வீட்டில் இருந்து வேலை செய்வதால் மனநலன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்! - டான் ஸ்வாபெய்
எதிர்கால வேலை என்பது டிஜிட்டலாகவே இருக்கும்!
எழுத்தாளர் டான் ஸ்வாபெய்
ஆங்கிலத்தில்: மாலினி கோயல்
டான் ஸ்வாபெய் எழுத்தாளர்
என்பதோடு மனிதவளத்துறை ஆலோசகர் மற்றும் வொர்க்பிளேஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும்
பணியாற்றுகிறார். ஆரக்கிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ரான்ஸ்டாட் ஆகிய நிறுவனங்களில்
பணியாற்றியுள்ளார்.
வீட்டிலிருந்து பணியாற்றுவது இப்போதைய நிலைமையாக
இருக்கிறது. இதில் பணியாளர்கள் அதிகம் உணர வாய்ப்பிருக்கிறதே?
உலகில் இப்போதைய நிலைமையில்
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தனிமையில் இணையம் சார்ந்துதான் பணியாற்றி வருகின்றனர்.
நேருக்கு நேராக சந்தித்து பேசுவது என்பதற்கு இணையம் வழியாக சந்தித்து பேசுவது மாற்று
கிடையாது. இன்றுள்ள டிஜிட்டல் கருவிகள், மூளையில் டோபமைனை சுரக்க வைக்கும் தன்மையைக்
கொண்டுள்ளன. ஆனால் பெருந்தொற்று சூழ்நிலையில் இருநபர்களுக்கான சந்திப்பும் கூட வேறுபட்டுத்தான்
அமைய வாய்ப்புள்ளது.
உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான
ஏற்பாடுகள் மெல்ல இயல்பாகிவருகிறது. இந்த பணித்தன்மைக்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்பு
இருக்கிறது?
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள்
என்பது ஆட்டோமேஷன் முறைக்கு மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அலுவலகத்தில் திறன்
குறைந்த பணியாளர்கள் மிகச்சிலபேர் இருந்தால் போதும். கோவிட் -19க்கு பிறகு நாம் 9
-5 மணி வேலைக்கு செல்வது குறைந்துவிடும். அதற்குபதிலாக நாம் வீட்டில் இருந்தே பணி செய்வோம்.
இதனால் பணியாளர்களுக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது. நிறுவனத்திற்கும் அலுவலகத்திற்கான
செலவு குறைகிறது. தேவையில்லாத சந்திப்புகளுக்கான நேரம் வீணாகாது. அதேசமயம் தொழிலாளர்களுக்கான
சம்பளம் அதிகமாகும். இதை தவிர்க்க தொழிற்சாலைகளில் பெரும்பாலும் ரோபோட்டுகளை பணிக்கு
கொண்டு வருவது அதிகரிக்கும். கோவிட் -19 நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களுக்கு
மனிதர்களின் தொடர்பு குறைந்துவிடுவதால் மனநல பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள்
உள்ளன. இதனால் ஸ்டார்பக்ஸ், வால்வோ போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கான் பல்வேறு
ஊக்க நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தவேண்டியிருக்கலாம்.
இதற்குப்பிறகு அலுவலங்கள்
நடைபெற்றால் கிருமிநாசினிகள், முக கவசங்கள், நோய்த்தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் என
பல்வேறு விஷயங்களை செய்யவேண்டியிருக்கும்.
நிறுவனத்தின் தலைவர்கள், மேலாளர்கள் எப்படி செயல்படுவார்கள்?
நிறுவனத்தின் தலைவர்கள்
நேரடியாக பணியாளர்களோடு பேச முடியாது. மேலாளர்கள் பணியாளர்கள் மீது கொண்டிருந்த கட்டுப்பாடு
தளரும். இதைப்பொறுத்து பணியாளர்களின் வேலைநேரம் அதிகரிக்கும், அவர்களின் உற்பத்தி திறன்
சீராக இல்லாமல் குறையும். இந்த வேறுபாடு இவர்களின் சம்பளத்தில் எதிரொலிக்கும். குறைந்த
சம்பளத்திற்கு அதிக நேரம் உழைப்பது போல இருக்கும். அவர்கள் வாழும் இடத்தைப்பொறுத்தும்,
மனநிலைமை பொறுத்தும் பணியின் தரம் மாறுபடும். மேலாளர்களுக்கும், நிறுவன தலைவர்களுக்கும்
இந்த நிலைமை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கும்.
விர்ச்சுவல் முறையில் எப்படி பணியாளர்கள் குழுவை நிறுவனத்தலைவர்கள்
வழிநடத்துவார்கள்?
நிறுவனத் தலைவர்கள் அல்லது
மேலாளர்கள் பணியாளர் குழுவை வழிநடத்துவது என்பது விர்ச்சுவல் முறை அல்லது அலைபேசி வழியாகத்தான்
இனி தொடர்புகொள்ள முடியும். இந்த சந்திப்புகளில் தனது எதிர்பார்ப்பு என்ன, நிறுவனத்தில்
இலக்கு என்ன என்பதைப் பற்றி சரியாக சொல்லவில்லை என்றால் அவர்களால் ஊழியர்களிடம் சரியாக
வேலைவாங்க முடியாது. பணியாளர்கள் நேரில் பார்ப்பது போல ஊக்கப்படுத்துவது இனி சாத்தியம்
இல்லை. இதன் மற்றொரு பக்கவிளைவாக, பணியாளர்களின் தனிப்பட்ட லட்சியம் சார்ந்த விஷயங்கள்
பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பொதுவாக பணியாளர்கள் சாப்பிடும் இடம், தண்ணீர் குடிக்கும்
இடம் என பல்வேறு இடங்களில்தான் பேசி நட்பை வளர்ப்பார்கள்,. இனி அந்த வாய்ப்புகள் கிடைக்காதா?
ஜூம் மென்பொருளில் பிரேக்
அவுட் ரூம்ஸ் என்ற வசதியைப் பயன்படுத்தி நீங்கள் அரட்டை அடிக்கலாம். வாரம் முழுவதும்
வேலை செய்தாலும் ஏதேனும் குறிப்பிட்ட நாளில் அரட்டை அடிப்பதற்கான வாய்ப்பை அலைபேசி
வாயிலாக விர்ச்சுவல் முறையில் அமைத்துக்கொள்ளலாம். குழு பணியாளர்கள் அனைவரும் சேர்ந்த,
இணையத்தில் உள்ள விளையாட்டுகளை சேர்ந்து விளையாடலாம். அலைபேசி வழியாக சக அலுவலக பணியாளர்களுடன்
இயல்பாக தொடர்பு கொண்டு அரட்டை அடிக்கலாம். இம்முறையில் நீங்கள் அலுவலக நட்பை தொடரலாம்.
தங்க விதிகள்
காலையில் குறிப்பிட்ட நேரத்தில் வீடியோகால்களை செய்வது கட்டாயம் ஆகவேண்டும். அப்போதுதான் நிறுவனத்தின் தேவை என்ன என்பதை அனைவருக்கும் நிறுவன தலைவர் புரிய வைக்க முடியும்.
நிறுவனத்தலைவர் தன்னுடைய வெற்றிக்கதையை குழுவினரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் இது பலருக்கும் ஊக்கம் தரும். விர்ச்சுவல் முறையில் பணி அல்லாத பிற விஷயங்களை பேசுவது கடினமாகவே இருக்கும்.
வீட்டுப்பணி, ஆபீஸ் பணி என இரண்டையும் சரியாக பராமரிப்பது முக்கியம். வீட்டில் அலுவலக பணிகளை செய்யும் போது, வீடு, அலுவலகம் என இரண்டுக்குமான எல்லைகள் குறைவது உண்மை.
குழுவினர் சாதித்த சின்ன வெற்றிகளையும் கூட நிறுவனத் தலைவர் கொண்டாட வேண்டும். அப்போதுதான் தனியாக பணி செய்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். அனைவரும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் ஏங்குபவர்கள்தானே?
கருத்துகள்
கருத்துரையிடுக