நிலத்தைக் காப்பாற்ற நடக்கும் கொலையும், தலைமறைவு வாழ்க்கையும் - வெக்கை



GIRAMATHAN: வெக்கை - நாவல்

வெக்கை - பூமணி



சிதம்பரத்தின் அய்யாவுக்கு சொந்தமாக நிலத்தை வடக்கூரான் ஆக்கிரமிக்க நினைக்கிறார். இதற்காக பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அய்யாவும், அவரது மச்சினனும் ஒத்துவருவதில்லை. இதனால் தந்திரமாக வடக்கூரான் அய்யாவின் மூத்தமகன் ஆடு மேய்க்கும்போது திட்டமிட்டு கொன்றுவிடுகிறார்கள். இதனால் கோபத்திற்குள்ளாகும் அய்யாவின் மனைவி, உறுதியாக வடக்கூரானை பழிவாங்கவேண்டும் என துடிக்கிறாள். ஆனால் இதேபோன்ற விவகாரத்தில் தங்களது பூர்வீக நிலத்தை விட்டுவிட்டு வந்தது அய்யாவுக்கு நினைவுக்கு வருகிறது. எனவே கொலையைப் பார்த்த சாட்சியை விசாரித்தாலும் கூட வடக்கூரானை பழிவாங்குவதில் நிதானம் காட்டுகிறார். ஆனால் தன் அண்ணன் அநியாயமாக கொல்லப்பட்டு அனாதைப் பிணம் போல புதரில் கிடந்ததை அவன் தம்பி சிதம்பரம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே, அவனே அரிவாளை தயார் செய்துகொண்டு நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கிறான்.

எப்போது கொல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு சரியாக வடக்கூரானை வெட்டிச்சாய்க்கிறான். சரியான அந்த நேரத்தில் மின்விளக்குகள் அணைக்கப்பட வேகமாக சிதம்பரம் தப்பிக்கிறான். இருவர் அவனை பிடிக்க துரத்தி வர நாட்டு வெடிகுண்டை எரிந்துவிட்டு ஓடிவிடுகிறான். இந்த கொலை செய்யும் காட்சிதான் நாவலில் முதலில் வருகிறது. அதன்பிறகு நடக்கும் உரையாடல்கள், காட்சிகள் அனைத்தும் காட்டுக்குள்தான் நடைபெறுகிறது.  சிதம்பரத்தைக் காப்பாற்ற அவனது குடும்பம், தாய்மாமன் குடும்பம், சித்தி குடும்பம் என அனைவருமே போராடுகின்றனர். இறுதியில் போலீசில் சிதம்பரம் சரணடைந்தானா? அவன் குடும்பம் என்ன ஆனது? என்பதுதான் இறுதிப்பகுதி.

நூல் முழுக்க நிலம் சார்ந்த வேட்கை இரு சாராரிடமும் இருக்கிறது. சாதியை சொல்லவில்லை என்றாலும் வடக்கூரான் என்பது மேல்சாதி ஆட்கள் என்பது போகப்போக புரிந்துவிடுகிறது. அவர்களின் நிலத்தை பிடுங்கி அவர்களை கூலி ஆட்களாக்க முயலும் முனைப்பும். அதற்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டமும்தான் கதை. நாவலின் சிறப்பு என்பது காடு சார்ந்து ஒளிந்து வாழும்போது, அதற்கேற்ப அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி சமாளித்து வாழ்கிறார்கள் என்பதை காட்டியதுதான் என நினைக்கிறேன். பழங்களைப் பறித்து சாப்பிடுவது, மருந்துக்கு பயன்படுத்திய பானையை வைத்து சமைப்பது, முயல்கறி செய்து தின்பது என வனவாசம் போன்ற வாழ்க்கையிலும் அதை இயல்பாக கதை மாந்தர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். முக்கியமான விஷயம், நடந்த கொலையை குற்றமாக நெருங்கிய உறவுகள் யாருமே கூறுவதில்லை.  சிதம்பரத்தின் அப்பாவான அய்யாவும் நான் செய்யவில்லை நீ செஞ்சுட்டே என பாராட்டுகிறார். முதலில் நிலத்தை இழந்து வேறு இடத்திற்கு பிழைக்க வந்தாலும் மறுபடியும் சிக்கலுக்குள்ளாகி வாழ்க்கை நிலைகுலைவதுதான் இறுதிப்பகுதி. அய்யா முதல் சிதம்பரம் வரை அப்படியே இந்த விஷயங்கள் தொடர்வது கடைசிக்கட்டத்தில் மனத்தை திடுக்குறச் செய்கிறது.  இதில் வெக்கை என்பது பழிவாங்கும் உணர்வு, கோபம்  என பொருள் கொள்ளலாம். நாவல் முழுக்க வெயிலில் காய்வது சிதம்பரமும் அய்யாவும் மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையை சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும்  வாசகர்களாகிய நாமும்தான்.

அன்பரசு சண்முகம்







கருத்துகள்