வங்கிகளையும் கூட அரசு தனியாருக்கு விற்றுவிட வாய்ப்பிருக்கிறது - ஒரு துளி மணலில் ஓர் உலகு!





People, Group, Friends, Fist Bump, Lifestyle, Team
pixabay






ஆருயிர் தோழர் ராமமூர்த்திக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


ஒருமணிநேரமாக பின்னி பெடலெடுத்த மழை இப்போதுதான் நின்றிருக்கிறது. மழை விட்டும் தூவானம் விடவில்லை. பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதவில்லை. மன்னியுங்கள். .,வியில் மையம் கொண்ட சைக்ளோன் தொடர் வாசித்தீர்களா? அதில் குளோபல் ஆக்டர் பேசுகிறார். அவரின் பேச்சு முழுவதும் ஊழல் ஒழிப்போம் என்று ஞாயிற்றுக்கிழமை வேலையின்றி தேநீர் சட்டை அணிந்து காமராஜர் சாலையில் பேரணி செல்பவர்களுக்கானது.


அன்றைய பொழுது இனிதாக கழிய வேண்டுமல்லவா? இடியாப்பத்தில் இட்லியை நுழைத்து பேசும் அவரது பேச்சு அறிவுநுட்பமானவர்களுக்குப் புரியலாம். அனைவருக்கும் புரியும்படி யாரேனும் செய்தியாளர்கள் அவர் சொன்னதை திரும்ப எழுதினால்தான் உண்டு. இவருக்கு ஏதாவது வாயப்பு உண்டா? இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் 30 சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்று மத்தியில் காவிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால் இந்த தேசத்தில் எதுதான் நடக்காது? மக்கள் ஜனநாயகப்பூர்வமாக வாக்குகளை போடுகிறார்கள். ஆனால் ஜெயித்தவர்கள் அதற்குப்பிறகு, தங்களுக்கு பிடித்த கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறார்கள், இதை முன்கூட்டியே செய்தால் தேர்தல் செலவு கூட மிச்சமாகும் அல்லவா? முன்பு தேர்தலுக்கு ஒரு மரியாதை இருந்தது. இன்று அனைத்து அமைப்புகளின் நம்பகத்தன்மையும் சரிந்து வருகிறது.


ஹர ஹர மகாதேவகி படம் பார்த்தேன். படத்தை வீடியோவாக பார்ப்பதை விட ஒலிச்சித்திரமாக கேட்டுவிடலாம். ஏடாகூட படம் என்று சொல்லுவதெல்லாம் உல்லுல்லாயி. அதனால் படத்தை நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கலாம். கி.மு. கி.பி. - கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய நூலைப் படித்தேன்.


உலகம் தோன்றியது முதல் அசோகர் பௌத்த மதம் தழுவியது வரையில் எளிமையாக விவரித்துச்செல்கிறது நூல். ஜாலியாக எழுதியிருக்கிறார் என்பதால் வரலாறு தூக்கம் வரவைக்கவில்லை. இந்த நூலில் டூட்டாங்க் என்ற மன்னர் இறப்பது, அதிமுக நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா இறந்ததை நினைவுபடுத்தியது. அம்மன்னரும் இதேபோலத்தான் திடீரென மர்மமாக இறந்துபோகிறார். ரீஎன்ட்ரி வரலாறு செய்தி ஆசம். நீங்கள் வாங்கி வைத்த இடதுசாரி நூல்களுக்கு திரும்பியிருப்பீர்கள். விரைவில் சூரியன் பதிப்பகத்தில் சிவந்தமண் என்ற இடதுசாரி வரலாற்று நூல் வெளிவரவிருக்கிறது. வேலைகள் நடந்து வருகிறது. பார்ப்போம்.




நன்றி, சந்திப்போம்


.அன்பரசு


16.11.2017

*******************************


அன்பு நண்பர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.


தேர்தல் நேரத்தில் ஜிஎஸ்டியைக் குறைத்திருக்கிறார்கள். ஏன் என்று கூட அறிவிக்கும் தெனாவட்டு பிற்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கலாம். பேங்கில் டெபாசிட் செய்யப்போனால் டோக்கன் போட்டுவிட்டு அலைபாய்ந்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் வங்கியில் கடன் வாங்குபவருக்கு பேப்பர்போட் குளிர்பானம் வழங்கி கௌரவித்து கடன் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இப்போது கடன் வாங்குபவரை அடுத்து நாம் நாளிதழில் இங்கிலாந்தில் இருக்கிறார் என்று செய்தியாக மட்டுமே தகவல் அறிவோம். இவர்களின் கடன் வழங்கும் வேகத்தைப் பார்த்தால் நூறுரூபாய், ஐம்பது ரூபாய்கள் கூட எத்தனை நாட்களுக்கு செல்லும் என்று சந்தேகம் வருகிறது.


மனிதனும் மர்மங்களும் - கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். தீவிர அரசியல் மீது ஆர்வம் கொண்டவர் நீங்கள். எனவே அரசியல் பற்றிய நூலை வாசித்துக்கொண்டு இருப்பீர்கள். மாநில சுயாட்சி என்ற நூலை உங்கள் அறையில் பார்த்தேன். அனேகமாக முழுநூலையும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். துறை சார்ந்த விஷயங்கள் பற்றி நான் முத்தாரத்தில் எழுதச்சொல்லி தங்களை தொந்தரவு செய்தேன். ஆனால் நீங்கள் மறுத்துவிட்டீர்கள். முடிந்தளவு நீங்களாவது அதனை பதிவு செய்து வைத்தால் பின்னாளில் யாருக்கேனும் பயன்படும். மூளை பெருத்தவர்கள் பலரும் இன்டலெக்சுவல் மாஸ்டர்பேஷன் செய்யும் இடத்தில், தகவல்களை மக்களிடமே பகிர்வது நல்ல விஷயம்தானே?


மழை நிற்காமல் பெய்துகொண்டிருக்கிறது. இரவு இன்னும் இருளாக குளிர்ச்சியாக இருக்கிறது. நாளை நீந்தியும் அலுவலகத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைக்கலாம். காங்கேயம் பகுதியில் மழை உண்டா?


அண்மையில் எங்கள் அலுவலகத்தில் இசைவிழா ஒன்றுக்கு அழைப்பிதழ் கிடைத்தது. எடிட்டர் எங்களை அழைத்துச்சென்றார். ஆழ்வார்பேட்டை அருகிலுள்ள மியூசிக் அகாடமியில் விழா நடைபெற்றது. இசையில் தொடங்குதம்மா எனபது நிகழ்ச்சியின் பெயர். நிகழ்ச்சியை இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா நடத்தினார். தனியாக இசையமைத்து முன்னேறி வருவார் என்று நினைத்தேன். ஆனால் அப்பாவின் நிழலுக்குள்ளேயே ஒதுங்கிக்கொண்டார். பாடியவர்கள் யாரும் சுயமாக பாடியிருந்தால் பரவாயில்லை. பலரும் இன்னொருவர் பாடியதை அப்படியே நகல் செய்து பாடினார்கள். பாடகி ரீடா குரலுக்கு பயிற்சி செய்வதை விட முக அழகுக்கு பல நாட்கள் ஒப்பனைப் பயிற்சி செய்திருப்பார் போல. எனக்கு நிகழ்ச்சியில் திருப்தி இல்லை. எம்.ஜே. ஸ்ரீராம் என்பவர் பாடியது பரவாயில்லை என்று பட்டது. இவர் எஸ்பிபி போலவே உருவத்திலும் குரலிலும் இருந்தார். கொஞ்சமேனும் சிரத்தை எடுத்து பாடியது இவர் ஒருவர்தான். பவதாரிணி எந்த பயிற்சியும் இல்லாமல் பாடியது அப்படியே காதார உணர முடிந்தது. மொத்தம் 25 பாடல்கள். மிருதங்கம் வாசித்த விக்ரம் என்பவர் அசத்தலாக உழைத்தார். கீபோர்ட் வாசித்தவரும் நன்றாக பணியாற்றினார். அனைத்தும் மேக் கணினியை நம்பி ஒப்படைத்துவிட்டதால் விழாவில் எதிர்பார்க்க ஏதுமில்லை.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


16.11.2017

*****************************************************



அன்புள்ள அன்பரசுக்கு, வணக்கம்.


எப்படியிருக்கிறீர்கள். உங்கள் உடலைப் பார்த்தால் நீங்கள் நிறைய பணத்தை சேமிக்கிறீர்கள் என்பது போல படுகிறது. உடல் இருந்தால்தான் கனவுகள் சாத்தியம் என்பதை எப்போதும் மறக்காதீர்கள். கமலின் ரசிகனாக நான் ஒரு காலத்தில் இருந்தேன். அவரை அப்படியே உடைகளில் இமிடேட் செய்ய முயன்றேன் என்பது உண்மை. ஆனால் காலம் அவரது தலையிலும் கருத்திலும் வெள்ளையடித்த பிறகு நான் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டேன். அவரது நாசூக்கான காமெடியை விட வடிவேலு காமெடி என்னை சிறப்பாக மகிழ்விக்கிறது.


