டிஜிட்டல் உலகம்தான் எதிர்காலமாக இருக்கும்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

Human, Observer, Exhibition, Photomontage, Faces
pixabay



அன்புத் தோழர் ராமுவுக்கு வணக்கம்.


நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த ஆண்டு முழுவதும் எனது கண்ணில் பரிசுத்த ஆவி இயேசுவின் சுவரொட்டிகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதில் உள்ள தமிழ் வார்த்தைகள் என்னை வசீகரப்படுத்தி வருகின்றன. தமிழில் இயேசு பற்றி எழுதும் எழுத்துகள் படிக்க நன்றாக இருக்கின்றன. தினசரி எனது காலை என்பது ஐந்து மணிக்கு தொடங்குகிறது. காலை எழுந்து குளித்துவிட்டு 5.50க்கு டீ குடிப்பேன். சேட்டா ஜெகன் கன் போல நான்கு மணிக்கே கடையை திறந்துவிடுவார். அவர் போடும் டீ நன்றாக இருக்கும். பிறகு ஆறுமணிக்கு நடை திறந்தால் மாதவ பெருமாள் கோவிலுக்கு போய்விடுவேன். அங்கே உட்கார்ந்து அன்றைக்கு எழுத வேண்டிய விஷயங்களை திட்டமிட்டுக் கொள்வேன். பிறகு எழுந்து இட்லி வாங்கிக்கொண்டு ஆபீஸ் சென்றால் அடுத்து அறை திரும்ப இரவு எட்டுமணி ஆகும்.


அறை நண்பர்களில் மூத்தவர்கள் நானும் விவேக்கும்தான். இயல்பாகவே ஏனோ கதிர்வீச்சுக்கு கட்டப்பட்ட சுவர் போல எங்களுக்கு இடையில் தடை இருக்கிறது. கடக்கவே முடியவில்லை. அதுவும் தவிர வெவ்வேறு வட்டார வழக்கு ஆட்கள் வேறு. குழப்பத்திற்கு கேட்கவா வேணும்? இயல்பாக பேசினாலே நான் பிறரை நக்கலடித்து விடுகிறேன் என புகார்கள் வருகின்றன. என்ன செய்வது? காலசர்ப்பம் விடாது தொடர்ந்து துரத்துகிறது.


வட்டாரத்திற்கு கள ஆய்வு என்று சொல்லி காதல் ஆய்வுகளை நீங்கள் செய்துகொண்டிருப்பதாக வதந்தி. என்னமோ தெரியவில்லை. இட்லி, கல்தோசை, சப்பாத்தி தவிர வேறு எதுவும் என் கனவில் கூட வருவதில்லை. என்பது துர்பாக்கியம்தான். ஆண்டவர் என்னை சொஸ்தப்படுத்துவார் என நம்புகிறேன்.


நீங்கள் ஏதேனும் புதிய நூல்களை வாசித்தீர்களா? வயிறு புடைக்க சாப்பிட்டு தூங்கத்தான் நூல்களை தேடுகிறீர்களா என்று தெரியவில்லை. ஆம்லெட் சாப்பிடும்போது மிளகு சேர்த்து சாப்பிடுங்கள். சளி பிடிக்காது. பாருங்கள் தினகரன் துண்டு துணுக்கெல்லாம் உங்களூக்கு கடிதம் எழுதும்போது வந்து விழுந்து தொலைக்கிறது?


நன்றி


.அன்பரசு


10.2.2018



**************************************************

அன்புத் தோழருக்கு, வணக்கம். நலமாக இருக்க இறையை தொழுகிறேன். 


இக்கடிதம் உங்களை வந்தடையும்போது, நம்மவர் கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கியிருப்பார். அவரின் அத்யந்த ரசிகரான நீங்களும் கொள்கைகளைப் படித்து குஷியாகி இருப்பீர்கள். விகடன் கமல்ஹாசனுக்கான சிறப்பான புரோமோ விஷயங்களைச் செய்து வருகிறது. புத்தகமும் விற்கவேண்டும். அதையும் நான்கு பேர் வாங்கவேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறது.


ஸ்டீவ்ஜாப்ஸ் வழி என்ற ஜெய்கோ பதிப்பக நூலைப் படித்து வருகிறேன். சுயமுன்னேற்ற நூல் அல்ல. ஸ்டீவ் எப்படி ஆப்பிள் கம்பெனியை உருவாக்கினார் என்பதை எழுத்தாளர் ஜெ.எலியட் எழுதியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் இன்றும் சந்தையில் நிற்பதற்கான விதைகளை தூவியர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான். எப்படி சாதித்தார் என்பதை நூல் பேசுகிறது.


