தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது மனிதநேயமற்ற செயல்! - ரெனானா ஜாப்வாலா
ரெனானா ஜாப்வாலா, பொருளாதார வல்லுநர்
சேவா எனும் பெண்கள் அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். இந்தியாவிலுள்ள பதினான்கு மாநிலங்களில் 1.7 மில்லியன் மக்கள் இதில் இணைந்துள்ளனர். ரெனானா பொது முடக்க காலம் பற்றியும், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைப் பற்றியும் பேசினார்.
தொழிலாளர் சட்டங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதிய தொழில்களைத் தொடங்க இது தடையாக உள்ளதா?
நான் அப்படி நினைக்கவில்லை. இந்தியாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தொழிலாளர் சட்டங்களின் அனுகூலம் கிடைப்பதில்லை. குறைந்தபட்ச சம்பளம் என்ற உரிமை கூட அவர்களுக்கு நிறைய மாநிலங்களில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. சீனாவில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த பாதுகாப்பு அதிகம். இந்தியாவில் அதுபோல கிடையாது. தொழில்களை எளிமையாக தொடங்க முடியாததற்கு அரசு அமைப்புகள், போதாமை கொண்ட அடிப்படைக் கட்டமைப்புகளும்தான் காரணம்.
பொதுமுடக்க காலம் தொழிலாளர்களைப் பற்றி எந்த விஷயங்களை வெளியே கொண்டுவந்துள்ளதாக நினைக்கிறீர்கள்?
இந்த பொதுமுடக்க காலம் தொழிலாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாராத அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஒப்பந்தம் அல்லது தினசரி கூலியைப் பெற்று பணியாற்றுபவர்கள். இங்குள்ள விவசாயம் சாராத பல்வேறு துறைகள் இப்படித்தான் செயல்படுகின்றன. இதனால் விவசாயம் சாராத பிற தொழில்துறைகள் அனைத்தும் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டன. சிகாகோவில் செய்த ஆய்வுப்படி, மே மாதம் 2020 அன்று, இந்தியக் குடும்பங்களில் உள்ள 70% சேமிப்பு பெரும்பாலும் செலவழிக்கப்பட்டுவிட்டது என்று கூறுகிறது. 78 சதவீதம் பேர் குடும்ப செலவுகளுக்காக வெளியில் கடன் வாங்கித்தான் சமாளித்து வருகிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் செலவுகள் அதிகரித்தபடியால், உணவுகளைக் கூட குறைத்துக்கொண்டுவிட்டனர் என்ற அவல உண்மையும் தெரிய வந்துள்ளது.
தற்போது தொழிலாளர்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை: அரசின் உதவி அல்லது வேலைக்கான பாதுகாப்பு?
மத்திய அரசு அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவுப்பொருட்களை பொது விநியோக முறை மூலம் வழங்கவேண்டும். இந்தியாவில் உள்ள 30 சதவீத குடும்பங்களுக்கு குடும்ப அட்டை கிடையாது. சில மாநிலங்கள, பொது முடக்க காலத்திலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் இது சதவீத அளவில் மிகவும் குறைவு. அரசு வங்கிக்கணக்கு மூலம் நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் பணம் அனுப்பியுள்ளது. இதில் 50 சதவீத பெண்களுக்கு ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாயை அரசு அனுப்பியுள்ளது. மூன்று மாதங்களுக்கேனும் அரசு 5 ஆயிரம் ரூபாயை கணக்கில் அனுப்பி உதவ வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
பொதுமுடக்க காலம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பண வசதி, உணவு ஏன் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவும் கூட இல்லையென்று புரியவைத்துள்ளது. இந்த நேரத்தில் தொழிலாளர்கள் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது மனிதநேயமில்லாத நடவடிக்கை. இனிமேல் தொழிலாளர்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்யவேண்டும். எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக பன்னிரெண்டு மணி நேர வேலை என்பது சரியான முறை அல்ல. உ.பி அரசு தொழிலாளர்களுக்கான உரிமை, நலம் சார்ந்த அனைத்து சட்டங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு வேலைநேரம் கூடுவதோடு, அவர்களுக்கான சம்பளமும் குறைவாகவே கிடைக்கும். இதை எதிர்த்து அவர்கள் சங்கத்தில் புகார் செய்வதும் இனி சாத்தியம் கிடையாது.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா மே17, 2020
ஆங்கிலத்தில்: அமுல்யா கோபாலகிருஷ்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக