வங்கதேசத்தில் சிறுவனைக் காப்பாற்றச் சென்று சிக்கிக்கொள்ளும் முன்னாள் ராணுவ வீரனின் போராட்டம்! - எக்ஸ்ட்ராக்சன்



Netflix's Extraction Trailer With Chris Hemsworth, Pankaj Tripathi ...
மாஷபில் இந்தியா



எக்ஸ்ட்ராக்ஷன் (2020) ஆங்கிலம்

இயக்கம்  சாம் ஹர்கிரேவ்

ஒளிப்பதிவு தாமஸ் நியூட்டன் சீஜல்

இசை ஹென்றி ஜாக்மன், அலெக்ஸ் பிளெட்சர்



இந்தியாவில் உள்ள மகாஜன் என்ற போதை மாஃபியா தலைவனின் மகன் ஓவியை வங்கதேசத்தைச் சேர்ந்த ஆசிஃப் என்பவன் கடத்திச்செல்கிறான். தன் மகனை மீட்க முடியாமல் மகாஜன் சிறையில் இருக்கிறான். இந்நிலையில் தன் மகனை பாதுகாக்க சொன்ன சாஜூ என்ற முன்னாள் இந்திய ராணுவ வீரனை, கடுமையாக திட்டுகிறான் மகாஜன். தன் மகனை மீட்டு கொண்டுவரவில்லையெனில் உன்னுடைய மகனை கொன்றுவிடுவேன் என்கிறான். இதற்காக இவர்கள் ஒரு தந்திரம் ஒன்றைச் செய்கிறார்கள். ஓவியை மீட்டுக்கொடுக்க தனியார் அமைப்பு ஒன்றைத் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் ஓவியை  ஆசிஃபிடமிருந்து மீட்டதும் அவர்களைக் கொன்றுவிட்டு சாஜூ ஓவியை கூட்டிவந்து மகாஜனிடம் ஒப்படைப்பது திட்டம்.

இது பற்றி தனியார் அமைப்பின் நிக் கான், டைலர் ரேக் ஆகியோருக்கு தெரியாது. கிளம்பும்போதே அவர்களுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றுகிறது. ஆனால் டைலர் ரேக்குக்கு தன் மகன் இறந்துபோனதிலிருந்தே வாழ்க்கை விரக்தியாகவே இருக்கிறது. இதனால் அவன் முடிந்தளவு ஆபத்தான திட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறான். தன் மகனைக் காப்பாற்ற முடியாததால் இதுபோன்ற திட்டங்களில் இறந்துபோகவேண்டும் என நினைத்து பல்வேறு மிஷ்ன்களை செய்துவருகிறான். வங்கதேசத்திற்குள் வந்து ஓவியை வெற்றிகரமாக சரவெடி போல துப்பாக்கியை வெடித்து பல டஜன் பேரைக் கொன்று காப்பாற்றுகிறான். ஆனால் அதற்குப்பிறகுதான் நிலைமை மோசமாகிறது. அங்கு பெரிய மாஃபியா தலைவான ஆசிஃப்  அந்த நாட்டிலேயே சிறுவர்களை பணிக்கமர்த்தி தனி ராணுவம் நடத்தி வருகிறான். நாட்டிலுள்ள சாலைகளை முழுக்க போலீஸ் கொண்டு கட்டுப்படுத்துகிறான்.. டெய்லர் ஓவியை காப்பாற்றினானா, சாஜூவின் சூழ்ச்சி வென்றதா? ஆசிஃபின் திட்டம் என்ன என்பதை நீங்கள் அறிவதுதான் இறுதிக்காட்சி.

படம் முழுக்க புழுதி பறக்கும் பிரதேசம் வருகிறது. அதுதான் வங்கதேசம். நாடு முழுக்கவே பாலைவனத்தை சீர்செய்து வீடுகளை கட்டியுள்ளார்களோ என்று எண்ணும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அந்தளவு அழுக்கு, புழுதி. மிதமிஞ்சி வன்முறையும், அங்குள்ள நிலப்பரப்பும் எந்த வித நியாயங்களுக்கும் உட்பட்டதில்லை என்று தெரிவித்துவிடுவதால் உங்களுக்கு ஐயையோ என்று எந்த இடத்திலும் பதறாது. ஆனால் சிறுவர்களை ராணுவம் போல பழக்கி வைத்திருக்கும் காட்சியும். தவறுக்கு இடது கை விரல்களை பரிசாக கேட்பது குரூரம். இறுதியில் விரலை வெட்டி வைத்து விட்டு பர்ஹாத் டைலரை வேட்டையாட வரும் காட்சி மனதை நெருடுகிறது.

டைலரின் சலனம் அவனது மகன் என்று அடிக்கடி காட்டுவது நிறைய இடங்களில் ஒட்டவில்லை. இறுதிக்காட்சியிலும் டைலர் கழுத்தில் சுடப்பட்டு கீழே விழுந்துவிடுகிறான். ஆனால் இறக்கவில்லை என்று கடைசியாக காட்டி விடுகிறார்கள். அடுத்த பாகத்திற்கு பார்வையாளர்களை தயார் செய்கிறார்கள்.

இந்தியாவில் எடுத்த பரபரப்பான திரில்லர் என்பதற்காக பார்க்கலாம். இளகிய மனம் கொண்டவர்கள் படத்தைத் தவிர்ப்பதே நல்லது.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்