கமல் நடிகராக கதாபாத்திரத்தில் வந்தால் பரவாயில்லை. ஒருகட்டத்தில் அனைத்துமே நான்தான் என்று சொல்வது போல அனைத்து விஷயங்களையும் ஆக்கிரமிக்க தொடங்கினார். கதாபாத்திரமாக தெரியாமல் கமலாகவே திரையில் அவர் வந்தபோது என்னால் அவரை ரசிக்கமுடியவில்லை. தன் புத்திசாலித்தனத்தை அவர் நிரூபிக்க முயன்றாரே ஒழிய தான் சொல்லும் கருத்து அனைவருக்கும் சென்று சேர்ந்ததா என்று கவலையே படவில்லை.


முன்னாள் முதலமைச்சரின் இறப்பை வரலாற்றோடு தொடர்புபடுத்தியிருந்தீர்கள். அது உண்மையில் புதுமையான செய்திதான். தன் கட்சியிலுள்ள அடிமைகளை காரின் டயர்களை நக்கவைத்த பெருமை அம்மையாரையே சேரும். அவருக்கு ஆண்களை வெற்றிகொள்ளும் வெறி இறுதிவரை இருந்தது. மனிதர்களாக பிறந்தால் யாரையாவது நம்பித்தானே ஆகவேண்டும். நட்பு மீது கொண்ட நம்பிக்கையே அவர் வீழ காரணமாகிவிட்டது. வரலாற்றில் நயவஞ்சகம், சூழ்ச்சி, துரோகத்திற்கு குறைவா என்ன?


உங்களுக்குள் அன்பரசு தவிர இன்னொருவர் இருக்கிறாரா? ஒருவர் தீவிரமான நூல்களைப் படிக்கிறார். இன்னொருவர் சூரமொக்கைத் திரைப்படங்களைப் பார்த்து அதனை விமர்சிக்கிறார். வித்தியாசமான குணங்களின் சேர்க்கைதான் நீங்கள். நான் துறைசார்ந்த உயர்பதவிகளுக்கான தேர்வை எழுத நினைத்துள்ளேன். இவர்களாக நமக்கு பதவி உயர்வு கொடுப்பது சாத்தியமில்லை. எனவே நாமே முயன்று ஏதாவது செய்தால்தான் திருமணமாகி பிறக்கும் மகனுக்கு வழிகாட்டுவதற்கு கையில் சக்தி இருக்கும். எதையும் நிரந்தரமாக நினைத்துவிட முடியாது. எப்போதுவேண்டுமானாலும் நிலைமை மாறலாம்.


இங்கு அனைத்து இடங்களிலும் பாரபட்சம் உண்டு. வங்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? வங்கி கொள்கைப்படி முடிந்தளவு கடன்களை தொழில்துறைக்கு வழங்க அரசும் ரிசர்வ் வங்கியும் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் கடன்களை திரும்ப தொழில்நிறுவனங்கள் கட்டாதபோது, அவர்களிடம் கட்சிக்கு நன்கொடை வாங்கிக்கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிக்க வைக்கின்றனர். அப்புறம் எப்போதும் போல வேறுவழியில்லை என்று சொல்லி மக்களின் இருப்புத்தொகையை அலேக்காக வாரிச்சுருட்டுவது. இது காங்கிரஸ் ஆட்சியில் மெதுவாகவும் காவி ஆட்சியில் வேகமாகவும் நடைபெறுகிற.து. வெகுவிரைவில் பொதுத்துறை வங்கிகளை சிறப்பாக நிர்வாகம் செய்யமுடியவில்லை என்று அரசு சொல்லும். அதற்கு தீர்வாக தனியார் நிறுவனங்கள் பொதுவங்கிகளை ஏலத்தில் வாங்கி நடத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


இசைவிழா பற்றி எழுதியிருந்தீர்கள். அதை விவரித்த விதம் நன்றாக இருந்தது. சுமாராக நம்மூரில் நடக்கும் ஆர்க்கெஸ்ட்ரா போல இருந்திருக்கும் என ஊகிக்கிறேன். நல்ல ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள். ஆனால் பாடியவர்கள் சரியில்லை என்றால் ஸ்பீக்கர் என்ன செய்ய முடியும்? உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.


நன்றி


.ராமமூர்த்தி


22.11.2017


கருத்துகள்