மனிதர்கள் இருக்கும் இடத்தில் அரசியல் இல்லாமலா இருக்கும்? ஒ ரு துளி மணலில் ஓர் உலகு!




இனிய தோழர் ராமுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


கடிதம் எழுதுவதற்கு சற்று நிதானமான நேரம் கிடைக்கவில்லை. அதனால்தான் அடுத்தடுத்த கடிதங்களுக்கு இடையில் ஏகப்பட்ட நாட்கள் இடைவெளி. பொய் அல்ல உண்மை. நாங்கள் அடுத்து வரும் வாரம் வேறு அலுவலகத்திற்கு மாறுகிறோம். ராயப்பேட்டை அஜந்தாவில் இனி ஜாகை. இங்குள்ள வயதான ஆட்களுக்கு இசைந்து சொல்ல முடிவது கடினமாக உள்ளது. இங்குள்ள சீனியர்களுக்கு இடமாற்றல் முடிவு பிடிக்கவில்லை. அவர்களுடைய நெடுநாள் நண்பர்கள் பழைய அலுவலகத்தில் இருக்கிறார்கள். அங்கு போய் என்ன செய்வத? என விவாதித்து வருகிறார்கள். நிர்வாகம் எடுக்கும் முடிவு பத்திரிகையின் எதிர்காலத்திற்காகவே என்று நம்புகிறேன்.


எனக்கு வேலை சார்ந்துதான் அனைத்து உறவுகளுமே என்று நம்புகிறேன். அதைத்தாண்டிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள பெரியளவு முயற்சிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. அது அப்படியே இயல்பாக நடப்பதுதான். வலிந்து எதைச் செய்தாலும் எனக்கு ஒத்துவருவதில்லை. இந்த வார திரைப்படமாக நான் செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தைப் பார்த்தேன். எரோடிக் வகையைச் சேர்ந்த படம் இது.


அஜால் குஜலாக இருந்தாலும் மெசேஜ் முக்கியம் அல்லவா? அன்புக்கு அவசியத்தேவை உடலா? மனமா? என படத்தில் முடிவு சொல்கிறார்கள். கணவன், மனைவி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. கணவருக்கு செக்ஸ் உறவில் ஒன், டூ, த்ரீ சொல்லிமுடிப்பதற்குள் விந்து முந்திவிடுகிறது. இதனால் அவரது மனைவி கடுமையாக அதிருப்தி உணர்வை காட்டுகிறாள். இதனால் கணவர் அறுவை சிகிச்சை செய்து படா சைஸ் உறுப்புடன் ஊருக்குள் வந்து பெண்களை விரட்டு விரட்டென விரட்டுகிறார். பெண்களை தேடிப்பிடித்து சுகிக்கிறார்.


சுகிப்பதில் வல்லவரான டானுக்கு டாட்டா சொல்லி அனுப்புகிறார். அதேசமயம் காமத்தில் உருகிய நாயகனின் மனைவி, செக்ஸ் தேவைக்கான ஆட்களை கண்டுபிடித்து சுகிக்கிறாள். இவர்கள் இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து ஒன்றாக சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. கதையைப் பற்றி இந்த படத்தில் யாராவது கவலைப்படுவார்களா? சந்தோஷமாக படத்தைப் பார்த்தால் மஜாவாக இருக்கும். படத்தை அப்படித்தான் இயக்குநர் எடுத்திருக்கிறார். பௌத்த மத துறவியின் தூய்மையை விலைமாது கெடுத்து அவர் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி படத்தில் நெருடலாக அமைந்துவிட்டது.


எங்கள் பத்திரிகையில் உள்ள உதவி ஆசிரியர்களிடம் மேட்டர்களை வாங்கி பத்திரிகையை பிரிண்டுக்கு அனுப்புவதற்குள் மண்டை காய்கிறது. அவ்வளவு அழகாக தினப்படி வேலையை அன்றுதான் செய்கிறார்கள் அதனை சரிபார்ப்பதற்குள் பிரிண்டாகி ஏ 4 வந்துவிடுகிறது. அப்புறம் அதில் தவறுகள் ஏற்படாமலா இருக்கும்? எப்போதும் போல கிடைக்கும் நேரத்தில் சில விஷயங்களை எழுதி வைத்துக்கொண்டிருந்தேன்.


