நிறுவனங்களை வளர்ப்பதை விட விற்பதற்கே முயல்கிறார்கள்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!







அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


கடந்த வாரமே நான் இந்த கடிதத்தை எழுதியிருக்கவேண்டும். ஆனால் இடையில் வந்த கல்யாணம் ஒன்று சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இஸ்லாமிய நண்பரின் வீட்டுக்கு கல்யாணச் சாப்பாடு வெறியில் போய்விட்டேன். பிரியாணியை அள்ளி திணித்த வேகத்தில் செரிமானத்தின்போது வயிறு விண்டோஸ் போல ஷட்டவுண் ஆகிவிட்டது. வயிறைக் காலி செய்ய நேரமாகிவிட்டது.


அலுவலகத்தில் கடிதம் எழுதிவிடலாம்தான். ஆனால் வாட்ஸ்அப் காலத்தில் கடிதமா என அதிசயப் பிறவி போல பார்க்கிறார்கள். என்னடா பிரச்னை உங்களுக்கு என வாய்க்கு வந்த விஷயங்களைப் பேசினால் சண்டை வந்துவிடும். இரவில் மட்டும்தான் சொந்த வேலைகளை, எழுத்து வேலைகளைப் பார்க்கிறேன்.


இந்த ஆண்டு தீபாவளி மலரில் எங்கள் ஆசிரியர் கே.என்.சிவராமன் எதுவுமே எழுதவில்லை. எனக்கு இதில் பெரும் வருத்தம். அவருக்கு எழுதுவதில் இப்போதெல்லாம் விருப்பமில்லை. அனேகமாக வேலைகள் அழுத்தம் காரணமாக இருக்கலாம். தினசரி ஆறு மணிக்கு மேல் அவரை இருக்கையில் பார்ப்பது கடினம்.


நாம் உட்கார்ந்திருந்தால் கோபம் வந்துவிடும். மெல்ல அதட்டுவார். போதும்பா, நீயும் இருக்காதே. வீட்டுக்குப் போய் சந்தோஷமாக இரு என்பார். தற்போது வாசிப்பில் நாவல்கள் குறைந்துவிட்டன. மதிப்புரைக்கு வரும் நூல்களில் யாருக்கு என்ன நூல்கள் பிடிக்குமோ அந்த நூல்களை ஆசிரியரே தேர்ந்தெடுத்து வந்து அவரவர் இருக்கையில் வைத்துவிட்டு சென்று விடுகிறார். நிறைய கட்டுரை நூல்கள் கையில் சேர்ந்துவிட்டன. அவர் வாசிக்கும் நூல்களிலும் நாம் எழுதும் பிரிவுகள் இருந்தால் உடனே படிக்க கொடுத்துவிடுவார். திரும்ப வாங்கவே மாட்டார்.


தற்போது காங்கேயத்திலும் மழை பெய்துகொண்டிருக்கலாம். நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தால் சென்னை பதற்றமாகி விடுகிறது. இப்போது டெங்கு காய்ச்சல் இங்கு பரவி வருகிறது. இப்போது மழை நிற்காமல் பெய்தால் என்னாகும்? இயற்கை தன்னைத்தானே சமநிலையில் வைத்துகொள்ளும் என்று நினைக்கிறேன். சரி, தவறு என்பது இயற்கையின் அமைப்பில் கிடையாது.


நன்றி!


சந்திப்போம்!


.அன்பரசு


19.11.2017

****************************


அன்புத்தோழர் ராமுவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?


கௌசல்யா - சங்கர் விவகாரத்தை நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். கௌசல்யாவின் கணவரைக் கொன்ற குற்றத்திற்காக அவரது தந்தை உள்ளிட்டவர்களுக்கு தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதி என்பது பிறப்பில் பிறப்பதல்ல. அதைப்பற்றிய சிந்தனை மூளையில் உள்ளது. கருத்தியல் என்பது அழிவில்லாதது. பார்ப்பனர்களை நாம் அதற்காக திட்டினாலும் அவர்கள் விதைத்த விஷம் இங்கு இடைநிலைச்சாதி உட்பட அனைத்து சாதிகளிலும் ஆழமாக இறங்கிவிட்டது. சாதி மேலாதிக்கம் என்பது முடியரசு மூலம் உரம்போட்டு வளர்க்கப்பட்ட கலாசாரமாக இருக்கிறது. நீதிமான்களே குறிப்பிட்ட சாதிக்காரர்களாகத்தானே இருக்கிறார்கள்? அவர்களின் சுத்தியலுக்கு நீதிமன்ற மனிதர்கள் பயப்படுவார்க். சாதி பயப்படாது.