இரு நாட்களுக்கு முன்பாக திருவண்ணாமலை சென்றேன். நிம்மதி தேடித்தான். கந்தாஸ்ரமம் வரை மலை ஏற வைத்துவிட்டார்கள் ஆருயிர் நண்பர்கள். இத்தனைக்கும் வெளிநாட்டுக்காரர் ஒருத்தருக்கு எடுபிடியாக. நான் அங்கு போட்டுச்சென்றது சட்டையும் பேண்டும். ஆபீஸ் போவது போலவே போய் மலை ஏறி வந்தேன். எதற்கு அங்கு சென்றோம் என்று ஆகிவிட்டது. உடல் கடுமையான வலியால் துடித்துவிட்டது. இவர்களுக்கு வெள்ளைக்காரனால் காரியம் ஆகணும் என்றால் அவர்களை நேரடியாக அணுகவேண்டும். நம்மைக் கூட்டிக் கொண்டுபோய் சாகடித்தால் எப்படி?


அலுவலகத்தில் பணிபுரியும் ஓவியம் மற்றுல் லே=அவுட் நண்பர் கதிரவன் விரைவில் இந்து தமிழ் நிறுவனத்திற்கு பணி மாறவிருக்கிறார். கடுமையான உழைப்பாளி. ஆனால் இங்கு அவரை சரியாக பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அவர் தன்னுடைய பயிற்சி காலத்தை தினகரன் இன்ஸ்டிடியூட்டில் முடித்துவிட்டு இந்துவுக்கு அப்ளை செய்து போய்விட்டார். அரசியல் பொருளாதார நூலில் ஆடம் ஸ்மித்தின் செல்வம் வரை படித்துள்ளேன். இன்னும் இருநூறு பக்கங்கள் முழுதாக உள்ளன. அதை விரைவில் படித்துவிடுவேன்.


குங்குமம் இதழில் கட்டுரைகளை எழுதிக்கொடுத்து விட்டு நின்றுவிடுகிறேன். இப்போது அதை சிலர் நிறைய திருத்தங்கள் செய்கின்றனர். பின்னர், கட்டுரை வெளியாகிறது. திருத்த திருத்த செம்மை என்கிறார் எழுத்தாளர் நஞ்சுண்டன். அவரை நம்புகிறேன்.


நன்றி!


.அன்பரசு


22.2.2018

***********************************



அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு, வணக்கம். நலமாக இருக்க வாழ்த்துகிறேன்.


திருமணம் சார்ந்த விஷயங்களை வேகமாக செய்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். விகடனில் கமல் எழுதிய தொடர், 22 அத்தியாயங்களோடு முடிவுக்கு வந்துவிட்டது.


தான் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார் என்பதோடு அதற்கான வாய்ப்பையும் விகடன் பயன்படுத்திக்கொண்டது. கமலின் லோகோ பார்த்திருப்பீர்கள். நான்கூட ஏதாவது வங்கி தொடங்கப்போகிறாரோ என்று நினைத்தேன். கூட்டுறவு வங்கிகளில் இப்படித்தானே லோகோ வைத்திருப்பார்கள். தென்னிந்தியா நான்கு வேறுபட்ட மாநிலங்களைக் கொண்டது. அனைத்தையும ஒருங்கிணைத்து பயன் பெற்றுவிட முடியும் என்று தோன்றவில்லை.


அவரின் சக நடிகர்களும் இயக்குநர் குழுவுமான நாசர், சந்தானபாரதி, கோவை சரளா ஆகியோர் கட்சியில் இணைவார்கள். ஆனந்த விகடன் படித்தீர்களா? ஷங்கர் பாபு எழுதிய ருசி திரில்லர் கதையைப் படித்தேன். நன்றாக இருந்தது. வேள்பாரி என்ற தொடர்கதையைப் படித்து வருகிறேன். நாவலாக இந்த நூல் பெரும் சாதனை படைக்கும். சு.வெங்கடேசன் இடது சாரி முகாம்காரர். ஆனால் பிரசார வாடை வராமல் அவரால் நன்றாக எழுத முடிகிறது. ஆச்சரியம்தான்


டிஜிட்டல் ஊடகங்கள் அனைத்து விதிகளையும் புறந்தள்ளி வேகமாக வளர்ந்து வருகிறது. ரெடி பிளேயர் ஒன் போல உலகம் மாறினாலும் ஆச்சரியமில்லை. வன விலங்குகள், பிக்சார், ப்ளூஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்களின் படங்கள் பின்னாளில் விரும்பக்கூடியவையாக இருக்கலாம். தியேட்டர்களில் பல்வேறு புது முயற்சிகள் இல்லை. எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. மற்றொரு நிலையில் வெப்சீரிஸ்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. சினிமாவுக்கு மாற்றாக இதனை முன்நிறுத்துவது இனி தொடங்கும். மேலும் சினிமா வெளியீட்டையும் இணையத்தில் செய்யலாம்.


