சொத்துக்களை பாதுகாக்க நினைக்கும் திராவிட நிறுவனங்கள், தேய்ந்துபோன இடதுசாரி இயக்கங்கள்!



4

அன்புத் தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா?


தேர்தல் பணிகள் முடிவடைந்து இயல்பு வேலைக்கு திரும்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பெரும்பாலான காசை உணவிற்காக செலவிட்டிருப்பீர்கள். தேர்தல் பற்றிய அருள்வாக்குகளை தொலைக்காட்சிகள் சொல்லத் தொடங்கியுள்ளன, நியூஸ்7, தின புய்ப்பம் என இரண்டு ஊடகங்களும் பசுமை கட்சிக்கு விளக்கு பிடிக்கிறார்கள். இதைப்புரியாதவர்கள் இறந்துபோன ஜெ.வால் ஊடகங்களுக்கு ஆபத்து என கூறிவிட்டு வருகிறார்கள். இதில் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்ன? அனைத்தும் அசைன்மெண்ட்தான். அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அனுசரித்து போகவேண்டியதுதான். தேர்தலில் அனைத்தும் இழந்தவர்கள் கூட இலவசங்கள் வாங்க நம்முடன் லைன் கட்டலாம். காலம் எதைத்தான் செய்யாது?

கண்ணுக்கு எதிரே குழிவெட்டி அதில் விழுகிற எல்லாமே உங்களுக்குத்தான் என சைகோ குஜயகாந்தையே குழப்பி அடித்துவிட்டார். தோல்வி எதிர்பார்த்ததுதான் என்ற வார்த்தையை மறக்க முடியுமா? அதை விகடன் சைகோ குளிர் கண்ணாடியோடு சொகுசாக இருக்கும் படத்தை போட்டு கிண்டல் செய்கிறது.

தினமலரில் ஜெயமோகன் எழுதி வெளியான ஜனநாயக சோதனைச்சாலையில் நூலை படித்திருக்கிறீர்களா? நான் இந்த தொடரை பத்திரிகையில் வெளியானபோதே படித்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் நீங்கள் இந்த நூலை வாங்கி படியுங்கள். உங்களுக்கு எஸ்.ரா பிரியம் என்றாலும் ஜெயமோகனின் எழுத்து உங்களை வசீகரிக்கும். யானை டாக்டர் நூலை படித்திருக்கிறீர்கள்தானே?

நன்றி!


சந்திப்போம்.


அன்பரசு

25.5.2016

************************************************************

5

அன்பிற்கினிய தோழர் ராமமூர்த்தி அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

தங்களுடைய வாசிப்பு என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உங்களுக்கான திசையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என நம்புகிறேன். விழிப்புணர்வு என்பது வரலாற்றிலிருந்து தொடங்குகிறது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட எழுதப்பட்ட திறமான நூல்கள் நிறைய ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. என்ன?ஆசிரியரின் பெயரைப் பார்த்து வாங்கியாகவேண்டும்.

தீக்கதிர், பாரதி புத்தகாலயம் போன்ற இடதுசாரி வகையறாக்களை நீங்கள் நூலகத்தில் படித்துவிட முடியும். வெகு ஆண்டுகளாக நூலகத்தில் உள்ள நூல்கள் இந்த அமைப்பு சார்ந்த நூல்களாகவே உள்ளன. இவர்கள் தங்கள் கொள்கைகளிலிருந்தே விலகி வருகின்றனர். இதில் உறுப்பினராக சேரும் அமெரிக்க சீல் படையில் சேரும் ஒன்றுதான். இரண்டுமே மிக கடினம். இவர்களின் சித்தாந்த விஷயங்களை குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களே சிவந்தமண் என்ற நூலில் எழுதிவிட்டார். ஆர்வமிருந்தால் வாங்கி படியுங்கள். எளிமையாக இருக்கும். இதற்கும் மேலான ஆர்வத்தில்தானே நீங்கள் புதிய ஜனநாயகத்திற்கு சந்தா கட்டி படித்து வந்தீர்கள். இதில் பெரும்பாலும் பிராமணர்கள்தான் தலைமை தாங்குகிறார்கள். மாற்றங்களை உடனே தனதாக்கிக்கொண்டு வென்றுவிடும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருக்கிறது. அதுதான் உண்மை. அவசியமானதை தேர்ந்தெடுத்து படியுங்கள். மார்க்கம் சார்ந்து போனால் சிந்தனையும் அந்தவழியில்தான் செல்லும், குழப்பிக்கொள்ள வேண்டாம்.