சங்கர் கொலைசெய்யப்பட்டது சாதி கௌரவத்திற்காக என்கிறார்கள். இப்போது சட்டப்படி கௌசல்யாவின் தந்தை சிறையில் காத்திருந்து சாகப்போகிறார். இது கொடுமையான ஒன்று. இந்த தண்டனை என்ன மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.


.வியில் நீதி கிடைத்துவிட்டது என உற்சாகமாக கட்டுரை எழுதுகிறார்கள். கன்று இறப்புக்கு பதிலாக மகன் இறக்கவேண்டும் என்பது அன்றைய நீதியாக இருக்கலாம். இன்றுமா? இந்தியச்சட்டம் மனம் வருந்தி திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கிவந்தது. மரணதண்டனையை இறுதி தீர்வாக ஒருவர் முன்வைத்தால் அது சரியான முறையல்ல என்று நினைக்கிறேன். சாதி கௌரவம் என்று கௌசல்யாவின் தந்தையை எண்ண வைத்தது அவரது மூளையிலுள்ள எண்ணம் மட்டுமல்ல, சுற்றியுள்ள சமூகமும்தானே அந்த அழுத்தத்தை கொடுத்தது. அதற்கென்ன தண்டனை?


அமெரிக்காவில் உள்ள மின்சார நாற்காலி போன்ற பைத்தியக்காரத்தனத்திற்கு இந்தியா மாறி வருகிறதோ என்று பயமாக இருகிகறது. பிரணாப் முகர்ஜி காலத்திலிருந்தே கருணை மனுக்கள் எதுவும் ஏற்கப்படுவதில்லை. அப்புறம் எதற்கு அவருக்கு அனுப்ப வேண்டும்? இறுதியாக வாழ ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. இப்படி இரக்கமில்லாத சமூகம் உருவாகி வருவது ஆபத்தானது.


தவறு செய்தவர் திருந்தி மனம் வருந்தி நன்னிலை பெறுவதே நீதி. தூக்கு உடலுக்குத்தான். அவர் விதைத்த செய்த செயலின் விளைவுகளை அவர் பார்க்கப்போவதில்லை. எவ்வளவு நிம்மதியான சாவு. அவரின் செயல் மூலம் சமூகத்திற்கு சொன்ன செய்தியை யாரும் மறப்பதில்லை. முஸ்லீம்களை இந்துத்துவ்வாதிகள் பாகிஸ்தானுக்கு போல என அவர்களை அடித்துக்கொன்றுவிட்டு பாடம் எடுக்கிறார்களே அதுபோல. உத்தமர் அப்பெண் மீது கல் எறியட்டும் என்று சொன்னது சத்திய வார்த்தைதானே என்று எனக்குத் தோன்றுகிறது.


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


26.12.2017

**********************************


சுயமரியாதை தோழர் ராமுவுக்கு வணக்கம். நலமா?


மற்றவர்களுக்கு சனிப்பெயர்ச்சி. திமுகவுக்கு ஷைனி பெயர்ச்சி என ஜூ.வியில் எழுதியிருக்கிறார்கள். உங்கள் பேச்சு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிஜமாகியிருக்கிறது. பணத்தை நேரடியாகப் பெற்றாலும், நிறுவனப் பங்குகளாகப் பெற்றாலும் குற்றம்தான். இதற்கு காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வரலாற்றிலும் பதிவாகிவிட்டது. நீதித்துறை பரிசுத்தமானது என்பதல்ல நான் சொல்ல விரும்புவது. கொஞ்சமேனும் அங்கும் ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு சட்டத்திற்குட்பட்ட முடிவுகளை எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.


காட் ஒப்பந்தம் தொடங்கி பல்வேறு உலக நாடுகளுக்கான ஒப்பந்தங்கள், உலக வங்கியிடம் கடன் வாங்குவது அனைத்துமே நம் சுயசார்பை அடகு வைத்துதான் பெற்றிருக்கிறோம். பிஎஸ்என்எல்லுக்கு புதிய தொழில்நுட்பங்கள் வழங்க தாமதப்படுத்துவது தொடங்கி அரசு நிறுவனங்கள் முக்கியமான அரசின் ஒப்பந்தங்களில் கலந்துகொள்ளக்கூடாது என விதிகளை மாற்றுவது வரையில் மத்திய அரசு கவனமாக வேலை செய்கிறது. இதில் கைக்கட்சியை விட காவிக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் வேகம் அதிகம். அனேகமாக வழக்கு போட்டு அதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்ட இறுதி தலைமுறை நாம்தான்.


