மக்களுக்கு நேரடியாக பணம் வழங்குவது மட்டும் ஒரே வழி அல்ல! - நிர்மலா சீதாராமன்









Satish Acharya on Twitter: "Nirmala Sitharaman's budget! #Budget… "







நிர்மலா சீதாராமன் , நிதி அமைச்சர்


இந்திய அரசு அறிவித்துள்ள இருபது லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி இதுவரை இல்லாத அளவு மக்களிடம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அரசு இதனை எப்படி மக்களுக்கு அளிக்கவிருக்கிறது என்பது பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டோம்.


இந்திய அரசு அளித்துள்ள நிதியுதவியை என்னென்ன அம்சங்களை பரிசீலனை செய்து அறிவித்துள்ளது?


இந்திய அரசு, பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இதனால் ஏழைகள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியது. பல்வேறு மாநிலங்களிலுள்ள நிதி அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்வர்கள் ஆகியோரின் பல்வேறு கருத்துகளைக் கேட்டு நாங்கள் இத்தொகையை அறிவித்துள்ளோம். பிஎம் காரிப் கல்யாண் நிதியுதவி வேகமாக பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு பாதிப்பைக் குறைத்தோம். பிரதமர் அலுவலகம், நிதியமைச்சக அலுவலகம் மற்றும் பிற துறைகள் அனைத்தும் ஒருங்கிணைவாக செயல்பட்டுத்தான் இந்த நிதி திட்டத்தை மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம்.


மக்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்புவதை நீங்கள் ஏற்கவில்லையா? அது வேலைவாய்ப்புக்கு உதவாது என நினைக்கிறீர்களா?


நாங்கள் வங்கிக்கணக்கு வழியாக ரூ. 500 முதல் 1, 500 வரை மக்களுக்கு அனுப்பியுள்ளோம். குடும்ப அட்டை மூலம் மூன்று மாதங்களுக்கு அளித்த உணவுதானியங்களை இப்போது ஐந்து மாதங்களுக்கு அளிக்க உள்ளோம். நேரடியாக பணத்தை மக்களுக்கு அளிப்பது பற்றி பேசுகிறார்கள். அப்படி தருவதுதான் ஒரே வழி என்று நினைக்கிறீர்களா? சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி மூலமாக பணம் வழங்க முடிவு செய்திருக்கிறோம். இப்படி பணத்தை வங்கி மூலம் பெறுபவர்கள், அதனை தங்களுடைய செலவுகளுக்கும் பயன்படுத்துவார்கள். அதன் மூலம் சந்தை வளர்ச்சி பெறும் என நம்புகிறோம். நேரடியாக பணம் கொடுப்பது என்பதை மட்டுமே அரசு நம்பவில்லை.


வங்கிகள் பணத்தை கடன் கொடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?

அவர்கள் தங்களுடைய இருப்பை ரிசர்வ் வங்கியிடம் அல்லவா கொடுத்து பெற்றுவருகிறார்கள்?


நான் இதற்கு வங்கிகளை குறைசொல்ல விரும்பவில்லை. அவர்கள் இம்முறையில் ரிவர்ஸ் ரெப்போ படி ரிசர்வ் வங்கியிடம் பணத்தை கொடுத்தால் அதற்கு பதிலாக என்னிடம் கொடுக்குமாறு கேட்பேன். நான் வங்கி நிர்வாகிகளுடனான சந்திப்பில் இதுபற்றி பேசியுள்ளேன். பொதுமுடக்க காலம் முடிந்து அவர்கள் தாங்கள் கொடுத்த கடன்கள் பற்றிய அறிக்கையுடன் என்னைச் சந்திக்க வருவார்கள் என்று நம்புகிறேன்.


விப்ரோ தலைவரான அசீம் பிரேம்ஜி கூட பணத்தை நேரடியாக மக்களுக்கு கொடுப்பது பயன் தரும் என பேசியுள்ளனரே?


நீங்கள் கூறுவது பயன்தரும் எனில் நாங்கள் எதற்கு காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டத்திற்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கவேண்டும்? இதில் பாஜகவிற்கென தனி அரசியல் கொள்கை ஏதுமில்லை. இன்று பசிக்கிறது என ஒருவருக்கு மீனைக் கொடுப்பதை விட நாளை அவரே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்படி மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது நல்லது என நாங்கள் நினைக்கிறோம்.


உற்பத்தி சரிந்துள்ள நிலையில் எப்படி நிதியுதவிகளை மக்களுக்கும் தொழில்துறையினருக்கும் அளிப்பீர்கள்?


இப்போதுள்ள பெருந்தொற்று நிலைமை காரணமாக எங்களால் அறிவித்த தொகையை உடனே மக்களுக்கு வழங்க முடியாது. பொதுமுடக்க காலம் மெல்ல விலக்கப்பட்டு உற்பத்தி தொடங்கியதும் பொருளாதாரம் மேலெழும். அப்போது இந்த தொகையை எளிதாக தொழில்துறையினருக்கு அரசு சொன்னபடி வழங்கும்.


வீமானசேவைத்துறை , சுற்றுலா, மருத்துவத்துறை ஆகியவை பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன?


இத்துறைகளுக்கு அரசு முன்னமே தேவையான நிதியுதவிகளை அறிவித்துள்ளது. மேலும் இடர்பாடுகள் ஏற்பட்டால் உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.


பல்வேறு கடன்களுக்கான தவணைகளை தாமதமாக செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. இந்த தவணைக்காலம் நீட்டிக்கப்படுமாழ


இதனை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்தான் கூற முடியும். அவர் பல்வேறு நிதி அமைப்புகளோடு கலந்துபேசி இதுபற்றிய முடிவுகளை அறிவிப்பார்.


2008ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட நிலையை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கலாமா?


அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வங்கிகள் அளித்த கடன்களை முறைப்படி வசூலிக்கவில்லை. அவர் வாராக்கடன்களாக தேங்கின. மேலும் அரசின் மோசமான கொள்கைகள் காரணமாக பணவீக்கம் பத்து சதவீதமாக அன்று இருந்தது. நாங்கள் இந்த நிலைமையிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.


பல்வேறு மானிய உதவிகளை அரசு உற்பத்தி சரிந்த நிலையில் அறிவித்துக்கொண்டிருந்தால், இந்தியாவின் உற்பத்திசார்ந்த பொருளாதார வளர்ச்சி கீழே விழுந்துவிடாதா?


உலக நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கீழே விழும், தரவரிசை வீழ்ச்சி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. நாம் சில பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தியுள்ளோம். அதன்படி விரைவில் இந்திய நிறுவனங்களின் நிலைமை மீட்சி பெறும். விவசாய அறுவடைப்பருவம் இது. இந்த சிக்கலான நேரத்தில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பு இந்தியாவுக்கு மட்டும் அல்ல. அனைத்து நாடுகளும் இதனால் நிலைகுலைந்துள்ளன. பிரதமர் மோடியின் தலைமைத்துவம், உடனடி பலன்களை எதிர்ப்பார்ப்பதல்ல. நீடித்த பலன்களே எங்களது குறிக்கோள்.


சீனாவிலுள்ள நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறி வரும் என நம்புகிறீர்களா?

வணிகம் சார்ந்து அதனை யோசிக்க வேண்டும். அடிப்படைக் கட்டமைப்புகள், எளிதாக வணிகம் செய்யும் வசதி, சூழலை நாம் உருவாக்க வேண்டும். பின்னர் எந்த துறை சார்ந்த வசதிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாமே முடிவு செய்யவேண்டும். இதற்கு பல்வேறு அமைச்சகங்களின் உதவி தேவைப்படுகிறது.


நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா


ஆங்கிலத்தில்: ராஜீவ் தேஷ்பாண்டே, சித்தார்த்தா, சுரோஜித் குப்தா



கருத்துகள்