எப்படியிருந்தாலும் நமக்கு கிடைத்திருக்கும் எழுத்து திறமை மட்டுமே நம்மைக் காப்பாற்றும். உதவி ஆசிரியர்களின் கட்டுரைகளை திருத்தி கொடுப்பேன் என்று சொன்னால் நமக்கு அதில் எந்த பிரயோஜனமும் கிடைக்கப் போவதில்லை. ஜீ 5 ஆப்பில் வெளியான பி.டெக் என்ற வெப் தொடரைப் பார்த்தேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள்.


நடித்த நடிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள். மூன்று கதைகள் ஒருவர் குறும்பட இயக்குநர், அவர் திரைத்துறையில் நுழைய முயல அதற்குள் சந்திக்கும் சவால்கள். இரண்டு, பொம்மைக் கடையில் கல்வி சார்ந்த பொம்மைகளை விற்றுவருபவர். மூன்று பைக் ரேசர் ஒருவரின் கனவு. இந்த மூன்றும் தனித்தனியாக பயணித்து இறுதியில் எந்த புள்ளியில் ஒன்று சேருகிறது என்பதுதான் இறுதிக்காட்சி. பொம்மைகள் விற்கும் விற்பனை பிரதிநிதி மெல்ல தொழிலதிபர் ஆவது, பைக் ரேசர் தனது நண்பனின் கனவுக்காக உழைப்பது ஆகிய இருகதைகளும் நன்றாக இருந்தன. வாய்ப்பிருந்தால் இத்தொடரை அவசியம் பாருங்கள்.


நன்றி!


சந்திப்போம்.


.அன்பரசு


23.2.2019

*********************************************

அன்புள்ள நண்பர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா?


நாடு முழுக்க திமுகவின் திருமங்கலாம் ஃபார்முலா பரவிவிட்டது போல. தேர்தல் காலம்தோறும் மக்கள் டோக்கன்களை வைத்தபடி இரண்டாயிரம் ரூபாய்க்காக அலைந்து வருவது பார்க்கவே சங்கடமாக உள்ளது. உரிமைகளை பெற கையேந்த வைத்துவிட்டு, சாத்தியம் இல்லாதது சாத்தியன் என மோடி கைகட்டி சிரிக்கிறார். நீங்கள் குளோபல் ஆக்டரை அப்படியே பின்பற்றி நிற்பீர்கள் அல்லவா? எனக்கு இந்த நேரத்தில் அந்தக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.


முதன்மை செய்தித்தாளில் தேர்தல் களம் சார்ந்த பணிகள் தொடங்கியிருக்கின்றன. எங்களுக்கு மே 31 வரை வேலை இருக்கும் என்று நினைக்கிறேன். அறிவியல் நூல்கள் சிலவற்றை வாங்கவேண்டியதிருக்கிறது. பார்ப்போம்.. தேவையான நூல்களை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் அதனை வாங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.


கிராக் பார்ட்டி -2018 படம் பார்த்தேன். தெலுங்கில் நிகில் சித்தார்த் நன்றாக நடித்திருந்தார். கன்னடத்தில் வந்த படத்தை ரீமேக்கியிருக்கிறார்கள். அனைவரையும் நன்றாக நடிக்க வைத்திருக்கிறார்கள். இறுதிவரை வரும் காமெடிக் காட்சிகளை படத்தை மறுபடியும் கூட பார்க்கவைக்கலாம். யூடியூபில் படம் உள்ளது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.


மாயா ஏஞ்சலோ எழுதிய கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்ற நூலைப் படித்தேன். கறுப்பர் இன பெண்ணின் சுயசரிதை. இந்தியர்களுக்கு மாயாவின் பளீரென்ற வாழ்க்கை நிச்சயமாக மனதைச் சுடும்.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


7.3.2019


*********************************

அன்புள்ள அன்பரசுக்கு, வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா?