89, 90 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர்களிடம் நேர்மையை மதிப்பை உணர வைப்பது கடினமாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரே விஷயம்தான் முக்கியம். நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதுதான் அது. ஊர் எக்கேடு கெட்டால் என்ன என்று செவத்த புள்ளையைக் கல்யாணம் செய்துகொண்டு சீன போன்களில் செல்ஃபீ எடுத்து பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


நகரத்தில் பலரின் வாழ்க்கையே விலா எலும்புகளை நொறுக்குமளவு இஎம்ஐயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் எங்கே புரட்சி செய்வது? தேசபக்தி எல்லாம் 70, 90களில் வந்த படத்தை பார்த்தால் போதும் என்றளவுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் ஏழைகள் வாழ்வதே பெரிய விஷயம்தான். தினசரி போராட்டங்களுடன்தானே வாழ்ந்து வருகிறோம். புதிய இந்தியா இனிதான் பிரசவமாகப் போகிறதா என்ன?


நன்றி!


சந்திப்போம்


.அன்பரசு


26.12.2017

*****************************************


அன்புள்ள தோழருக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


நீங்கள் கடிதம் எழுதுவதை தாமதம் என்று சொன்னால் நான் உங்களுக்கு அனுப்புகள் கடிதங்களை என்னவென்று சொல்லுவது?


நான் முன்னமே கடிதம் வழி எழுதியிருந்தது போல இப்போதெல்லாம் மனசார நான்கு வார்த்தை பேசினால் நன்றாக இருக்கிறது. எழுதுவது என்பது எனக்கு தேர்வில் மட்டுமே வாய்க்கிறது. மற்றபடி ஊரில் நாயம் பேசித்தானே நாம் இரண்டு பேரும் அறிமுகமானோம். நீங்கள் பத்திரிக்கையாளராக இருக்கிறீர்கள். கடிதம் எழுதுவதை பின்னாலில் நீங்கள் நூலாக கூட மாற்ற வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நீங்கள் கடிதம் எழுதுவதை பயிற்சியாக கூட கருதலாம். எழுத்துக்கு எப்போது பயிற்சி தேவைப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சைவம் சாப்பிடுகிறீர்கள் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது பார்த்தால் முஸ்லீம் நண்பர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்கள். அவர்கள் அனைத்து ஐட்டங்களிலும் செம்மறி ஆடு, கோழி, மாடு என இறைச்சியை கலப்பார்கள். கவனமாக சாப்பிடுங்கள். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவு. செரிமானத்திறனும் குறைவு. அப்புறம் உடல் பந்த் செய்யாமல் என்ன செய்யும்?


உங்கள் எடிட்டர் படிப்பது, எழுதுவது, பேசுவது அனைத்திலும் விற்பன்னர் போல. நேரத்தை திறமையாக திட்டமிட்டு பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே எதையாவது சாதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பரவாயில்லை அவர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் தேடிப்படிக்கிற ஆள்தான். சாதிவெறிக்கு எதிராக தண்டனை வருவதில் சமூகம் இன்னும் விழிப்புநிலையை அடையவில்லை என்று நினைக்கிறேன். இந்த தண்டனைகளுக்கு பயந்து யாரும் குற்றங்களை செய்யாமல் இருப்பதில்லை. காரணம், இவற்றையெல்லாம் தாண்டியது குடும்ப கௌரவம், தூய்மையான இனம் என்பதில் வெறி கொண்டுள்ளார்கள் தமிழக மக்கள். தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களைப் பற்றிய வசைச்சொல், பழமொழிகளாக எத்தனை உள்ளது என்று அறிந்து இருப்பீர்கள். அவை அனைத்தும் திட்டமிட்டு குறிப்பிட சாதியை இழிவுபடுத்தி அதேநிலையில் இருக்க வைக்க உண்டானதுதான்.


இதற்காக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி அவர்களை குறிப்பிட்ட தொழிலில் இருக்க வைக்க முயல்கிறார்கள் பார்ப்பனர்கள். அவர்கள் ஏற்படுத்திய விஷம் இன்னும் மேல்சாதி, இடைநிலை சாதியினரின் நரம்புகளுக்குள் வீரியத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எனக்கு இந்த தண்டனை அவர்களை சமூக கொடூரங்களிலிருந்து விலக்கி வைக்கும் என்று நம்பவில்லை. ஆனால் மக்கள் கருத்து என்ற விஷயத்தை வைத்தும், காவல்துறையினரின் கையாலாகத்தனத்தை சரி செய்யவும் மரணதண்டனை, ஆயுள்தண்டனையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கௌரவ, ஆணவக் கொலைகளை செய்பவர்களுக்கு மனநல தெரபி சிகிச்சை கொடுத்து தனிமைப்படுத்தி சிலகாலம் வைப்பது நல்லது. மரணதண்டனை ஒருவருக்கு சிறந்த விடுதலையை அளித்துவிடுகிறது. இதில் அவர் பாதிக்கபட்டவர்களின் வலியை எப்படி உணர்வது? பிறரின் வலியை அவர் மனதில் காலமெல்லாம் உணர்ந்துகொண்டே இருக்கவேண்டும் விதமான தண்டனை அவர் சமூகத்தில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வாழ்வதுதான் என்று நினைக்கிறேன்.


