வாழ்க்கையை நடத்திச்செல்வதற்கான கல்வி நமக்கு கிடைப்பதில்லை! ஒரு துளி மணலில் ஓர் உலகு!
அன்புள்ள நண்பர் ராமுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இரண்டே நாட்களில் பொங்கல். டிக்கெட், புக்கிங் என எங்கள் இதழுக்கான ஆசிரியர் குழு முழுவதும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது.
நீங்கள் பெரும் பணத்தை பங்குச்சந்தையில் விட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி. உங்களது புதிய முயற்சி, பரிசோதனைகளை நான் எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறேன். நீங்கள் இதுபற்றி என்னிடம் ஆலோசனையாவது கேட்டிருக்கலாம். சரி எதுவாக இருந்தாலும் உங்கள் அம்மாவிடம் இதுபற்றி விளக்கினீர்களா? துறைசார்ந்தவர்களிடம் இதுபற்றி இன்னும் தீர விசாரித்திருக்கலாம். இனி நான் என்ன சொன்னாலும பிரயோஜனமில்லை. காலம் கைமீறிவிட்டது. பணத்தை திரும்ப பெறுவது உங்களது சாமர்த்தியத்தில்தான் உள்ளது.
நண்பர் கார்ட்டூன் கதிரின் வீட்டுக்கு இன்று சென்றேன். தி இந்து தமிழில் வேலை கிடைத்திருக்கிறது. எனவே ஒண்டு குடித்தனவீடு, பொது கழிப்பறை அவதியிலிருந்து விடுதலையாகி இருக்கிறார். புதிய வீடு கிடைத்த கையோடு அவருக்கு பெண் பார்த்திருக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். அவருக்கு கல்யாணம் செய்த கையோடு அவரது பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கே செல்லவிருக்கிறார்கள். இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு சொந்த ஊரில் வாழும் ஆசை மனதில் இருக்கிறது. அவரது அம்மா மிகவும் பிரியமாக பேசுவார். இறையருள் காக்கட்டும்.
தி இந்து பொங்கல் மலர் படித்து வருகிறேன். மூனாம்பள்ளி சாவக்கட்டு பற்றிய தகவல்களை கட்டுரையாக்கி இருக்கிறார்கள். நல்ல கட்டுரை. தினகரன் பொங்கல்மலரோடு பருப்பு பொடி இலவசமாக தருகிறார்கள். பருப்பு பொடி வேண்டும் என்றால் புத்தகம் வாங்குங்கள். பணத்தேவையைத் தாண்டி நம்மை நெகிழ்வாக வைப்பவை இலக்கியம்தான். சூழல்கள் நெருக்கினாலும் வாசிப்பை கைவிடாதீர்கள். 2019 புதிய அனுபவங்களைத் தந்து பக்குவம் பெற வாழ்த்துகிறேன்.
நன்றி
சந்திப்போம்
ச.அன்பரசு
13.1.2019
அன்புள்ள ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
களப்பபணியை கச்சிதமாக செய்து வருகிறீர்கள் போல. அதிகம் உங்கள் பேச்சைக்கூட விடுமுறை தினத்திலும் கேட்கமுடிவதில்லை. இந்த வாரம் கவுண்டமணி சொல்வது போல நான் ரொம்ப பிஸி என்று சொல்லும்படி ஆகிவிட்டது. பொறுப்பாசிரியரின் மாமியார் ஆபத்தான உடல்நிலையில் இருக்கிறார் என்று அவர் பார்த்துக்கோ என்றுசொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அத்தனை ஆட்களும் யூடர்ன் போட்டு என்னைத் துரத்துவார்களே என்றுதான் பயம்.
25.1.19 இதழுக்கான அட்டைத்தேர்வு நான்தான். என்னைப் பொறுத்தவரை எளிமையாக இருக்கவேண்டும். படு அலங்காரமான வார்த்தைகளை நான் நம்புவதில்லை. உள்ளே இருக்கும் விஷயங்களை அவர்கள் படிக்க ஊக்கப்படுத்தவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். எதையாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நினைப்பவன் கதவைப் பார்த்துக்கொண்டே நிற்கமாட்டான். வீட்டுக்குள் என்ன என்று பார்க்க அவனே நுழைவான். அந்த ஆர்வம் இல்லாதவர்கள் எங்கள் இதழை வாங்கினாலும் ஒன்றுதான். வாங்காவிட்டாலும் ஒன்றுதான்.
பொறுப்பு சிலரைத் தேடிவரும். சிலர் தன் திறமையால் தன் பணிகளைப் பெறுவார்கள். எனக்கு கொடுக்கப்படும் பணிகள், வேறுவழியின்றி எனக்கு கொடுக்கப்படுகிறது. பல நேரங்களில் யாரும் சில பணிகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவை தானாக என்னுடைய இருக்கைக்கு வந்துவிடுகின்றன. இதற்கு இன்னொரு பெயர் இளிச்சாவாய்த்தனம் என நெல்லை கதிரவனும் அவரது மாத இதழ் எடிட்டர் ஞானதேசிகனும் கூறினார்கள். ஒருவகையில் அதுவும் சரிதான். இந்து பொங்கல் மலர் வாசிப்பு பற்றி சொல்லியிருந்தேன்.
பல எழுத்தாளர்கள் 1953இல் பிறந்த என் அப்பா கால எழுத்தாளர்கள். சால கஷ்டம். கதைகள் பரவாயில்லை. பட்டம்மாள் நூறு, பாலசரஸ்வதி நூறு என பத்து கட்டுரைகள் எழுதிவிட்டனர் பக்கத்தொல்லை ஒழிந்துவிட்டது அல்லவா? புத்தகம் இப்படித்தான் ரெடியாகியிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய புத்தகம் ஒன்று வாங்கினேன். படிக்க அறைக்குச் சென்றபோது மின்சாரம் இல்லை. மொட்டைப்பனங்காடு கருப்பணசாமியை வேண்டிக்கொண்டேன். அதனாலோ என்னவோ தெரியவில்லை. மின்சாரம் வந்துவிட்டது.
நன்றி! ச
சந்திப்போம்
ச.அன்பரசு
23.1.2019
அன்புள்ள அன்பரசுக்கு, வணக்கம்.
நீங்கள் என்னை சாதி சார்ந்து கூப்பிடும் சொல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாங்க போங்க என்று அழைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நமது ஊரில் பொதுவாக இப்படி பேசிக்கொள்வதே மரியாதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். நமது ஊரில் ஏகப்பட்ட சாதி சார்ந்த மோதல்கள் இருக்கின்றன. கவுண்டர் வீட்டு சிறுவர்களைக் கூட வாங்க போங்க என்று அழைக்க சொல்வதாக ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவில்லாமல் இருக்காது. பெரும்பாலும் அதுபோன்ற சூழ்நிலையில் உங்கள் முகம் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் உறைந்துவிடுவது எனக்கு சங்கடத்தைத் தருகிறது.
நிறைய நேரம் நான் அத்தகையை விஷயங்களைப் பேச வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மை சமூகம் விடுவதாக இல்லை. ஒருவனுக்கு திறமை இருந்தால் கூட குறிப்பிட்ட சாதியிலிருந்து வேர்பிடித்து வரவேண்டும் என்றுதான் சொல்லுகிறார்கள். அனைவரும் பொங்கலுக்கு கிளம்புகிறார்கள் என்கிறபோது நீங்கள் எப்படி அலட்டிக்காமல் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. வினோதமான ஆள்தான் நீங்கள்.
பங்குச்சந்தை பற்றி அறிவை நான் பொருளாதாரப் பாடம் படித்துக்கூட அடையவில்லை என்பது எனக்கு வெட்கத்தை தருகிறது. நடைமுறையில் கற்றுக்கொள்ளக்கூடிய எந்த விஷயங்களும் அப்டேட்களும் இல்லாமல் படிப்பை முடித்து பட்டம் வேறு பெற்றிருக்கிறேன். ஆனால் பங்குச்சந்தை பற்றிய விஷயங்கள் தெரியாமல் அநியாயத்திற்கு ஒரு லட்சத்தை கோட்டை விட்டுவிட்டேன். எந்த கம்பெனியின் பங்கும் பூஜ்ஜியத்திற்கு வரும் என்று நம்பமுடியவில்லை. கூடும், குறையும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் பணம் கொடுத்த ஏஜெண்ட் எளிமையாக பங்கு பூஜ்ஜியத்தை தொட்டுவிட்டது என்று சொல்லி பணத்தை திருடிவிட்டான்.
