
nine inch nails |
பேர்ட் பாக்ஸ் 2018
இயக்கம் சூசன்னே பியர்
மூலக்கதை - ஜோஸ் மாலர்மேன் - பேர்ட் பாக்ஸ்
ஒளிப்பதிவு சால்வடோர் டோட்டினோ
இசை அட்டிகஸ் ரோஸ், ட்ரெண்ட் ரேஷ்னர்
படம் முழுக்க ஒரே ஒருவரை மட்டுமே நம்பி பார்க்கலாம். அது நடிகை சாண்ட்ரா புல்லாக்குக்காக. அழுகை , மிரட்சி, கோபம், இயலாமை என அத்தனை நவரசங்களையும் படம் முழுக்க அச்சு முறுக்கு பிழிவது போல பிழிந்திருக்கிறார்.
இப்போதுள்ள ஊரடங்கில் கொரோனா பீதி இன்னும் பல படி அதிகமானதுபோல இருக்கிறது இந்த படம் பார்த்தால். எனவே கவனம் பயப்படாதவர்கள் மட்டும் படம் பார்க்கலாம்.
அமெரிக்காவிலுள்ள நகரங்களில் திடீரென கண்ணுக்கு தெரியாத கொள்ளைநோய் பரவுகிறது. அதாவது கண்கள் மூலம் வெளிச்சத்தைப் பார்த்தால் உடனே அவர்களின் கண்களின் பாப்பா வௌவால் பறப்பது போன்ற டிசைனுக்கு மாறுகிறது. இப்படி மாறியவர்கள் உடனே மாடியில் இருந்தால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இல்லையெனில் கார்களை கொண்டுபோய் பிறர் மீது ஏற்றி அவர்களையும் கொன்று, தானும் இறக்கிறார்கள். இந்த பாதிப்பு நேரும் நிலையில் சாண்ட்ரா புல்லாக் தன் தோழியோடு மருத்துவமனைக்கு தன் கருவுற்ற குழந்தையை சோதிக்க போகிறார். அங்கு போய் திரும்பும்போது தோழியும் நோய்வாய்ப்பட, காரை குப்புற கரப்பான் பூச்சிபோல கவிழ்த்துப் போட்டுவிடுகிறார். அதிலிருந்து மீளும் சாண்ட்ரா அங்குள்ள வயதானவரின் வீட்டில் தஞ்சம் புகுகிறாள். அவள் எப்படி தன் குழந்தையைப் பெற்றாள், தன் உயிரோடு தன் குழந்தையையும் எப்படி காப்பாற்றினாள் என்பதுதான் படத்தின் கதை.
படம் சற்றே வளர்ந்த இரு குழந்தைகளோடு ஆற்றில் பயணிக்கும்போது தொடங்குகிறது. அதாவது நிகழ்காலம், இறந்தகாலம் என முன் பின்னாக நகரும் கதையில் ஒளிப்பதிவு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கொரோனாவிலும் கூட இப்படி நகரம் ஆகிவிடுமோ என்று சடாரென மனதில் பீதி ஏற்படுவது நிஜம். நோயிலிருந்து தப்ப கண்களை இறுக்கமாக கட்டிக்கொள்ளவேண்டும். எங்கு பறவைகள் சத்தம் கேட்கிறதோ அதனை நோக்கி போகவேண்டும். நோய் வரும் காலத்தில் அடுத்தவர்களின் மீதான நம்பிக்கையின்மை, சுயநலம், பதற்றம், உயிர்வாழும் வேட்கை என அனைத்தையும் படம் நேர்த்தியாக பதிவு செய்துள்ளது.
கண்களை காப்பாத்திக்கோங்க!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக