அப்பாவின் பாசமா? காதலனின் நேசமா? முடிவெடுக்க தடுமாறும் மகள் - லவ்லி
youtube |
லவ்லி 2012 telugu
இயக்கம் – ஜெயா
இசை – அனுப் ரூபன்ஸ்
ஒளிப்பதிவு – அருண்குமார் எஸ்
அப்பாவின் வெறித்தனமான மகள்
மீதான பாசம், அவளது காதல் வாழ்க்கையை எப்படி கோக்குமாக்காக மாற்றுகிறது என்பதுதான்
கதை.
அப்பாக்களுக்கு மகள் மீது தீவிரமான
பற்றுதல் இருக்கும். இது அம்மாக்களுக்கு பையன்கள் மீது இருக்கும் ஆசையைப் போலத்தான்.
ஆனால் இந்த ஆசை, பிரியம் எல்லை தாண்டினால் என்னாகும்? என்பதுதான் கதை.
மகாரதி என்ற தொழிலதிபரின் மகள் லாவண்யா. மகாரதி தன் மகள் எப்படி வளரவேண்டும். எங்கு படிக்கவேண்டும், எப்படி திருமணம் ஆக வேண்டும் என்பதையெல்லாம் கனவு கண்டு டைரியில் எழுதி வைத்தபடி இருக்கிறார். அவள் வாழ்க்கை தான் நினைத்தபடி இருக்கவேண்டும் என நினைக்கிறார். வாழ்க்கை நாம் நினைத்தபடியே இருக்கவேண்டும் என்றிருக்க என்ன அவசியம் வந்தது?
அப்படித்தான் அவளுக்குத் தோழியாக வாய்த்தவளான
லல்லி மூலம் ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் பழக்கமாகிறார். தோழி தனது ஆண் நண்பரைப் பார்க்க
நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு திடீரென தயக்கம் தோன்ற, தனக்கு பதில் லாவண்யாவை அனுப்புகிறாள்.
லாவண்யாவும் ஹோட்டலில் சென்று காத்திருக்கிறாள். அங்கு அவளை சந்திக்க வரும் கிட்டு,
லாவண்யாவைப் பார்த்து அதிர்ச்சி ஆகிறான். முன்னமே அவளைப் பார்த்து ரூட் விட்டு தோற்றுப்போன
சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இதனால் தனக்கு பதிலாக, தனது நண்பன் ஆகாஷை அனுப்பி
வைக்கிறான். லாவண்யாவிற்கு ஆகாஷைப் பார்த்ததும் காதல் சுனாமி சுற்றி அடிக்க, தன் தோழி
லல்லிக்காக என்று சொல்லி ஆகாஷிடம் நெருங்கிப் பழகுகிறாள். இந்த உண்மை லாவண்யாவின் அப்பாவுக்கு
தெரிந்ததா, அவர் ஆகாஷை ஏற்றுக்கொண்டாரா என்பதுதான் கதையின் முக்கியப்பகுதி.
ஆஹா
ஆகாஷாக ஆதி வெளுத்து வாங்கியிருக்கிறார்.
காதல் தருணங்களிலும், இறுதிக்காட்சியில் தன்னை லாவண்யாவின் தந்தை நிராகரிக்கும்போதும்
சிறப்பாக நடித்திருக்கிறார். கதையின் முக்கிய திருப்பங்களுக்கு உதவ வெண்ணிலா கிஷோர்
இருக்கிறார். ஃபேஸ்புக் வழியாக பெண்களுக்கு காதல் தூண்டில் போடும் காட்சிகளில் கலக்குகிறார்.
பின்னர் ராஜேந்திர பிரசாத் இந்த காமெடி கோதாவில் இறங்குகிறார். அப்பா, ஆசைக் காதலனா
யார் முக்கியம் என முடிவெடுக்க வேண்டிய இடங்களில் ஷான்வி உணர்ச்சிகளை வெளிப்படுத்த
திணறுகிறார். அழகான முகம் என்பதால் ஆகாஷ் போல
லவ்லியான புன்னகை என்று சொல்லி கடந்துவிடலாம். அனுப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் இனிமையாக
காதை தாலாட்டுகிறது.
ஐயையோ
தனது மகளுக்கு வரும் கணவன்
எப்படி என ஆராய அவனது வீட்டுக்குப் போல் வேலைக்காரனாக இருக்கவேண்டுமா என்ன? எளிமையாக
டிடெக்டிவ்விடம் பணியை ஒப்படைத்துவிட்டால் அடுத்த சோலியைப் பார்க்கலாம் அல்லவா? சண்டைக்காட்சிகள்
பொருந்தவில்லை. ஆகாஷ், தந்தைக்கும் மகளுக்குமான பாசம் எனக்குப் பிடிக்காது என்று அடிக்கடி
சொல்கிறார். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று படம் முழுக்க சொல்லவேயில்லையே?
புன்னகையுடன் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக