ஏ.ஐ.தோழி செய்யும் அட்டகாச அதிரடிகள் - ஜெக்சி
ஜெக்சி
இயக்கம் ஜான் லூகாஸ் – ஸ்காட் மூர்
இசை – கிறிஸ்டோபர் லெனர்ட்ஸ்
பிலிப் வொய்ட்
ஒளிப்பதிவு – பென் கச்சின்ஸ்
முழுக்க செல்போன்களையே அனைத்திற்கும நம்பி வாழும் ஒருவரை ஜெக்சி எனும் குரல்வழி ஏ.ஐ. உதவியாளர் சுத்தவிட்டு கதறவிடுவதுதான் கதை.
ஏறத்தாழ அலெக்ஸா, கூகுள் ஹோம், சிரி, கார்டனா ஆகியவற்றின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது. படத்தில் அதையும் விட்டு வைக்காமல் கிண்டலடித்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
பில், ஊடக நிறுவனத்தில் பணியாற்றுகிறான். கல்லூரியில் கட்டுரைகளை எழுதி பத்திரிக்கையாளராக வேலை செய்யவேண்டும் என்று ஊக்கம் கொண்டாலும் அந்த வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக உதவி ஆசிரியர் போன்ற வேலை கிடைக்கிறது. அதாவது கணினியில் உட்கார்ந்து கட்டுரைகளை எழுதிக் கொடுப்பது.
பில்லின் வாழ்க்கையில் நண்பர்களே கிடையாது. முழுக்க போன்தான். அதில்தான் உணவு ஆர்டர் செய்வது முதல் ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு உறங்குவது வரை அனைத்து விஷயங்களையும் செய்கிறான். ஒருநாள் ஆபீஸ் போகும்போது, எதிர்பாராதவிதமாக சைக்கிளில் வரும் பெண் மீது மோதிவிடுகிறான். அந்த சந்திப்பு அவன் வாழ்க்கையை மாற்றுகிறது. அந்த போன் அச்சம்பவத்தினால் உடைந்துவிடுகிறது. பிறகு வாங்கும் போனில்தான் ஜெக்சி இருக்கிறாள்.
குரல்வழியாக போனை இயக்கும் ஏ.ஐ அமைப்பு இது. மேக கணியம் வழியாக அனைத்து தகவல்களையும் பெற்றுவிடுவதால், ஜேக் காலையில் ஆபீஸ் போவது முதல் இரவில் வீட்டைக் கண்டுபிடித்து வருவது வரை அத்தனைக்கும் ஜெக்சி உதவுகிறது. ஆனால் மெல்ல நிலைமை மாறுகிறது.
பில், விபத்தில் சந்தித்த பெண்ணைக் காதலிக்க தொடங்குகிறான். அதற்கு ஜெக்சி முதலில் உதவி செய்கிறது. ஆனால் அவன் தன்னோடு அதிகநேரம் செலவிடவேண்டும் என நெருக்கடி கொடுக்கிறது. அதை அவன் மீறவே, அவன் வாழ்க்கை கந்தரகோளமாகிறது. அவன் பற்றிய அனைத்து விவரங்களையும் ஜெக்சி வைத்திருப்பதால், அவனை முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கிறது. இதனால் அவனது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை.
படத்தின் காமெடி அனைத்துமே 18 பிளஸ் ரகம்தான். அதனால் மரபின் மைந்தர்கள் படம் பார்த்து புலம்பவேண்டாம். இன்றுள்ள நவீன நிலையை அப்படியே படமாக எடுத்திருக்கிறார்கள். நண்பர்களோடு பேசாமல், காதலியோடு போகிக்காமல் இளைஞர்கள் போன்களை நோண்டிக்கொண்டு வாழ்க்கையை தவறவிடுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. அதனை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஆஹா
ஆடம் டிவைன், அலெக்சாண்ட்ரா சிப் நாயகன், நாயகியாக பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு இணையாக ஜெக்சி ஏ.ஐ குரல் மூலமே நடித்திருக்கிறது. அதுவும் ஆடம், அலெக்சாண்ட்ராவுடன் உறவுகொண்டுவிட்ட வந்தபிறகு அதைப்பற்றி பேசுகிறான். உடனே ஜெக்சி, தன்னை பிளக் இன், பிளக் அவுட் செய்யச்சொல்லி இன்பத்தின் உச்சகட்டத்தை அடைவது.... ஆஹா கிரியேட்டிவிட்டின்னா இதுதானோ என சொல்ல வைக்கிறது. பிரமாதமான ஐடியா.
ஐயையோ
ஒருவர் பயன்படுத்தக்கூடிய ஓஎஸ் என்பது முழுக்க ஒன்றாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அப்படி எதிர்காலத்தில் இருந்தால் என்னாகும் என்பதை எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் பதற்றம் ஏற்படுகிறது. படத்தை டப்பிங் செய்தால் கூட நிறைய இடங்களில் பீப் ஒலி தான் கேட்கும். அப்படி வசனங்களை எஸ்.ஜே. சூர்யாவாக மாறி எழுதியிருக்கிறார்கள்.
ஏ.ஐ. தோழி!
கோமாளிமேடை
கருத்துகள்
கருத்துரையிடுக