நான் இதற்கு யாரையும் குறைசொல்லவிரும்பவில்லை. நான்தான் இதற்கு முழுமுதற்காரணம். தலைகனமாக அனைத்தும் ஏஜெண்ட் பார்த்துக்கொள்வார் என்று இருந்துவிட்டேன். கடினமான பாடத்தை பெரும்பணத்தை இழந்து கற்றுக்கொண்டுவிட்டேன்.
உண்மையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று உங்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறேன். கருத்திபாளையத்தில் காசு இல்லாத நிலையிலும் நான் புத்தகங்களை முடிந்தளவு வாங்கி படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. படிப்பதை கைவிட்டுவிட்டேன். அதனால்தான் இந்த சறுக்கல். படிப்பது, படித்ததில் எனக்கு உதவும் விஷயங்களை பகிர்வது என நீங்கள் எப்போது பேசினாலும் புதிய விஷயங்களைச் சொல்லுகிறீர்கள். உற்சாகமூட்டுகிறீர்கள். உங்கள் முன்னாள் பத்திரிக்கையை இப்படி கிண்டல் செய்யமுடியுமா என்று தெரியவில்லை. பருப்பு பொடியை நான் தனியாகவே வாங்கிக்கொள்கிறேன். உருப்படியாக மேட்டர் ஏதாவது தேறினால் சொல்லுங்கள் வாங்கலாம்.
பத்திரிக்கையாளராக ஏற்கெனவே நீங்கள் சாதித்துவிட்டீர்கள். கிராமத்திலிருந்து வந்து பத்திரிகையில் ஒருவர் வேலை பார்ப்பார் என்று யாராவது நினைத்துப் பார்ப்பார்களா? நீங்கள் என்னையும் இந்த துறைக்கு அழைத்துவரப் பார்த்தீர்கள். நான் வேறு லைனுக்குப் போய்விட்டேன். ஆனால் என்ன? நீங்கள் ஊடகத்துறையில் இருக்கிறீர்கள். நீங்கள் முத்தாரம் இதழ் முழுமையும் செய்தீர்கள். இதில் புதிய பத்திரிகையில் அட்டை தேர்வு செய்வது பிரம்ம பிரயத்தனமாகவாக இருக்கப்போகிறது? இந்த வேலைகளை நீங்கள் இடது கையாலே செய்துவிட முடியும்.
அனைத்து இடங்களிலுமே மேல், கீழ் சீனியர், ஜூனியர் என்ற விஷயங்கள் இருக்கும். அதிலும் சில நிறுவனங்களில் வேலைகள் புரோடோகால்படி செய்யவேண்டும் என்பார்கள். பார்ப்பனர்கள் உயரங்களில் இருக்கும் ஊடகங்களில் இந்த படிநிலைகள் தீவிரமாக இருக்கும். கவனமாக வேலையை மட்டும் பாருங்கள். இல்லையெனில் தேவையில்லாமல் மன உளைச்சல் ஏற்படுத்துவார்கள். உங்களுக்கு வரும் முன்கோபத்திற்கு நீங்கள் எப்படி இத்தனை நாட்கள் பணிபுரிகிறீர்கள் என்றே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பேசும்போது டக்கென உங்களை நீங்களே கோமாளியாக்கிக்கொண்டு பேசுவதற்கு மின்சார சம்பவம்தான் உதாரணம். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். படிப்புக்கான விஷயங்களை நிஜமாக்க உடம்பு முக்கியம்.
நன்றி!
அ.ராமமூர்த்தி
28.1.2019
கருத்துகள்
கருத்துரையிடுக