கோவிட் -19 போன்ற பெருந்தொற்றுக்கு சுற்றுப்புற சூழலும் முக்கியக் காரணம் - டிரேசி கோல்ட்ஸ்டீன்
pixabay |
டிரேசி கோல்ட்ஸ்டீன், துணை
இயக்குநர் ஒன் ஹெல்த் இன்ஸ்டிடியூட்.
2009ஆம் ஆண்டு யுஎஸ்எய்ட்
பிரடிக்ட் என்ற திட்டத்தை தொடங்கியது. முப்பது நாடுகளில் ஆய்வு செய்து 900 வைரஸ் இனங்களைக்
கண்டுபிடிக்கும் திட்டம் இது. இதில்
1,45,000 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உங்களுடைய ஒன் ஹெல்த் அமைப்பை பற்றி விவரியுங்கள்.
எங்களுடைய அமைப்பு ஒருவருக்கு
பெருந்தொற்று காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அவரின் சூழல் பாதிப்பையும் கணக்கில்
கொள்கிறது. இப்போது எங்கள் அமைப்பில் நுண்ணுயிரியாளர்கள், சமூகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்,
பொருளாதார வல்லுநர்கள் இப்பிரச்னையை பல்வேறு கோணங்களில் பார்த்து அதனை தீர்க்க முயல்கின்றனர்.
ஆசியாவில் நீங்கள் கண்டறிந்தது என்ன?
மெர்ஸ் பரவியபோது அதன் பிறப்பிடம்
எதுவென்று ஆராய்ந்து வந்தோம். மத்திய கிழக்கு நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து
கிருமிகள் பரவியிருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் மாதிரிகளை சோதித்தபோது, அந்த நுண்ணுயிரிகள்
ஆசியாவில் உருவாகி பரவியிருக்கின்றன என்பதை அறிந்தோம். பிற கண்டங்களை விட ஆசியாவில்
வௌவால்களின் பிறப்பு சதவீதம் அதிகம். இதனால் நாங்கள் வைரஸ்களை பரந்த அளவில் பார்த்து
ஆராய்ச்சி செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளோம். இது தடுப்பூசிகளை மேம்படுத்துவதற்கு
உதவும். இந்தியாவில் இம்முறையில் நோய்வாய்ப்பட்ட சிலரை மட்டுமே சந்தித்துள்ளோம். இன்ஃப்ளூயன்சா
போன்ற பாதிப்புகளை இன்னும் நெருங்கி ஆராயவேண்டிய தேவை இருக்கிறது.
கோவிட் -19 சார்ந்த ஏதாவது
புதிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா?
நாங்கள் பல்வேறு நாடுகளில்
பெற்ற மாதிரிகள்படி கோவிட் -19 நோய்த்தொற்று 98 சதவீதம் வௌவால்கள் மூலம்தான் பரவுகிறது
என்பதை உறுதி செய்திருக்கிறோம். வௌவால்களில் உள்ள பல்வேறு வகை குடும்பங்களில் குறிப்பிட்ட
வைரஸ் வகைகள் பரவுவதை நாங்கள் கண்டறிந்தோம். உகாண்டா, ருவாண்டா ஆகிய நாடுகளில் மக்கள்
நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் நாங்கள் ஆராய்ச்சிகளை செய்துள்ளோம். வௌவால்களில்
உள்ள நுண்ணுயிரிகள் மனிதர்களின் உடல்களுக்கும் மாறும்போது தங்களின் தன்மையை மாற்றிக்கொண்டு
வருகின்றன.
பிரடிக்ட் திட்டம் எப்படி
தொடங்கியது?
2009ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா
வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது, வன விலங்குகளும் மனிதர்களுக்கும் உள்ள உறவு, அவர்கள் எந்த
இடத்தில் சந்திக்கும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது என்பதை அறிய நினைத்தோம். நகரமயமாக்கம்
ஆகியுள்ள கம்போடியா, காத்மாண்டு ஆகிய இடங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.
இந்த இடங்களுக்குச் சென்று எங்களது குழு ஆராய்ச்சி செய்தது. இறைச்சி சந்தை, குகை ஆகிய
இடங்களையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை. நோய்த்தொற்று ஏற்படுத்தும் விலங்குகளில் வௌவால்கள்
மற்றும் எலிகள் முன்னிலை வகித்தன. இவற்றின் உடல்கள் நுண்ணுயிரிகள் அதிகம் இருந்தன.
இதிலிருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் இருந்தது.
நோய்த்தொற்றை கண்டுபிடிப்பது
உங்கள் நோக்கமா?
உணவு மற்றும் விவசாயத்துறை சார்ந்து பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.
இப்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று சூழலுக்கும் தமக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை புரிந்துகொள்ள
உதவியிருக்கிறது. இதன் காரணமாக வீட்டு விலங்குகள், வன விலங்குகள் என எவற்றையும் நாம்
துச்சமாக நினைக்க கூடாது. சீனாவிலிருந்து சியாட்டிலுக்கு சில மணிநேரங்களில் நாம் சென்றுவிட
முடியும். இன்று அனைத்து நாடுகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று ஏற்படும்போது,
நமது நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இனிமேல் யாரும் கவலையின்றி இருந்துவிட
முடியாது. நோய்த்தொற்று பாதிப்பைத் தடுக்க உலக நாடுகள் நிதியை முதலீடு செய்யவேண்டும்.
அப்போதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றை தடுக்க முடியும்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
ஆங்கிலத்தில்: வைஷ்ணவி சந்திரசேகர்
கருத்துகள்
கருத்துரையிடுக