வைரஸ்களை கண்டுபிடிப்பதற்கு பத்து ஆண்டுகள் செலவிடவேண்டும்!- டேவிட் க்வாமென்
வைரஸ்களை கண்டுபிடிப்பது கடினமும், அதிக செலவுபிடிக்க கூடியதுமாகும்!
டேவிட் க்வாமென், அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்
டேவிட் க்வாமென், பல்வேறு மையப்பொருட்களில் பதினேழுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நேஷனல் ஜியோகிராபி இதழில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வருகிறார். அறிவியல் மற்றும் பயணம் தொடர்பான நூல்களை அதிகம் எழுதியுள்ளார். அவரிடம் பேசினோம்
2012ஆம் ஆண்டு நீங்கள் எழுதிய ஸ்பில்ஓவர் என்ற நூலில், அடுத்து மனிதர்களை வைரஸ் தாக்கி லட்சக்கணக்கானவர்களைக் கொல்லும். இது விலங்குகள் மூலம் பரவும் என்று எழுதியிருந்தீர்கள். எப்படி கொரோனா பாதிப்பை முன்னமே கணித்தீர்கள்?
நான் பல ஆண்டுகளாக விலங்குகளை ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதனை ஆய்வு செய்யும் மருத்துவர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகிறேன். விலங்குகளின் உடலில் ஏராளமான வைரஸ்கள் உண்டு. அவற்றில், சில தனித்துவமானவையும் உள்ளடங்கும். விலங்குகளின் வாழிடத்தை அழிப்பது. அவற்றை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது, அவற்றைக் கொன்று உணவாக்கி தின்பது ஆகியவற்றால் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது. லட்சம் முதல் கோடிக்கணக்கான மக்களை அது பலிவாங்குகிறது. நான் நூலில் எழுதியது ஆராய்ச்சி அடிப்படையில்தான்.
நீங்கள் ஆராய்ச்சிக்காக சீனாவில் உள்ள கால்நடை சந்தைக்கு போய் வந்திருக்கிறீர்கள். அங்குள்ள விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவது சாத்தியம் என்கிறீர்களா?
அங்கு நாய், பூனை, கோழி, எலி,பாம்பு, தவளை, பூச்சிகள் என பல்வேறு காட்டு விலங்குகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நீங்கள் உயிரோடும் வாங்கலாம் அல்லது கறியை மட்டும் கூட வாங்கிக்கொண்டு செல்லலாம். ரத்தமும், அவற்றை வெட்டி சுத்தப்படுத்திய நீருமாக அந்த இடமே ரத்தக்களறி நடந்தது போல கிடந்தது. அங்குள்ள சுகாதாரத்திற்கு வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும்.
நோய்கள் பற்றிய வரலாற்றில் ஏராளமான மனித உயிர்கள் தொற்று நோய்களால பறிபோயுள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு என்று ஏதேனும் உண்டா?
இயற்கையாக பல்வேறு தொற்றுநோய்கள் பரவி குறிப்பிட்ட விலங்கு இனத்தை அல்லது மனிதர்களை அழித்துள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு கேட்கிறீர்கள். அப்படியொன்று இருக்கிறதா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. மக்கள் தம் நுகர்வை குறைத்துக்கொள்ளவேண்டும். அரசுகள், நாட்டு மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதை தற்காலிக தீர்வாக நான் கூறுவேன். என்னுடைய நாட்டில் கூட உயிரியல் ரீதியான பரிணாம வளர்ச்சியை மக்கள் அனைவரும் ஏற்கவில்லை. அவர்கள் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், அதற்கு மருத்துவர் ஆன்டிபயாட்டிக் மருந்தைப் பயன்படுத்துவார். அம்மருந்து உருவாக்கப்பட்டதை உணர்ர்ந்தாலே அவர்களுக்கு நுண்ணுயிரிகளின் வளர்ச்சி புரிபட்டுவிடும்.
கோவிட் -19 பாதிப்பு உலகமெங்கும் உள்ளது. இனி அடுத்த வைரஸ் பாதிப்பு நம்மை பாதிக்காதபடி எப்படி தயாராவது?
ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் என திட்டமிட்டு வைரஸ்களை கண்டறிவதற்கும், அதனை குணப்படுத்துவதற்குமான மருந்துகளை உலக நாடுகள் உருவாக்க முடியும். இதன் விளைவாக கோவிட் -19 போன்ற இன்னொரு நோய் நம்மைத் தாக்கினாலும் விரைவாக நம்மால் மீண்டுவிட முடியும்.
நன்றி: ஃபிரன்ட்லைன், விகார் அஹ்மத் சயீத்
கருத்துகள்
கருத்துரையிடுக