அரசு பணி என்பது சமூக பாகுபாடுகளை போக்கும் செயல்பாடு! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!
பிக்ஸாபே |
அன்புள்ள இனமானத் தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.
எழுபதாவது சுதந்திர தின கொண்டாட்டத்தை இந்தியா கொண்டாடி வருகிறது. நமக்கு திரைப்படம்தானே விடுமுறையின் அடையாளம். இப்போது போகன் படம் வந்திருக்கிறது. மோடியின் உரை படிக்க நன்றாக இருக்கிறது. நல்ல எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஆனால் நடைமுறையில் பல விஷயங்கள் சாத்தியமில்லாதது போல படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சுதந்திர தின சிறப்பிதழ் அழகாக நிறைய தகவல்களோடு வந்துள்ளது.
முல்லை பெரியாறு - ஊரோடி செல்வக்குமார் எழுதிய நூலை படித்து வருகிறேன். பென்னிகுக் அணை கட்ட பட்ட கஷ்டங்கள், ஜனவரி 15 இல் அவருக்கு பொங்கல் வைப்பது, பென்னிகுக் என பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவது என புகழ்மாலை விஷயங்களை வெட்டி வீசிவிட்டு நடந்த விஷயங்களைப் பற்றி நேர்த்தியாக பதிவு செய்கிற நூல் இது. பாதி படித்துவிட்டேன்.
நான் சிலமுறை உங்களைத் தொடர்பு கொள்ள நினைக்கும்போது நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகிறீர்கள். விடுமுறை தினங்களில் காதலுக்கு ஓவர்டைம் வேலை செய்கிறீர்களா? ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தகம் ஏதாவது வாங்கினீர்களா? நான் வேலை பளுவினால் இந்த ஆண்டு வரமுடியவில்லை.
நன்றி!
சந்திப்போம்
ச. அன்பரசு
14.7.2017
*********************************************************************
அன்புள்ள தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.
உங்கள் சம்பளத்தை ஜிஎஸ்டி இவரி நீங்கலாக முழுமையாகப் பெறும் போராட்டத்தில் இருப்பீர்கள். உலகமே வேறுமாதிரி வருகிறது. முதலாளித்துவம் சார்ந்த வேகம் அதிகரித்து வருகிறது. தன் தேவைக்கு மீறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ?
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ஏற்றிய பின்னரே, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. எனவே உங்களுக்கு வரி பற்றி பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன். மூத்த குடிமக்களின் வைப்புநிதி வட்டி குறைக்கப்பட்டுள்ளது. 71 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வரி சீர்த்திருத்தம் என்கிறார்கள். காங்கிரஸ் இதற்கான கோட்பாடு வேலைகளை செய்திருக்கும் என நினைக்கிறேன்.
சற்று வேகமாக அவர்களே அமல் செய்திருக்கலாம். காவிக்கட்சியில் இருப்பவர்களுக்கு மூளை என்ற ஒன்று இருக்கிறதா, வேலை செய்கிறதா என்பதே அதிசயம். அவர்கள் இதனை அமல்படுத்தினார்கள் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்? ஜிஎஸ்டி வரியால் சினிமா, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சிரமப்பட போகின்றன என்கிறார்கள். ஆடிட்டர் என்பவர் இருக்கும்வரை அந்த பிரச்னை வராது. அவர்களே மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தானே வரி ஆலோசனை சொல்கிறார்கள்.
எங்கள் ஆசிரியர் கே.என். சிவராமன் எனக்கு புத்தகம் ஒன்றைப் படிக்க கொடுத்தார். பயணசரித்திரம் - முகில் எழுதிய நூல். உலகைச் சுற்றி வந்த ஆதி முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலான யாத்ரீகர்களைப் பற்றிய பதிவுகளே நூல். சுவாரசிய நடையில் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல் இது. விலை 333. நான் படித்துவிட்டு ஆசிரியரிடமே கொடுத்துவிட நினைக்கிறேன். அவர் பெரும்பாலான நூல்களை எனக்கு தந்துவிடவே நினைக்கிறார். எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. என்னுடைய சம்பளத்திற்கு அத்தனையும் வாங்கவும் முடியாது. அவர் கொடுப்பதை மறுக்கவும் முடியாது.
நன்றி!
சந்திப்போம்.
ச.அன்பரசு
19.7.201`7
*****************************************************************
இனிய நண்பர் அன்பரசுவுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? பொதுவாக அரசு ஊழியர்கள் அவர்களின் சுயநலத்திற்குத்தான் வேலை செய்வார்கள் என்ற எண்ணம் அனைத்து மக்களிடம் இருக்கிறது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என யாருக்கு பெரிய விலக்கு இல்லை. அரசு வேலை என்பதே முன்னர் பார்ப்பனர்களின் உரிமையாக இருந்தது. இன்று கூட வங்கித்துறையில் அவர்களின் கொடிதான் பறக்கிறது. சமூகத்திலுள்ள அனைவருக்கும் வாய்ப்பு தரவேண்டும். அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அனைத்து சமூகத்தினருக்கும் அரசு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன்று அரசு ஊழியர்கள் தம் உரிமைகளைக் கேட்டால் கூட அரசியல்வாதிகள், தமது செயலின்மையை மறைக்க பல்வேறு தந்திரங்களைக் கையாள்கிறார்கள். அதில் ஒன்றுதான், பணியாளர்கள் தமது தகுதிக்கு மிஞ்சிய சொகுசைப் பெற்றுள்ளார்கள் என்று ஊடகங்கள் வழியாக மக்களை நம்ப வைப்பது. இந்த விஷயத்தை அரசு மிக நைச்சியமாக கையாள்கிறது. நீங்கள் எழுதிய கடிதம் எனக்கு இந்த விஷயத்தை நினைவுபடுத்தியது. வரிகளை நாங்கள் குறைக்க எதுவும் செய்ய முடியாது. மாத சம்பளக்காரர்களாக இருக்கும் வரையில் வரி கட்டுவதைத் தவிர்க்க முடியாது. அவர்களே எடுத்துக்கொள்வார்கள். தொழில் செய்தால் ஆடிட்டர் வைத்து வரியைக் குறைத்துக்கொள்ளலாம். தனிநபராக இருந்தால் வரிவிலக்குக்காக அரசு நிறுவனங்களில் காப்பீடுகளை வேண்டாவெறுப்பாக எடுக்க வேண்டியிருக்கிறது.
நீங்களாகவே தேடி நூல்களை வாசிக்க கூடியவர்தான். அதேசமயம் உங்கள் ஆசிரியரும் உங்களுக்கு நூல்களை கொடுத்து வாசிக்க சொல்கிறார் என்றால் பெரிய விஷயம்தான். இந்த அணுகுமுறை பாராட்டப்படவேண்டியது. நிறைய பேர் இப்படி ஊக்குவிப்பது கிடையாது. உங்கள் ஆசிரியர் நிச்சயம் வேறுபட்டவர்தான். எழுதுவதற்கு வாசிப்பு முக்கியம். நன்றாக சாப்பிடுங்கள்.
நன்றி!
அ.ராமமூர்த்தி
24.7.2017
கருத்துகள்
கருத்துரையிடுக