மத்திய அரசும், ஆர்பிஐயும் லட்சுமண ரேகையைத் தாண்டி வரவேண்டும்! - அமித் மித்ரா மேற்கு வங்க நிதியமைச்சர்


West Bengal FM Amit Mitra writes to RBI over 'discriminatory ...

மொழிபெயர்ப்பு நேர்காணல்

மத்திய அரசும் ஆர்பிஐயும் லட்சுமண ரேகையைத் தாண்டி வரவேண்டும்!

அமித் மித்ரா, மேற்கு வங்காள நிதி அமைச்சர்.

அமித் மித்ரா, அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாகம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றவர். அத்துறையில் பணியாற்றி வந்தவரும் கூட. அவரிடம் மத்திய அரசுடன் பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்றுவது, தொழில்வளர்ச்சி மேம்பாட்டிற்கான அவரது திட்டங்கள் பற்றி பேசினோம்.

உலக நிதியகம் இந்தியாவின் வணிக வளர்ச்சி 1.9 சதவீதம்தான் இருக்கும் என்று கூறியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் என்று கணித்துள்ளது. இதுபற்றி உங்களின் கருத்து?

மத்திய அரசு மாநிலங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீத அளவில் ஆறு சதவீத நிதியை மாநிலங்களுக்கு வழங்கவேண்டும். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த அளவீட்டுப்படி பத்து லட்சம் கோடி ரூபாய் தரவேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது நமது கடன் சதவீதம் 70 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் கடன் சதவீதம் 106 சதவீதமாகவும், ஜப்பானின் கடன் சதவீதம் 240 ஆகவும் உள்ளது. எனவே மத்திய அரசும் ஆர்பிஐயும் லட்சுமண ரேகையைத் தாண்டி வந்து மக்களுக்கு உதவி செய்யலாம். மக்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் சேரும்படி 4 லட்சம் கோடி ரூபாயை வழங்கலாம். இது ஊரடங்கு காலத்தில் அவர்களின் வறுமையைப் போக்கும். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் உள்ளது. இப்போது மத்திய அரசு கச்சா எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்து வைத்தால் அது நமக்கு உதவும். எங்களது மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் இலவச ரேஷன் அரிசியை வழங்கி வருகிறோம்.

பிற துறைகள் எப்படி உள்ளன?

அனைத்து தொழில்துறைகளும் தேவையான மூலப்பொருட்கள் இன்றி தடுமாறி வருகின்றன. இந்நேரத்தில் மத்திய அரசின் நிதியுதவி கிடைத்தால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலே வர உதவியாக இருக்கும். அவர்களுக்கு நான்கு ஆண்டுகளில் கடனை திரும்பி கட்டும்படி குறிப்பிட்ட கடன் தொகையை வழங்கலாம். நிறுவனங்களைப் பொறுத்தவரை பணியாளர்களுக்கு அரசின் அறிவுறுத்தலால் 80 சதவீத தொகை வழங்கப்பட்டுவிட்டது. விமானசேவை, சுற்றுலா, சில்லறை விற்பனை என பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கோவிட் -19 பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?

 இந்தக் கேள்விக்கு வளர்ந்த வல்லரசு நாடுகளே தயாராகி இருக்க மாட்டார்கள். காரணம் நோய்த்தொற்று பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்த நோய் பாதிப்பு அக்டோபர் மாதம் வரை நீண்டாலே, பொருளாதாரம் பற்றி சொல்ல ஏதுமில்லை. ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சிதான் நம் நாட்டில் இருக்கும். வளர்ச்சி எதிர்மறை திசையில் போகும் வாய்ப்பும் உண்டு.

மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவுகிறதா இல்லையா?

நோய்த்தொற்றுக்கு எதிராக போராடி வரும் மாநிலங்கள் மத்திய அரசின் பதிலைப்பெறவும் நிதியைப் பெறவும் போராட வேண்டியதிருக்கிறது. நான் நிதியமைச்சருக்கு எட்டு கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் ஒரு கடிதத்திற்கு கூட அவரிடமிருந்து பதில் வரவில்லை. எங்களுடைய கோரிக்கையில் மிகச்சிலவே ஏற்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி முறையில் சிறப்பம்சமே, மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசுகள் நிறைவேற்றும் என்பதுதான். மத்திய அரசு மாநில அரசுகளின் மூலம்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இந்த தன்மையை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

மத்திய அரசின் குழுக்கள் மேற்கு வங்காளத்திற்கு வந்தது சர்ச்சையானதே?

குழுக்களை அனுப்பும் முன் மத்திய அரசு மாநில அரசிடம் பேசியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அப்படி பேசவில்லை. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு குழுக்களை அனுப்பி வைத்து அவர்களது நோக்கம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ், ராஜேஸ் ஜெய்ஸ்வால்  

கருத்துகள்