நன்றி!


.அன்பரசு


23.2.2018

********************************************************************


அன்புள்ள அன்பரசுவுக்கு, வணக்கம்.


நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் வெண்டைக்காய், பீர்க்கங்காய்களை விட்டு நல்லி எலும்பை நறுக்கென கடித்து தின்றால் நன்றாக இருக்கும். நீங்கள் சாப்பிட மறுக்கிறீர்கள். சரி விடுங்கள். நான் உங்களுக்காக அர்பணித்து பீஃப கறி வாங்கி சாப்பிடுகிறேன்.


பத்திரிக்கைகாரனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா என்று தெரியவில்லை. நீங்கள் உதவி ஆசிரியர் அல்லவா? அதனால்தான் இப்படி. நிருபராக இருந்தால் தினசரி நிறையப் பேர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். நீங்கள் விரும்பும் பணியை செய்கிறீர்கள் என்பதே பெரிய விஷயம். எத்தனை பேருக்கு இந்த விஷயம் அமைகிறது. சொல்லுங்கள். ஆச்சரியம்தான். மனிதர்களோடு ஒத்துப்போவதுதான் இருப்பதிலேயே கடினமானது. அதில் மட்டும் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டால் முக்கியமான பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம்.


இயேசு மொழிகள் இயல்பாகவே துன்பத்தில் சிக்கலில் தவிக்கும் மனத்தை ஆற்றுப்படுத்துவதற்கானது. அதனால்தான் அதன் சுவர்களில் எழுதும வாக்கியங்கள் நம்மை அதைக் கடந்து போகும் சில நொடிகளில் வசப்படுத்தி விடுகிறது. சிலுவைப்போர் என்று பிற மதங்களை, கடவுள் மறுப்பாளர்கள், அறிவுச்செல்வங்களை அழித்த முட்டாள்கள் அவர்கள். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பை பொறுத்தவரையில் சிறப்பாக வெற்றி பெற்றுவிட்டனர.


புள்ளியியலில் நான் கஷ்டப்பட்டு பணியாற்றுவதை நீங்கள் ஏதோ நான் பிளேபாய் பத்திரிகை படித்துக்கொண்டு ஜாலி செய்வதைப் போல நினைத்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். பெண்கள் இயல்பாகவே என்னைத் தேடி வந்து பேசுகிறார்கள். நான் என்ன செய்கிறது? அறைக்கு கூட்டிவந்து கைமா செய்யலாம் என்றால் என் அறையில் திருமணமான ஒழுக்கவாதி வேறு இருக்கிறார். துயரம் எப்படி பாருங்கள். நான் அவர்களை எங்கு சந்திக்கலாம் என்று கேட்கலாமா என்று யோசிப்பதற்கு முன்னரே ஐயங்கார் பேக்கரிக்கு போகலாமா என்கிறார்கள் பெண்கள். மன வேகம் பாருங்கள். இவர்கள் படுக்கைக்கும் சரிப்பட்டு வருவார்கள்.


கமல் பற்றி நீங்கள் எப்போதும் அவநம்பிக்கையாக பேசி வந்திருக்கிறீர்கள். நான் அவரின் படத்தை பிடித்துப்போய் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். நான் அவரைப் பின்பற்றவில்லை. அதற்கு அவசியமில்லை. எனக்கு திராவிட கழகம், திமுக இருக்கிறது. இவரைப் பின்பற்றும் துரதிர்ஷ்டம் எனக்கு இல்லை. அனைத்தும் டிஜிட்டல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதில் நிறைய போலிச்செய்திகள் உள்ளன. அவற்றை எப்படி சரி செய்வது, அதில் உள்ள தவறுகளை யார் திருத்துவது? திரைப்படங்கள் சார்ந்து இணைய ஊடக நிறுவனங்களும், தியேட்டர்காரர்களுக்கும் முட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. படம் வெளியானபிறகு குறிப்பிட சில நாட்களுக்குப் பிறகு என படத்தை இணையத்தில் வெளியிட நிபந்தனை விதிப்பார்கள். நன்றாக சாப்பிடுங்கள் அன்பு. பார்ப்போம்.


நன்றி!


.ராமமூர்த்தி

26.2.18











கருத்துகள்