தந்தையின் கொள்கைக்கும் மகளின் காதலுக்குமான போராட்டம் - ஹலோ குரு பிரேமா கோசமே



A new still from Hello Guru Prema Kosame. #rampothineni ...
pinterest






ஹலோ குரு பிரேமா கோசமே - தெலுங்கு

இயக்குநர் திரினாத ராவ் நாகினா

கதை திரைக்கதை வசனம் - பிரசன்ன குமார்

ஒளிப்பதிவு விஜய் சி சக்ரவர்த்தி

இசை  தேவி ஸ்ரீ பிரசாத்


அப்பாவின் கொள்கையும் மகளின் காதலும் முட்டிக்கொண்டால், அதுதான் குரு பிரேமா கோசமே படம். சஞ்சு கல்லூரி முடித்துவிட்டு ஜாலியாக ஊரைச்சுற்றிக்கொண்டிருக்கிறார். நண்பர்களுக்கு பிரச்னை என்றால் அடிதடி செய்வது. பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து வைப்பது என வாழ்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரின் மாமா, இப்படி சுற்றினால் கஷ்டம். ஏதாவது வேலை தேடிப்போய் செய். அதுதான் உங்க அப்பா அம்மாவுக்கும் பெருமை என்கிறார். இதனால் ஹைதராபாத்திலுள்ள அம்மாவின் கல்லூரி நண்பரான விஷ்வநாத் வீட்டுக்குச் செல்கிறார் சஞ்சு. அங்கு செல்வதற்கு முன்னர் ரயிலில் ஒரு பெண்ணை கிண்டல் செய்து பயமுறுத்திக்கொண்டே வருகிறார் அவர்தான் நண்பரின் மகள் அனு. இருவருக்குமான உறவு முட்டல் மோதலாவே இருக்கிறது. விஷ்வநாத்தின் கதாபாத்திரம்தான் படத்தை நடத்திச் செல்கிறது. ஐ.டி ஆபீசில் ரீத்து என்ற பெண்ணை காதலிக்கிறார். அவர் சாப்பிடும் உணவிற்கு இவர் பணம் கொடுக்கிறார். கேப் புக் செய்கிறார். இப்படி அடிமை போல நடந்துகொண்டால் எந்த பெண்ணுக்கும் காதல் இரண்டாவது நிமிடத்தில் காலிங்பெல் அடிக்கவேண்டுமே? ரீத்துவும் தன் சில பல சந்திப்புகளுக்கு பிறகு காதலைச் சொல்கிறார். ஆனால் சஞ்சுவுக்கு அனு மீதுதான் ஈர்ப்பு. ஆனால் அந்த பெண் இவருக்கு குட்மார்னிங் கூட சொல்வதில்லை. எப்படி இந்த காதல் விளங்கும்? அதற்குள் தன் மகள் அனுவை கார்த்திக் என்ற அமெரிக்கி மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பேசி முடித்துவிடுகிறார் விஷ்வநாத். இதனால் கடுமையாக ஏமாற்றத்திற்குள்ளா கிறார் சஞ்சு. அவர் அனுவிடம் தன் காதலை சொன்னாரா? அப்படி சொ ன்னாலும் நிச்சயம் செய்த கல்யாணம் நடக்காமல் விஷ்வநாத் நிறுத்துவாரா என்ற கேள்விகளுக்கு உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இறுதிக்காட்சியில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஆஹா

படத்தில் எப்போதும் எனர்ஜெடிக் ஸ்டார் ராம், முழு உற்சாகமாக வலம் வருகிறார். பிரணிதாவை கேரிங் செய்தே காதலில் விழ வைக்கிறார். பிரணிதா காதல் சொல்லும்போதுதான் தன் மனதிலுள்ள அனு மீதான காதலை உணர்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறார். இவரையும் மிஞ்சி நடிகன்யா என்று சொல்ல வைக்குமளவு நடித்திருப்பவர் பிரகாஷ்ராஜ்.. அனுவின் அப்பா கதாபாத்திரத்தில் தவிப்பும், திகைப்பும், நெகிழ்ச்சியும்  கண்களில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார். மகளின் பாசத்தில் நெகிழ்வதும், பின்னர். இறுதிக்காட்சியில் மகள் தன்னை அவமானப்படுத்திவிட்டு காதலனோடு சென்று விடுவாளோ என தூங்காமல் கலங்கும் காட்சியிலும் அசத்துகிறார்.

ஐயையோ

அனு என்கிற அனுபமாவின் பாத்திரம் அடித்தளம் இல்லாத பாத்திரம் போல எரிச்சலூட்டுகிறது. சஞ்சு கொடுக்கும் எந்த சிக்னலுக்கும் பிஎஸ்என்எல் சிம்மாக பதிலே இருப்பதில்லை. ஆனால் இறுதிக்காட்சியில் ரெண்டு நிமிஷம் பேசிக்கொள்கிறேன் என்று தன் காதலை சொல்லி, என் காதலை நீ புரிஞ்சுக்கவே இல்லையா? என்பது பொருந்தவில்லை. தன் அப்பாவை காதலிக்கும் பெண் திடீரென தன்  வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்று முடிவெடுப்பது அப்பெண் முதிர்ச்சியானவளில்லை என்றே காட்டுகிறது. இந்த பெண்ணுக்காக காதல்பாட்டுகளை பாடி சஞ்சு ஆடுகிறாரா என ஆயாசம் ஆகிறது.

குடும்பத்தின் மதிப்பு, உறவுகள், நட்பு, உறவில் நம்பிக்கை. காதல் என அனைத்தையும்  நேர்மறையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் படத்தை தடுமாற்றமின்றி பார்க்க முடிகிறது. படத்தின் இயக்குநர் வேறு என்ன படங்களை எடுத்திருக்கிறார் என்றும் பார்க்க ஆர்வம் ஏற்படுகிறது.

உணர்ச்சிகளின் போராட்டம்!

கோமாளிமேடை டீம்


கருத்துகள்