காதலை ஏன் வருகிறது என்று ஆராய்ச்சி செய்யவில்லை. ஆனால் முதல்தலைமுறையாக ஏதாவது செய்வான் என்று கடன்பட்டு படிக்ககவைத்த சங்கரின் பெற்றோர்களை நினைத்துப்பாருங்கள். அவர்களின் எதிர்காலம் இக்கொலையோடு முடிவுக்கு வந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தொடர்ச்சியாக வெட்டிக் கொலைப்படுவது அவர்களது தலைமுறையை அழிக்கும் முயற்சியாகவே நினைக்கிறேன். மரண தண்டனையை ஒழிப்பது என்பது இங்கு சிறு குழுவின் முயற்சியாகவே இருக்கிறது. அதனை மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒழிப்பதற்கு இன்னும் பல்லாண்டுகள் ஆகும். விசிலடிச்சான் குஞ்சுகளே முதல்வர்களாக வரும் நிலையில் பல்வேறு உருப்படியான சிந்தனைகளை இவர்கள் பின்பற்றுவதுமில்லை. அறிவுப்பூர்வமான நூல்களை வாசித்துக் கற்றுக்கொள்வதுமில்லை. வணிக ஒப்பந்தங்கள் நமக்கு சேவை செய்யவிடாமல் அரசை தடுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் கிடையவே கிடையாது.


இன்று நஷ்டத்திலுள்ள அரசு துறையை உருப்படியான குடிமைப்பணி அதிகாரி கையில் கொடுத்துப் பாருங்கள். லாபம் சம்பாதிக்கிறதா இல்லையா என்று. ஆனால் அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் எப்பாடு பட்டாலும் மேலே வந்துவிடக்கூடாது என்றுதான் உரிமங்களை வழங்க தாமதம் செய்கிறார்கள். இப்படி பாகுபாடு காட்டினால் சீனாவைப் போல நாம் எப்படி வளரமுடியும்? சீனா தன் ஆதிக்கத்தை உலகம் முழுக்க வலுப்படுத்த தனியார் நிறுவனங்களை வளர்ச்சியை மட்டுபடுத்தி, அரசு நிறுவனங்கள் அனைத்து உலகளவிலான ஏலங்களில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.


காவி வெறியர்களின் ஆட்சியில் பொதுத்துறையை தேனடை போல பிய்த்து தின்ன தனியார் நிறுவனங்களை க்யூவில் நிறுத்தி வருகிறார்கள். வட இந்திய மக்கள் இவர்களால்தான் தங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என நம்புகிறார்கள். இந்த அநியாயத்திற்கு அக்கட்சிக்கு வாக்களிக்காத நாமும் பலியாகி வருகிறோம். இந்த துரோகங்களை மறைக்க அடிக்கடி சுதேசி பொருட்களை வாங்குங்கள் என்பார்கள். இன்று வணிகமே உலகளவில் மாறிவருகிறது. நம்மை விட சீனாவில் குறைந்தவிலையில் தொழிலாளர்கள் பொருட்களை உருவாக்கி வருகிற நிலையில் சுதேசி பொருட்களை நாம் தயாரித்து எப்படி விற்பது? பிலிப்ஸ், சோனி, சாம்சங், எல்ஜி என பொருட்களை வாங்கி வருகிறோம். திடீரென வீடியோகான், ஒனிடா என பொருட்களை வாங்குவது சாத்தியமா? இந்திய நிறுவனங்கள் பலவும் அரசின் ஆதரவில்லாத நிலையிலும், போட்டிக்கு ஈடுகொடுக்காமலும் முடங்கிப் போய்விட்டன. திடீரேன கனவு கண்டு பயத்தில் உளறுவது போல பிரதமர் மோடி பேசுகிறார். தன் நாட்டை நேசித்து அதனை காப்பாற்றுவது வேறு, மக்களை பரிவோடு நடத்துவது வேறு. ஆனால் காவிக்கட்சி இந்தியாவை கூறுபோட்டு விற்கவே முயல்கிறது. தனக்கான லாபம், கமிஷன் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள் போல. இது அவர்களுக்கான காலம்தான்.


உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.


நன்றி!


..ராமமூர்த்தி


29.12.2017









கருத்துகள்