ராவணனை முழுமையாக வில்லனாக்கும் விஸ்வாமித்திரர்! - அமீஷின் ராவணன்





ராவணன் ஆர்யவர்த்தாவின் எதிரி - Raavanan ...
பனுவல்



அமீஷ் எழுதிய

ராவணன் - ஆர்யவர்த்தாவின் எதிரி

தமிழில்: மீரா ரவிஷங்கர்

அண்மையில் பல்வேறு இந்திய எழுத்தாளர்கள் இந்திய புராணங்களில் சற்று புனைவை திணித்து பல்வேறு கதாபாத்திரங்களை எடுத்து கதைகளை எழுதி வருகிறார்கள். ஆனந்த் நீலகண்டனின் அசுரன் அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்று. அமிஷ் எழுதிய இந்த கதையில் ராவணன், குரூரமான விஷயங்களை அதுபற்றிய எண்ணங்களே இல்லாமல் செய்யும் குணங்களைப் பெற்றுள்ளான். அவனை நல்வழிப்படுத்த வரும் கன்னியாகுமாரி இறந்துவிட, அவளின் பொறுப்பை அவனின் தம்பி கும்பகர்ணன் ஏற்கிறான்.

நாகா எனும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிறவிகளாக ராவணனும், கும்ப கர்ணனும் இருக்கிறார்கள். ஆனால் பிற மனிதர்களை விட ஏராளமான திறன்களைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த நாவலில் ராவணனின் இசை, ஓவியத்திறன் ஆகியவை நன்றாக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கதையைப் பார்த்துவிடுவோம். ரிஷி மூலம் பிறக்கும் ராவணன் நாகா என்பதால் இசை, ஓவியம், போர்க்கலை ஆகியவற்றில் திறமைசாலியாக விளங்கினாலும் புறக்கணிக்கப்படுகிறான். அவன் தம்பி கும்பகர்ணனும் தோள்பட்டையில் கைகளோடு நாகாவாக பிறப்பதால், சொந்த ஊரை விட்டு செல்ல வேண்டியதாகிவிடுகிறது. பிறக்கும் குழந்தை நாகா என்றால் உடனே கொன்றுவிடும்படி தன் ஆசிரமவாசிகளுக்கு உத்தரவிட்டு சென்றுவிடுகிறார் ரிஷி. இதனால் அவர்மீது தீவிர வன்மம் கொள்கிறான் ராவணன். நாவல் நெடுகிலும் தன் தந்தையைப் பற்றி நினைக்கும் போது தீவிரமான கோபம் கொள்கிறான். அவன் தன் தாய்மாமன் மாரீசனோடு சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு பயணித்து இலங்கை வந்து சேர்கிறான். அங்கு கள்ளத்தோணியில் சரக்குகளை விற்று தன்னை சிறந்த தலைவனாக, வணிகனாக நிரூபிக்கிறான். அப்போது அகம்பனா என்ற கப்பல்காரனுடன் ஏற்படும் நட்பு அவன் செல்வந்தனாக உதவுகிறது.  ஆனாலும் அவனுக்கு வாழ்வில் நிம்மதி இல்லை. காராணம், கன்னியாகுமரியா சிறுவயதில் சந்தித்த பெண்ணின் சொற்கள் அவனுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தப்பெண்ணை சந்திக்க முடிந்ததா, அவள் அவனது வாழ்க்கை பற்றி என்ன சொன்னாள் என்பதுதான் கதை.

இதில் ராவணனை மெல்ல எதிர் நாயகனாக உருவாக்குகிறார் விஸ்வாமித்திரர், அவரின் செயல்பாடுகளுக்கு அரிஷ்டநேமி என்ற பிராமண இளைஞன் உதவியாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து எப்படி ராமனுக்கு எதிராக வலுவான எதிரியாக ராவணனை உருவாக்குகிறார்கள் என்பதுதான் முக்கிய திருப்புமுனையான பகுதி.

ராவணனை பல்துறை விற்பன்னாக இதில் அமிஷ் சிறப்பாக சித்திரித்துள்ளார். இசைக் கலைஞன், மிகச்சிறந்த வாசிப்பாளன்,ராவணஹத இசைக்கருவியை உருவாக்கி வாசிப்பவன், தம்பி மீது பேரன்பு கொண்டவன் என பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி எழுதியிருக்கிறார். ராவணனின் வணிகத்திற்கும் அவனது செயல்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடு, நன்மை செய்ய வேதவதியின் வார்த்தைகளை நினைவுகொள்வது என வரும் காட்சிகள் சிறப்பான எழுதப்பட்டுளன. இதைவிட மிகச்சிறப்பாக செய்ய முடியும் என்ற அவளது வார்த்தைகளே ராவணனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. ஆனால் பொருள் மீதான மக்களின் பேராசை அவளது வாழ்க்கையைத் தகர்த்த ராவணன் அவர்களை மன்னித்து விட தயாராக இல்லை. அதுவே அவனது குணத்தை வேட்கை கொண்ட விலங்காக மாற்றுகிறது. முதிய சிங்கம், - தாய் மான்  கதை இதற்கான உருவகமாக ராவணன் - வேதவதி இருவரின் குணங்களைக் காட்டுகிறது.

520 பக்கங்களை கொண்ட இந்த நூல் இன்னும் முடியவில்லை. இதற்குப்பிறகும் இத்தொடர்வரிசை நீளும்.

ராவணனை 360 டிகிரியில் காட்ட முயன்றிருக்கிறார் ஆசிரியர் அமிஷ். ஆனந்த் நீலகண்டன் கேரளத்துக்காரர் என்பதாலோ என்னவோ ராவணனை திராவிட ஆளாக காட்டியிருப்பார். வேதவதி என்ற பெண்ணுடன் உடலுறவு கொண்டு பெற்றெடுத்த மகள்தான் சீதா. அவளுக்கு சரியான கணவன் ராமன் இல்லை என்று சொல்லி அவளை சிறைபிடித்து வைத்திருப்பான் ராவணன். அமீஷ் இதில் ராவணனை உடலில் குறைபாடு கொண்டவனாக தொப்புளில் சதை வளர்ந்து அந்த வலியோடே இருப்பவனாக உருவாக்கியிருக்கிறார். நாகா எனும் மனிதர்களிலிருந்து மாறுபட்டவனாக அவனை வார்த்தெடுத்திருக்கிறார். இந்த நூல் முழுக்க ராவணனுக்கானது என்பதால், ராமனுக்கு இடமே இல்லை.

ராவணனை எப்படி வில்லனாக அவனைச் சுற்றி உள்ளவர்கள் மாற்றுகிறார்கள் என்பதை அமீஷ் விவரித்திருக்கிறார்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்