கோவிட் -19 பாதிப்பை சமாளிக்க சார்ஸ் மூலம் கற்ற பாடம் உதவியது! - தைவானின் சாதனை
pixabay |
நோய்களுக்கு எல்லை கிடையாது!
தைவான் நாடு சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தாலும் சீனாவை விட வேகமாக நோயைக் கட்டுப்படுத்தி உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் ஜாசிக் வு விடம் பேசினோம்.
தற்போது தைவானில் கோவிட் -19 பாதிப்பு எப்படி உள்ளது?
கடந்த ஆண்டே கோவிட் -19 பாதிப்பு பற்றி தெரிந்தவுடன் தைவான் அரசு வேகமான நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக நோயை எதிர்த்துப் போராட முடிந்தது. மொத்தம் ஐநூறு பேர் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்தான். நாங்கள் இப்போது கோவிட் -19 பாதிப்பில்லாத நாடாக இருக்கிறோம்.
தைவான் நாடு உலக நாடுகளுக்கு எந்த விதத்தில் உதவுகிறது?
நாங்கள் பெருந்தொற்றுக்காலத்தில் உலகநாடுகளுக்கு உதவ தயாராக உள்ளோம். மார்ச் 18 அன்று அரசு வெளியிட்ட குறிப்பில் அமெரிக்க அரசுடன் இணைந்து கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசிகள் மருந்துகளை உருவாக்கப் போவதாக கூறியது. மேலும் அகாடமியா சினிகா கல்வி நிறுவனம் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சோதனைக்கு தேவையான தகவல்களை வழங்குவதாக கூறியுள்ளது. எங்களுடைய நட்பு நாடுகளுடன் வணிக ஒப்பந்தம் செய்த நாடுகளாக இந்தியா போன்ற நாடுகளுடன் பல்வேறு ஆலோசனைகளையும் கருவிகளையும் வழங்க உள்ளோம். மேலும் 17 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) எண்ணிக்கையில் முக கவனசங்களை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியுள்ளோம். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.
உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக தைவான் பங்கேற்க முடியாதது ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறதா?
உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியபணி, உலகிலுள்ள மக்களுக்கு சுகாதாரம் பற்றி அறிவுறுத்தல்களைக் கொடுத்து அவர்களைக் காப்பதே. இதில் தைவானில் வாழும் 23 மில்லியன் மக்களும் உள்ளடங்குவார்கள். ஆனால் அந்நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் சீனாவின் அதிகாரத்திற்கு பணிந்து எங்களை அவர்கள் நாடாக ஏற்பதில்லை. இதனால் அவர்களோடு பங்கேற்ற தொழில்நுட்பரீதியான சந்திப்புகளில் 187 முறை நாங்கள் பங்கேற்றுள்ளோம். ஆனால் அவர்கள் 57 முறைதான் எங்களை அங்கீகரித்துள்ளனர். எங்களுடைய பங்கேற்பை அவர்கள் 70 சதவீதம் நிராகரித்து வருகின்றனர்.
தைவானின் தனிமைப்படுத்தல் மற்றும் நோயுற்றவர்களை கண்காணிப்பது பற்றி விளக்க முடியுமா?
நாங்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறையை பயன்படுத்தி வருகிறோம். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அல்லது படிவங்களை பூர்த்தி செய்து தங்களுடைய விவரங்களை எங்களுக்கு தெரிவிப்பது கட்டாயமாக்கினோம். அவர்கள் எங்கு சென்றாலும் போன்கள் மூலம் நாங்கள் கண்காணிப்போம். அவர்களது முகவரியையும் முன்னமே பெற்றுவிடுவோம். அடுத்து அவர்களுக்கு நோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கும், அவர்கள் வசிக்கும பகுதியில் உள்ள அலுவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தானியங்கி முறையில் செய்தியை விரைந்து அனுப்பிவிடுவோம்.
சீனாவும் தைவானும் மிக அருகே உள்ள நாடுகள் ஆயிற்றே! எப்படி உங்களால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது?
நிலப்பரப்புரீதியாக சீனாவும், தைவானும் மிக நெருங்கி அமைந்தவை. மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பால் தைவான் நாடு கடுமையான பாதிப்பிற்கு உட்படும் என்று கூறினார்கள். நாங்கள் 2003ஆம்ஆண்டு சார்ஸ் நோய் பிரச்னையால் சிறப்பான பாடத்தை கற்றிருந்தோம். அதில் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் அழுத்தத்தால் எங்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டது. எனவே, டிசம்பர் 31 அன்றே, சீனாவின் வூகானிலிருந்து வருபவர்களை நாங்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்த தொடங்கினோம். ஜனவரியில் பாதிப்பு முழுமையாக தெரியாத நிலையில் நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினோம். ஜனவரி 20 அன்றே நாங்கள் பெருந்தொற்று மையக்கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கினோம். அதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விஷயங்களைச் செய்தோம். மேலும், நோய் பரவல், பாதிப்பு பற்றிய உண்மையான செய்திகளை மக்களுக்கு சொன்னோம். வெளிப்படைத்தன்மையாக இருந்தோம். அனைத்து மக்களின் உதவியுடன் பெருந்தொற்று பாதிப்பைக் குறைத்தோம்.
பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இடர்ப்பாடுகளை எப்படி சமாளித்தீர்கள்?
பிப்ரவரி 25ஆம்தேதி, தைவான்
அரசு பெருந்தொற்று பாதிப்பிற்கான சிறப்பு திட்டங்களை அறிவித்தது. இதன்மூலம் சிறுகுறு
தொழில்நிறுவனங்களுக்கு மானிய உதவிகள், பயிற்சி முகாம்கள், தொழில் மேம்பாட்டிற்கான குறைந்த
வட்டி கடன்கள் ஆகியவற்றை அமல்படுத்தினோம். இதன்மூலம் மக்கள் நம்பிக்கை பெற்று தொழில்துறை
மெல்ல வளர்ச்சி பெறும் என்று நம்புகிறோம். மேலும் இதன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால்
சவாலான காலகட்டத்தை கடந்து மேலெழ முடியும் என்று நம்புகிறோம்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 27.4.2020
ஆங்கிலத்தில்: ருத்ரநீல் கோஷ்
கருத்துகள்
கருத்துரையிடுக