கொடூர வில்லனை பழிவாங்கும் சினிமா உதவி இயக்குநர்! - ராஜா செய் வேஸ்தே






Ducati vs Yamaha: Isha Talwar's bike tales from Raja Cheyyi Vesthe ...
இந்துஸ்தான் டைம்ஸ்


ராஜா செய் வேஸ்தே தெலுங்கு -2016

இயக்கம்  பிரதீப் சிலிகுரி

ஒளிப்பதிவு சமலா பாஸ்கர் 

இசை சாய் கார்த்திக்


ராஜாராமுக்கு திரைப்பட இயக்குநராவது கனவு. அதற்காக அவரது நண்பர்களோடு இணைந்து குறும்படங்களை எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போது சைத்ரா என்ற பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார். ஐடியில் வேலை செய்யும் அவரும் ராஜாவுக்கு செக் வைத்து க்ரீன் சிக்னல் கொடுக்கிறார். காதலியோடு ஜாலியாக ஹோட்டல் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு தான் எழுதிய கதையை காதலிக்கு சீரியசாக சொல்கிறார். அந்த ஹோட்டலில் உள்ள அனைவருமே கதையைக் கேட்டு பிரமித்துப்போய் கைதட்டி பாராட்டுகின்றனர். அடுத்த சில நாட்களில் அவருக்கு ஒரு கொரியர் வருகிறது. அதில் பணமும், காதல் கதையை எழுதித் தர கோரிக்கை இருக்கிறது. 

ராஜாவுக்கு நேரடியாக அழைத்து கதை கேட்கலாமே, எதற்கு கதை மட்டும் எழுதித் தரச்சொல்கிறார்கள் என நண்பர்களிடம் புலம்புகிறார். நண்பர்கள் காசுதான் வேலைக்கு முன்னரே கிடைச்சிருச்சே அப்புறம் என்ன என்கிறார்கள். அதன்படி கதையை எழுதி குறிப்பிட்ட இமெயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரம் வரும் இடம் , அவருக்கு உள்ள பலவீனத்தைச் சொல்லி அவரை கொல்வதற்கான கதையை எழுதி தரும்படி மற்றொரு கொரியர் வருகிறது. அதை எழுதி அனுப்பிய பிறகு, அவருக்கு அந்த கதைப்படி நீயே வில்லனை கொல்லவேண்டும் என்று போனில் ராஜாவை மிரட்டுகிறார்கள். இல்லையெனில் அவனது காதலி சைத்ரா, நண்பர்கள் கொல்லப்படுவார்கள் என மிரட்டுகிறார்கள். ராஜாவுக்கு யார் இப்படி வலைவிரிக்கிறார்கள், கொல்வதற்காக அவர்கள் சொல்லும் மாணிக் என்பவன் யார் என்பதை படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

படத்தின் ட்விஸ்டுகள் ராஜாவின் அப்பா யார் என்பதும், அவரின் பணத்தேவை நண்பரும்தான். இருவரும் கதையில் சுவாரசியத்தை  ஏற்படுத்துகிறார்கள். நர ரோகித் கதையைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்டியிருக்கிறார். ஆனால்  வேகமாக சண்டை போட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும். பாடல்களை கேட்கும் படி உருவாக்கியிருக்கிறார் சாய் கார்த்திக். ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. இஷாவுக்கான காட்சிகள் குறைவு. ஸ்ரீனிவாஸ் அவசரலா கொஞ்சநேரம் வந்தாலும் கவருகிறார். 

ராஜா கையை வெச்சா எல்லாமே சரியாகும்!


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்