உங்கள் அலுவலகம் பற்றி எழுதியிருந்தீர்கள். நிறைய மனிதர்கள் இருந்தால் நிறைய பிரச்னைகள் கூடவே இருப்பது சகஜம்தான். வயதான மனிதர்கள் மட்டுமல்ல நமக்கும் வயதாகும் போது குறிப்பிட்ட காலகட்டத்தில் சிக்கிக்கொள்வோம். அதைத்தாண்டி வெளியே வர புதிய விஷயங்களைக் கற்கவேண்டும். குறைந்தபட்சம் மாதம் ஒரு புதிய நூலையாவது படிக்கவேண்டும். எத்தனை பேருக்கு இது சாத்தியம் சொல்லுங்கள். அலுவலக நடவடிக்கையில் உங்கள் செயல்பாட்டைப் பார்த்தால் ஆசிரியரின் பக்கம் நிற்பது போல படுகிறது. கவனமாக இருங்கள். செல்வாக்கு பெற்றவர்களோடு கோபம் கொள்ளாதீர்கள். அது, செய்யும் வேலையை தலைவலியில் கொண்டு வந்து முடிக்கும்.


எதுவும் நிரந்தர வேலை என்று சொல்லமுடியாது. பத்திரிகை வேலையானலும் சரி, நான் செய்யும் வேலையானாலும் சரி. என்ன வேலை போனால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இன்னொரு நிறுவனத்தில் சிபாரிசு பிடித்து சேர்ந்துவிடுவீர்கள். காட்சி ஊடகம் சார்ந்து ஏதேனும் வேலையைத் தேடவும் வாய்ப்புள்ளது. பெரிய வாய்ப்புகள் நமக்கு முன் இல்லை. நீங்கள் தலைநகரத்தில் இருப்பது நல்ல விஷயம். நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை உடனே அறிய முடியும் என்பது சாதகம். ஊருக்கு கிளம்பி வருவது என்பதை நீங்கள் திட்டமிட்டால்தான் சாத்தியம். டக்கென பஸ்ஸை பிடித்து வருவது என்பது அரசியல், பொருளாதாரங்களின் மைய நகரமாக இருக்கும் சென்னையில் சாத்தியம் இல்லை. முக்கியமாக எதையும் திட்டமிடலாம். அதன்படியே நடக்கும் என்று சொல்லமுடியாது.


எழுத்து சார்ந்த திறமையை நீங்கள் எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதால் அதனை வளர்த்துக்கொள்ள முடியும். ஆங்கில நூல்களை வாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆங்கில தினசரிகளைப் படித்தால் உங்களால் எளிமையாக நூல்களை வாசிக்க முடியும் என நினைக்கிறேன். ஏறத்தாழ இதில் உங்களுக்கு நான் சொல்லுவதற்கு ஏதும் இல்லை. நீங்களே நிறைய நூல்களை வாசித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். அனைத்து கட்சிகளுமே தேர்தல் சார்ந்த சீரழிவில் சிக்கிவருகின்றன. திமுக போன்ற கட்சி தேர்தலுக்காக பணம் கொடுப்பதும். அதனை பகிரங்கப்படுத்துவதம் தேர்தலையும் மக்களின் வாக்குரிமையையும் கொச்சைப்படுத்துகிறது.


திமுக சாதிக்கட்சிகளை வளர்த்துவிடுகிறது என காங்கிரஸ்காரர்கள் சொல்லுவார்கள் நீங்களும் அந்தப்பக்கத்தில் நின்று பேசுகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. தன்னை சீர்படுத்திக்கொண்டு திமுக மீண்டும் தமிழகத்தில் வெல்லும் என நம்புகிறேன். பார்ப்போம்.


10.3.2019














கருத்துகள்

பிரபலமான இடுகைகள்