வறட்டு வாதங்களை நரம்புகள் புடைக்க பேசலாம்.ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தி அதன் பயன்களை பார்க்காமல் யாரும் அதனை பின்பற்ற தயாராக இல்லை. பேக்கரி நாற்காலியில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து எதிரே இருப்பவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பேச நினைக்கிறீர்களோ அப்போதே மக்களிடமிருந்து விலகத் தொடங்கிவிட்டீர்கள் என்று பொருள். செயல்களுக்கும் மனதிற்கும் தொடர்பிருக்கிறது என்று நம்புகிறீர்களா இல்லையா?


நன்றி


சந்திப்போம்.


.அன்பரசு

19.6.2016

**********************************************************

6

இனிய தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமா?

வெகுநாட்களுக்குப்பிறகு இருவரும் அலைபேசி வழியாக உரையாடியது மகிழ்ச்சி. எப்போதும் போலத்தான் நான் பேசினேன். பிறர் எழுதும் நூல்களைப் படித்துவிட்டு அதைப்பற்றிய கருத்துகளை அன்றிலிருந்து இன்றுவரை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய திராவிடக்கழகம் சார்ந்த சிந்தனை நன்றாக இருந்தாலும், தங்கத்தாரகை விருது கொடுப்பவர்களின் செயல்பாடு அருவருப்பாக இருக்கிறது. ஏறத்தாழ தேய்ந்துவரும் இடதுசாரிகளைப் போலவே தி.கவினரும் குறைந்து வருகிறார்கள். இவர்கள் குறைந்து வருகிறார்கள் என்று சொல்லலாம். அல்லது தங்களுக்கேற்ற வேறு இயக்கங்களை நாடிச் செல்கிறார்கள் என்று சொல்லலாம்.

அறிவிற்கும், ஞானத்திற்குமான போராட்டம் முற்றுப்பெறுவதே இல்லை. எதிர்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் சிலரை குறித்து வைத்துக்கொண்டு இவர்கள் என்ன சொன்னாலும் எதிர்ப்போம் என்று சொல்லுவது புத்திசாலித்தனமாக படவில்லை. தொன்மையான அனைத்தும் புனிதமான விஷயங்கள் கிடையாது. சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ளுங்கள். அதனை அரசு இன்று முன்மொழிவது செலவு குறைவு என்பதால்தான். அதில் ஆராய்ச்சி கிடையாது. ஆனால் அதில் குணமாகும் சில நோய்களும் உண்டுதானே? நிலப்பரப்பு சார்ந்த மருத்துவத்தை நான் நம்புகிறேன். சித்த மருத்துவத்திலும் ஜோதிடம் இயல்பாகவே உள்ளே இருக்கிறது. நான் இவற்றை முதலில் உள்வாங்கிக்கொள்ள நினைக்கிறேன். அதில் மூடநம்பிக்கை இருப்பதை அதை எதிர்க்கவேண்டும் என்பதை பின்னரே முக்கியமாக கொள்ளலாம்.

திராவிடக்கழகம் முதற்கொண்டு கல்விசார்ந்த சொத்துக்களை காக்க யார் காலை வேண்டுமானாலும் நக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அப்படித்தானே அவர்கள் எதிர்க்கும் ஆட்களுக்கு விருதுகளை அறிவிக்கிறார்கள். எனக்கு திறன் சார்ந்து பணி கிடைக்கும் என்று தலித் பத்திரிகைக்கு விண்ணப்பித்தில் நீ என்ன சாதி என்று கேட்டுத்தான் உட்காரச் சொன்னார்கள். இவர்கள்தான் சமூகநீதிக்கு கொடி பிடித்து சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். இதற்கு தனக்குப்பிடித்த கருத்தை இதுதான் என வெளிப்படையாக சொல்லும் ஆட்கள் பரவாயில்லை. பாருங்கள். இப்படிப்பேசினால் மண்டைச்சூடு அதிகரிக்காதா? சன்னி லியோன் நமக. காட்சி அருள் தாயே!


சந்திப்போம்


.அன்பரசு

22.6.2016




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்