தொழில்நுட்பத்தைக் கண்டு நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் பயப்படுகிறார்கள்! - ஏ.பி.ஷா
A.p. Sha |
முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா
தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நீதிமன்றங்கள் இயங்க முடியாத நிலை நிலவுகிறது. இதற்கு மாற்றாக, நீதிமன்றங்களை டிஜிட்டல் முறையில் உருவாக்கும் ஆலோசனைகள் கூறப்பட்டு வருகின்றன. இதைப்பற்றி முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் பேசினோம்.
விர்ச்சுவல் முறையில் நீதிமன்றத்தை இயக்குவதில் தடை என்ன?
இந்தியாவில் பெருந்தொற்று காரணமாக விர்ச்சுவல் முறையில் நீதிமன்றங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பெருந்தொற்று, வரி, போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால் இங்கிலாந்தில் விர்ச்சுவல் முறையில் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. அடுத்து, சிங்கப்பூரில் விசாரணை, உத்தரவுகள் உட்பட அனைத்தும் விர்ச்சுவல் முறையில் இயங்கிவருகின்றன. இவர்கள் இதனை பல்வேறு மாவட்டங்களுக்கு அமலில் இருக்கும்படி அமைத்துள்ளனர்.
ஆன்லைன் நீதிமன்றங்கள் பற்றி ராபர்ட் சஸ்க்கைன்ட் என்ற எழுத்தாளர் 2019ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இந்தியாவில் விர்ச்சுவல் நீதிமன்றத்தை திட்டமிட்டு அமைக்கவேண்டும். மேலும் இவற்றை கட்டமைப்பதற்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. தலைமைநீதிபதி பாப்டே இதனை தன் காலத்தில் நிறைவேற்றினால் அவருடைய பெயர் வரலாற்றில இடம்பிடிக்கும்.
ஏழைகளுக்கு இம்முறையால் என்ன பயன்?
இந்த முறையால் இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தாலும் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க முடியும். மேலும் இதில் பங்கேற்பவர்களுக்கு தேவையில்லாத செலவும் ஏற்படாது. இத்திட்டத்தை சரியானபடி அமைத்தால் நீதிமன்றத்தின் நேரம் குறையும். வழக்குகளைத் தீர்க்கும் வேகம் கூடும். போக்குவரத்து விதிமீறல், காசோலை செல்லாமல் போதல் போன்ற வழக்கு விசாரணைகளை நாம் எளிதாக விர்ச்சுவல் முறையில் தீர்த்துவிடலாம்.
இதனை நிறைய பார் கௌன்சில்கள் எதிரத்து வருகின்றனவே?
தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது ஒரே இரவில் நடந்துவிடாது. அதற்கு நிறைய பணமும, நேரமும் தேவை. நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் தொழில்நுட்பம் சார்ந்த பயத்தை மனத்தில் கொண்டிருக்கின்றனர். இது தவறானது. நாம் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முன்னேறக் கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது கூட அரசு பல்வேறு ஆன்லைன் வழி ஆப்களைப் பற்றிய எச்சரிக்கைகள் விடுத்து வருகிறது. இதன் பொருள், நாம் அவற்றைக் கைவிடுவது அல்ல. குறைகளை களைந்து தொழில்நுட்பத்தை செம்மைபடுத்தி பயன்படுத்த வேண்டும் என்பதே. இத்தொழில்நுட்பங்களின் மூலம் நீதிமன்றம் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் மாறும். அனைவருக்குமான நீதி இதன் மூலம் சாத்தியப்படும் வாய்ப்பு உள்ளது. இந்திய அரசின் என்ஐசி என்ற அமைப்பு நீதிமன்றங்களுக்கான விர்ச்சுவல் அமைப்புகளை தயாரித்து வழங்க உள்ளது. இதில் ஏற்படும் குறைபாடுகளை அந்த நிறுவனமே தீர்த்து வைக்கும்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏப்ரல் 24, 2020
ஆங்கிலத்தில்: பிரதீப் தாக்கூர்.
கருத்துகள்
கருத்துரையிடுக